

ஒரு குருவியின் அவலம்
சில வருடங்களுக்கு முன்பு, ஒரு நாள் பிற்பகலில் என் அறை ஜன்னலின் ஊடாகக் குருவியொன்று உள்ளே பறந்துவந்தது. சுழன்று கொண்டிருந்த மின்விசிறியில் அதனுடைய மார்பு பட்டதும் குருவி சிதறி விழுந்தது. ஜன்னல் கண்ணாடியில்பட்டு சில நிமிடங்கள் ஒட்டிக் கொண்டிருந்தது. குருவியின் நெஞ்சிலிருந்து வடிந்த ரத்தம் கண்ணாடியில் வழிந்தது. இன்று எனது ரத்தம் இந்தக் காகிதத்தில் வழியட்டும். நான் அந்த ரத்தத்தால் எழுதுவேன். எதிர்காலச்சுமை இல்லாத ஒருவரால் மட்டுமே எழுதக்கூடிய விதத்தில் ஒவ்வொரு வார்த்தையாகக் கோர்த்து எழுதுவேன். இதைக் கவிதையென்று அழைக்க விரும்புகிறேன். எனக்குள் அழகான ஓர் எழுச்சியை உருவாக்கி, மேற்பரப்புக்கு மிதந்துவந்து ஒப்பீட்டளவில் உரைநடை என்கிற வலுவான வடிவத்தில் இணையும்போது, வார்த்தைகள் தமது இசையைத் துறந்தபோதிலும் இதைக் கவிதையென்று அழைக்கவே விரும்புகிறேன். இதை எழுதுவதற்கான ஆற்றலைப் பெற வேண்டுமென்று எல்லா நேரத்திலும் நான் ஆசைப்பட்டதுண்டு. ஆனால், கவிதை நமக்காகப் பக்குவத்தை அடைவதில்லை. கவிதைக்கான பக்குவத்தை நாம் பெற வேண்டியிருக்கிறது.

கடும் நோயால் பாதிக்கப்பட்டு மூன்றாவது முறையாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறேன். இது அறை எண் 565. கடந்தமுறை நோயுற்றபோதும் இதே அறையில்தான் இருந்தேன். ஆகவே இது வீட்டிற்கான மறுவருகையாகும். இம்முறை மருத்துவர்கள் என்மீது ஆழ்ந்த தயவு காட்டுகிறார்கள். அவர்கள் என் கையைப் பற்றி என்னருகில் அமர்கிறார்கள். அனாதைக் குழந்தை இறப்பதற்காக வீட்டுக்குத் திரும்பி வந்திருக்கிறது. கதவின்மீது ‘வருகையாளர்களுக்கு அனுமதி இல்லை’ என்ற பலகை மாட்டப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை நடக்கவிருக்கும் அடுத்த அறுவைசிகிச்சைக்கு என்னை ஆயத்தப்படுத்துகிறார்கள். கடந்த வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட அறுவைசிகிச்சையுடன் ஒப்பிடும்போது இது சாதாரணமானது. வருகையாளர்கள் என் படுக்கையின் அருகில் நாற்காலியை இழுத்துப்போட்டு அமரும்போது அவர்களின் வியர்வை நெடியும் சுவாசத்தின் துர்நாற்றமும் என் பக்கமாக வீசியது. இந்த வாடைகள் என்னைச் சங்கடப்படுத்துகின்றன. நான் அவர்களைப் பார்க்கும்போதெல்லாம் அவர்களுடைய உதடுகளின் கேளிக்கை நிறைந்த புன்னகைகள் விரிகின்றன. இத்தகைய காட்சிகளைத் தவிர்ப்பதற்காகவே பெரும்பாலும் நான் மூக்குக்கண்ணாடியைக் கழற்றிவைத்துப் படுப்பது வழக்கம். என் சின்ன மகன் என்னைப் பார்க்க வரும்போது மட்டும் மூக்குக்கண்ணாடியை அணிந்துகொள்வேன். அவன் அடங்கியிருக்கமாட்டான். செவிலியர்களைத் தொந்தரவு செய்வான். பிஸ்கெட் துண்டுகளைத் தரையில் சிதறுவான். நான் ஏன் அவனுடன் வீட்டுக்கு வருவதில்லை என்று விசாரிப்பான். எனது மருத்துவர் என்னைப் பரிசோதிக்க வரும்போதும் மூக்குக் கண்ணாடியை அணிந்துகொள்வேன். நான் அவர் மீது அதீத காதல் கொண்டிருந்தேன். அவருக்கு முப்பத்து ஐந்து வயது இருக்கும். இருப்பினும் அதிக வயதானவராகத் தோற்றமளிப்பார்; வழுக்கை உண்டு. அவர் சொல்வார்: ‘என் முகம் அழகாக இல்லை.’ நான் அவரது முகத்தைப் பார்த்தேன். மறுக்கும் தொனியில் தலையை அசைத்தேன். அதுவொரு சின்னக்குழந்தையின் முகம். அழப்போகும் ஒரு சிறுவனின் முகம். நான் முகத்தைப் பார்க்கும்போது தாய்ப்பால் சுரப்பதற்கான உக்கிரமான வாஞ்சையால் எனது முலைகள் வலிக்கின்றன. அவரது தாயாக வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். ‘உன் முகம் என்னுள் ஓர் ஆவியாக நிற்கிறது’ என்றேன். பென்சன் அன்ட் எட்ஜஸ் சிகரெட்டின் சாம்பல் தரையில் படர்கிறது. அவரது நகம் நேர்த்தியாக வெட்டப்படவில்லை. அவரது தடிமனான விரல்களுக்குச் சிகரெட்டின் நாற்றம். வெகுநேரம் அவரது கைகளை வெறிக்கும்போது தனக்கு ஜலதோஷம் இருப்பதாகச் சொல்லி முகத்தைத் திருப்பி அமர்கிறார்.
இந்த அறைக்குப் பச்சை வர்ணம் பூசப்பட்டுள்ளது. இதுவொரு நீர்த்தொட்டியைப் போன்றிருக்கிறது. ஏர்கண்டிஷனர் ஒரு நீர்உருளையைப்போல முனகுகிறது. சிலசமயம் நண்பர்கள் எனக்குப் பூக்களைக் கொடுத்து அனுப்புவதுண்டு. எனது செவிலி ஜாடியில் வைக்கப்பட்ட ரோஜாப்பூக்களைக் குளியலறையில் பத்திரப்படுத்துகிறாள். ஜாடியில் செருகப்பட்ட ரோஜாப்பூக்கள் எனக்கு ஜலதோஷத்தை உண்டாக்கும். நான் மிகவும் விரும்பும் ரோஜாப்பூக்களை யாரும் எனக்குக் கொடுத்து அனுப்புவதில்லை. ஒருவேளை இது ரோஜாப்பூக்கள் பூக்கும் பருவமாக இருக்காது. எனக்கு ரோஜாப்பூக்கள் கிடைக்குமானால் நான் தலையணைமேல் ரோஜா இதழ்களைத் தூவுவேன்.
கடந்தமுறை கல்லீரலும் நுரையீரலும் பாதிக்கப்பட்டிருந்தன. இம்முறை இதயமும் கர்ப்பப்பையும் பாதிக்கப்பட்டுள்ளன. நான் நிறையக் குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும். நான் பலன்தரும் நிலமாக இருந்தேன். எனது கர்ப்பப்பை தரிசாக விடப்பட்ட காரணத்தால் பாலைவனத்தில் கள்ளிச்செடிகள் முளைப்பதைப் போல என் கர்ப்பப்பையில் நரம்புகளும் தசைகளும் பின்னிப்பிணைந்து பிண்டங்கள் முளைத்தன. மாமிசத்தைக் கொறித்துத் தின்னும் செடிகளைப் போன்றிருந்த, அவை எனது ரத்தத்தை உறிஞ்சிக் கொழுத்தபோது எடை குறைந்து வெளிறிப்போனேன். கடந்த மூன்று மாதங்களாக எனக்கு மூச்சுத்திணறல் உள்ளது. அதிகாலையில் லலிதா ஸஹஸ்ர நாமத்தைப் பிரார்த்திக்கும்போது வேர்த்து மூச்சுமுட்டும்.
இங்கு எல்லோரும் என்னிடம் பரிவு காட்டுகிறார்கள். அவர்கள் தினமும் எனக்கு குளுக்கோஸ் தருகிறார்கள். உலகத்தில் மிகப்பெரிய அனாதைக்குச் செல்வாக்கு மிகுந்த மரணத்தைத் தர அவர்கள் தயாராக இருக்கிறார்கள். நான் எப்போதும் அனாதையாக இருந்தேன். ஆன்மீக ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் அனாதையாக இருந்தேன். என் கணவரை ஆழமாக நேசித்தபோதிலும் அவரால் என்னை நேசிக்க இயலவில்லை. நேசிக்கத் தெரிந்த ஒரு ஆண்மகனை நான் இன்றுவரை கண்டதில்லை. என் கணவர் உடலுறவு கொள்ளும் போது, உடலுறவின் முடிவில் அவர் தனது கைவளையத்திற்குள் என்னைப் பாதுகாக்க வேண்டுமென்று விரும்பினேன். அவர் எனது முகத்தை வருடவோ எனது வயிற்றில் கைவைக்கவோ செய்திருந்தால் ஒவ்வொரு உடலுறவுக்குப் பின்பும் நான் அனுபவிக்க நேர்ந்த மிதமிஞ்சிய அசட்டை உணர்வு மேலும் அதிகரித்திருக்காது. ஒரு பெண் தனது முதல் கணவரை உதறிவிட்டு வேறோர் ஆணின் படுக்கைக்குச் செல்லும்போது அது முட்டாள்தனமாகவோ ஒழுங்கீனமாகவோ ஆகிவிடாது. அது குரூரமானது. அவள் அவமானப்படுத்தப்பட்டவள்; காயம்பட்டவள்; அவளுக்கு ஆறுதல் அவசியம். ஒருபோதும் என் கணவரின் முன்பு எனக்குக் காமவேட்கை எழுந்ததில்லை. அவரெதிரில் என் காமவேட்கை எங்கோ போய் ஒளிந்துகொள்கிறது. அறிவாற்றல் மிகுந்த எனது காதலர் என்னிடம் எப்போதும் பித்துப்பிடித்த பாலியல் மோகத்தை எழுப்புகிறார். அவர் என்னைத் திருப்திப்படுத்தியபோதிலும் அவர் திருப்தியடைவதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன். ஒருமுறை உடலுறவுக்குப் பிறகு நான் அரைத்தூக்கத்தில் இருந்தபோது என் கன்னங்களை அழுத்திக்கொண்டிருந்த அவரது உள்ளங்கை சட்டென்று மென்மையடைவதாக எனக்குத் தோன்றியது. அவர் ரகசியமாக மெல்ல எனது பெயரை உச்சரிப்பதைக் கேட்டேன்.
நான் விழித்திருந்தால் அவர் அத்தனை கருணை உள்ளவராக இருந்திருக்கமாட்டார். அதுதான் எனது வாழ்க்கையின் உன்னத நிமிடம். அந்நிமிடத்தில் நான் அனாதை இல்லையென்று எனக்குத் தோன்றியது. ஆனால், அவர் என்னைக் காதலிக்கவில்லை. அவருக்குக் காதல் மீது நம்பிக்கை கிடையாது. ‘நாம் உணர்ச்சிவசப்படக் கூடாது’ என்றார். அவரை நேசிப்பது பார்வையற்றவனுக்கு நூறு ரூபாயைக் கொடுப்பதைப் போன்றதாகும். அவனுக்கு அதனுடைய மதிப்பு தெரியாது. நான் முட்டாளென்று விளங்கியபோதிலும் நூறு ரூபாய்த் தாளைக் கொடுப்பதில் மகிழ்ச்சியடைந்தேன். அவருக்கு மென்மையான, ரோமம் இல்லாத உடம்பும் ஒரு காட்டெருமையின் வலிமையும் இருந்தது. அவரது வியர்வை எனது வியர்வையைப் போல நறுமணம் கொண்டதாக இருந்தது. எனக்குப் பாலியல் உணர்வு எழும்போது என்னிடம் வெருகுப்பூனையின் மணம் இருப்பதாகச் சொன்னார். நாங்கள் ஆரோக்கியவான்களாக இருந்தோம். ஆழ்ந்த அன்பைக் கொண்டிருந்தோம். காமப்பித்தின் கடலில் நீந்திக் கழித்தோம். அவர் திருப்தியடையும்போது காயம்பட்ட சிங்கத்தைப்போல கர்ஜித்தார். அறை சாத்தப்பட்டிருந்தது. ஏர்கண்டிஷன் செய்யப்பட்டிருந்தது. இருப்பினும், வேலைக்காரர்கள் அந்தச் சத்தத்தைக் கேட்கக்கூடுமென்று அஞ்சினேன். நிலைக்கண்ணாடியின் எதிரில் நின்று ஆடை உடுக்கும்போது, எங்களுடைய கண்கள் கண்ணாடியில் பரஸ்பரம் சந்தித்துக்கொள்வது வழக்கமாக இருந்தது. நானதை மிகவும் விரும்பினேன். ஒட்ட வெட்டப்பட்டிருந்த அவரது தலைமுடியில் நரை தெரிய ஆரம்பித்திருந்தது. வீரியம்மிக்க ஆண்மகனின் இரும்புநிறத்தைக் கொண்ட முடி. அவரது கக்கங்களுக்கு விந்தின் மணம். தளர்ந்த நரம்புகளுக்குக் கிளர்ச்சியூட்டும் மணம். அவர் என்னைச் சந்திக்க மருத்துவமனைக்கு வந்தபோது என்னை முத்தமிடவில்லை. நாங்கள் ஒன்றாக இருக்கும் உலகம் அரற்றலினுடையதும் பைத்தியத்தினுடையதும் காமவெறியினுடையதுமாக இருந்தது. இங்கு நாங்கள் நாங்களாக இல்லை. அவர் கூறினார்: ‘விரைவில் குணமடைந்து திரும்பி வா. நாம் மீண்டும் ஆனந்தத்தை அனுபவிக்கலாம்.’ இம்முறை தப்பிவிட்டால் அவரை வியப்பிலாழ்த்துவேன். அவர் ஒருமுறை கூறினார்: ‘திறமைசாலி நபர்கள் மிகுந்த பாலியல் வேட்கை கொண்டவர்களாக இருப்பார்கள்; எனவேதான் நீ இப்படி இருக்கிறாய்.’ நான் இனிமேல் அவருடன் படுக்கமாட்டேன். வாரத்திற்கொரு முறை எனது மருத்துவரைச் சந்திப்பேன். அவரை எனது கைவளையத்திற்குள் பலநிமிடங்கள் சிறைப்படுத்திக் கொள்வேன். நான் செய்யத் துணிவது இதை மட்டுமே. சோகமாகக் காட்சியளிக்கும் அவரது முகத்தை முத்தமிட்டு நீ ஓர் அழகன் என்கிற உணர்வை ஊட்டுவேன். நானோர் அழகிய பெண்ணாக இருந்திருந்தால் அழகின்மையை ஒரு பிரச்சனையாக எதிர்கொள்ளத் தேவையில்லை. பலமுறை நானோர் அழகி என்கிற உணர்வு என்னிடம் எழுந்ததுண்டு. எனது பெரிய முலைகளைப் புகழ்ந்து பேச ஏதோவொரு முட்டாள் இருக்கத்தான் செய்தான். எனது கணவர் அவற்றை முதல்முறையாகப் பார்த்தபோது திகைப்பில் வாயடைத்துப் போனார். பின்னர் நான் அவற்றைப் பத்திரமாகப் பாதுகாத்து, எனது துருப்புச்சீட்டாகப் பயன்படுத்தத் தொடங்கினேன். நான் இவ்வுலகில் ஆரோக்கியம் மிகுந்த பெண்ணாக இருந்தபோது கலங்கிப் புரண்டோடும் நதியைப் போன்றிருந்தேன். எதையும் பணியவைக்கும் எனது ஆற்றலைப் பற்றிய உணர்வு எனக்கிருந்தது. எனது உதடுகள் இனிமை நிறைந்தவை என்றும் எனது மணம் வசீகரிக்கக் கூடியதென்றும் புரிந்துவைத்திருந்தேன். மருட்சி நிறைந்த பழுப்புநிறக் கண்களும் கட்டுமஸ்தான உடற்கட்டும் கொண்ட அழகான இளைஞனுடன் கிட்டத்தட்ட ஓராண்டு காலம் மெல்லியதொரு காதல் உறவைப் பேணி வந்தேன். இருவரும் சேர்ந்து தெருக்களில் நடந்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தோம். பார்ப்பவர்கள் எல்லாம் எங்களைத் தம்பதிகளாகக் கருதினார்கள். நாங்கள் உடலுறவு கொள்ளவில்லை. அவர் என்னை வழிபடுவதாகவும் அந்த வழிபாடு ஒரு சாதாரண உறவாக வீழ்ச்சியடைவதை விரும்புவதில்லை என்றும் கூறினார். சிறிது காலத்திற்குப் பிறகு அவருடன் நடந்துசெல்வது அலுப்பைத் தந்தது. அந்த உறவை முறித்துக்கொண்டேன்.
நான் என் குழந்தைகளுக்கு நல்ல தாயாக இருந்தேன். நான் அவர்களுக்கு ஜாலவித்தைகளையும் கனவுகளையும் புரியவைத்தேன். நான் கடிதங்களை எழுதிக் கடவுளின் கையெழுத்திட்டு அவர்களுக்கு அனுப்பினேன். என் பிள்ளைகள் இந்து புராணக்கதைகளின் எல்லாத் தேவர்களுடனும் தேவிகளுடனும் நட்புறவையும் நெருக்கத்தையும் பேணி வந்தார்கள். ஒருமுறை என் மூத்த மகனுக்குப் பஞ்சகினியின் அண்ணன்மார்களிடமிருந்து ஒரு தேநீர் விருந்துக்கு அழைப்பு வந்தது. நாங்கள் பஞ்சகினியில் விடுமுறை நாட்களைக் கழித்துக்கொண்டிருந்தபோது அச்சம்பவம் நிகழ்ந்தது. எனது தெய்வங்களைப் போலவும் எனது விளையாட்டுப் பொருட்களைப் போலவும் என் பிள்ளைகளை நேசித்தேன். அவர்கள் எனது உலகத்தை ஒரு சொர்க்கப் பூமியாக மாற்றினார்கள்.

எனது பதினைந்து வயதில், பூப்படைந்த காலத்தில் ஓர் இளைஞன் தனது தாயாருடன் ஒரு காமிராவை எடுத்துக் கொண்டு என் வீட்டுக்கு விருந்தாளியாக வந்திருந்தான். நான் வெட்கப்படுபவளாகவும் பக்குவமற்ற கருத்துகளைக் கொண்டவளாவும் இருந்தேன். என்னை யாரும் முத்தமிட்டதில்லை. அழகியென யாரும் என்னைக் குறிப்பிட்டதில்லை. அவனொரு முறை என்னை விக்டோரியா நினைவிடத்திற்கு அழைத்துப் போனான். புகைப்படம் எடுப்பதற்காகப் பல கோணங்களில் நிற்க வைத்தான். எனது மூக்குக்கண்ணாடியை அகற்றிவிட்டுக் கூறினான்: ‘நீ அழகி. நான் காமிராவை எடுத்து வந்தது நல்லதாகிப் போனது.’ இதைக் கேட்டு நான் வியந்தேன். அவனுடைய காமிராவைப் பார்த்துச் சிரித்தபோது நானொரு திரைப்பட நட்சத்திரமாக எனக்குத் தோன்றியது. ஏற்கனவே எங்கள் உறவினர் ஒருவருடன் எனது திருமண நிச்சயம் நடந்திருந்தது. இல்லாவிடில் நான் அன்று, அவ்விடத்திலேயே அந்த இளைஞனுடன் காதலுறவில் ஈடுபட்டிருப்பேன். பகல் பதினொரு மணிக்கு என்னுடன் ஒரு மரத்தடியில் அமர்ந்து அவன் அன்று புழக்கத்தில் இருந்த காதல் பாடலைப் பாடினான். அவனுடைய உடலுக்கு ரோஸ் நிறம். அவனுக்கு முகப்பருக்கள் இருந்தன. எனது திருமணத்துக்கு வந்திருந்தபோது, கதகளியை ரசிப்பதற்காகத் தன்னருகில் வந்தமருமாறு கேட்டுக் கொண்டான். ஆனால், என் கணவர் படுக்கையறையில் என்னைப் பாதுகாத்து வைத்தார். ஆகவே ஜன்னலருகில் போய் அமர்ந்து தொலைவில் ஒலித்துக்கொண்டிருந்த செண்டை மேளத்தைக் கேட்கவே என்னால் முடிந்தது. நான் நேசித்த அந்த இளைஞனை மிகுந்த ஏமாற்றத்திற்கு ஆளாக்கினேன். என்னை விட அதிகம் வயதுடைய என் கணவர் அந்த இரவில் என்னுடன் மூர்க்கமாக உடலுறவு கொண்டார். அந்த உடலுறவு எனக்கு அதிர்ச்சியையும் தொந்தரவையும் தந்தது. கதகளி நிகழ்ச்சியை ரசிக்கச் சென்ற எனது பத்தொன்பது வயதுக் காதலனின் கரம் பற்ற வேண்டியவள் நான். அன்று நான் திருமணத்திற்கும் பாலுறவுக்கும் தயாராக இருக்கவில்லை. மறுநாள் காலை ஆறு மணிக்கு அவன் மாடிப்படியின் கீழே நின்று என்னை அழைத்தான். அவன் விடைபெற்றுச் செல்ல வந்திருந்தான். என்னால் பேச முடியவில்லை. என் கண்கள் நிறைந்திருந்தன. ஒரு நிமிட அமைதிக்குப் பிறகு அவன் வெளியேறினான்.
நோய் ஆய்வுக்கூடத்திலிருந்து இளைஞர்கள் எப்போதும் எனது ரத்த மாதிரியை எடுக்க வருவதுண்டு. அவர்களின் பரிசோதனைக்கு ரத்தம் தேவைப்படுகிறது. நேற்று அதனுடைய நிறம் மாறியிருப்பதை நான் கவனித்தேன். அது பழுப்பு நிறமாக இருந்தது. ஆனால், என் ரத்தத்தின் அடிச்சொட்டிலிருந்து எடுக்கப்பட்டதாக இருக்கலாம். கடந்தமுறை நான் இங்கு இருந்தபோது அவர்கள் வெள்ளை அணுக்களைக் கணக்கிட்டுக்கொண்டிருந்தார்கள். காலையில் முரட்டுக்குரலில் ‘கூன், கூன்’ (ரத்தம், ரத்தம்) என்று கூச்சலிட்டு என்னைக் கண்விழிக்க வைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். இங்கு வந்தபிறகு நான் ஏதோவொன்றின் பகுதியென்ற உணர்வும் யாருக்கோ தேவைப்படுகிறேன் என்கிற உணர்வும் என்னிடம் வளர்ந்திருக்கின்றன. நோய் ஆய்வுக்கூடத்தின் இளைஞர்கள் யதார்த்தத்தில் என்னிடமிருந்து பல தேவைகளை எதிர்பார்க்கிறார்கள்.
இந்த நோய், ஒரு வலிமைமிக்க எதிராளி. மருத்துவர்கள் இதற்கு எந்தப் பெயரைச் சூட்டினாலும் சரி, இந்த மற்போரில் இருசாராரும் மதிப்பிற்குரியவர்கள் என்பதே என் கருத்து.

மருத்துவமனையின் ஒவ்வொரு படுக்கையின்மீதும் ஒரு பனிமூட்டம் கவிந்திருக்கிறது. ஒவ்வொரு நோயாளியையும் மரணபீதி தொல்லைப்படுத்திக் கொண்டிருக்கிறது. வருகை தந்திருக்கும் உறவினர்களிடம் நோயாளியால் வெளிப்படுத்த முடியாத பீதி. கடந்தமுறை நானும் அஞ்சிக்கொண்டிருந்தேன். நான் மணிக்கணக்கில் பிரார்த்தித்தேன். என் பிள்ளைகளைப் பார்க்கும்போது அழுதேன். இம்முறை மீண்டும் ஒரு கெடுவை நீட்டிக்க விரும்புவதுகூட பேராசையென்றே கருதுகிறேன். வாழ்க்கை ஒரு மந்திரஜாலம். அதைப் பருகப்பருக தாகம் அதிகரிக்கும். இந்த வாழ்க்கையும் இந்தக் காதலும் எனக்குப் போதுமென்றாகிவிட்டதெனச் சொல்ல என்னால் ஒருபோதும் இயலாது. பட்டுப்போய்க் கொண்டிருக்கும் ஒரு மரத்தில் தற்செயலாக ஒரு தளிர் துளிர்ப்பதைப்போல இரண்டு வாரங்களுக்கு முன்பு எனது புதிய காதல் எனக்குள் துளிர்த்தது. காலம் தவறிப் பூக்கள் மலர்வதைப் போலவும் மாதவிடாய் நின்ற பிறகு சட்டென்று ரத்தப்போக்கு தொடங்குவதைப் போலவும் இருந்தது அது. கடந்த ஆறு ஆண்டுகளாக என்னைத் தாக்கிய நோய்களும் நோயை மட்டுப்படுத்த நான் உட்கொண்ட மருந்துகளும் எனது உடலில் ஒரு வறட்சியையும் சிதைவையும் ஏற்படுத்தியிருக்கின்றன. ஆகவே, காதல் மலர்ந்தபோது அதையொரு பேரதிசயமாகவே கருதினேன். இங்கு தரப்படும் தூக்க மாத்திரைகளை உட்கொள்வதைத் தவிர்த்து, இரவில் உறக்கமின்றிக் கிடப்பது இன்பமூட்டும்போது, அவனுடனான என் வாழ்க்கை எத்தனை இன்பமாக இருக்குமென்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். அவனொரு சூறாவளியைப்போல என்மீது படர்வான்.
ஒருகாலத்தில் வரவேற்புகள் நிகழ்ந்துகொண்டிருந்த ஒரு பெரிய கட்டடத்தைப் போன்றிருந்தது என் உடல். நடனக்கலைஞர்கள் நடனமாடினார்கள். இசைக்கலைஞர்கள் இசை பாடினார்கள். ஒவ்வொரு விருந்தாளியும் மரியாதைக் குரியவர்களாக இருந்தார்கள். ஒவ்வொரு விருந்தாளியும் நலவிவரங்களை உசாவினார்கள். இறுதியில் கட்டடம் இடிந்தபோது சேரிவாசிகள் தங்களுடைய மூட்டை முடிச்சுகளுடன் வந்து குடியேறினார்கள். ஒவ்வொரு காலடியைப் பதிக்கும்போதும் அவர்கள் மன்னிப்புக் கோரினர். ‘நாங்கள் இங்கு வந்திருக்கக் கூடாது.’ ஒருகாலத்தில் சுகங்கள் மட்டும் செழித்து வளர்ந்திருந்த இவ்வுடலை நோக்கி, இரவுவேளைகளில் சேரிவாசிகளைப்போல வேதனைகள் குடியேறின. அவர்கள்தாம் புதிய குடியிருப்புவாசிகள். தாங்கள் நிரந்தரமாக வசிக்கவே இங்கு வந்திருக்கிறோம் என்பது அவர்களுக்குத் தெரியும்.
வாழ்ந்துகொண்டிருப்பவர்களின் உலகத்தில் ஒரு காலையும் இறந்தவர்களின் உலகத்தில் அடுத்த காலையும் வைப்பது என்பதே ஒரு மனிதன் ஏற்றுக்கொள்ளக்கூடிய மிகவும் முழுமையான நிலைப்பாடு. அப்போது அவன் சமநிலையை எய்துகிறான். அப்போது அகப்பார்வை வெகுஆழத்தை எட்டுகிறது. அஞ்சுவதற்கு எதுவுமில்லை. தேர்ந்தெடுப்பதற்கான உரிமை அவனுடையது. முயற்சித்தால் விரும்பும் இடத்தை நோக்கி அவன் நகர இயலும். ஆனால், இந்த இரண்டு உலகங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது கடினம். எனக்கு வேறு வழி இருக்குமென்றால், நிழல்களின் புலப்படாத வேறொரு உலகமோ ஒரு சந்திர உலகமோ அத்தகைய ஏதோ ஓரிடம் இருக்குமென்றால், நான் இப்போது அங்கு போயிருப்பேன். மற்ற இரண்டுஉலகங்களும் – வாழ்பவர்களுக்கு உரியது. இறந்தவர்களுக்கு உரியது – அழியட்டும் – அழிந்துபோகட்டும்.

மாதவிக்குட்டியின் சுயசரிதையிலிருந்து ஒரு பகுதி | தமிழாக்கம் நிர்மால்யா
Excerpted with permission from Kalachuvadu Publications.
நூல் வாங்க: என் கதை: தமிழில்