தோட்டங்கள்

எம்.டி. வாசுதேவன் நாயரின் "நாலுக்கெட்டு” நாவலை முன்வைத்து - விமர்சகர் கே.சி. நாராயணின் கட்டுரை | தமிழ் மொழியாக்கம் - அழகிய மணவாளன்

Read in : English Read in : Malayalam

நாலுகட்டு நாவலின் கதை நிகழ்வது எந்த காலகட்டத்தில்?

அப்படி காலத்தை சுட்டக்கூடிய வரலாற்று சம்பவங்கள் எதுவும் நாலுகட்டு நாவலில் இல்லை. நாவலில் ஒரு பெரிய இயற்கைச்சீற்றம் விவரிக்கப்படுகிறது. கதையில் ஒரு திசைமாற்றம் என்பதுபோல பாரதப்புழா ஆற்றில் வெள்ளம் வருகிறது. மலையிலிருந்து நீர்வரத்து அதிகமாகி ஆறு நிறைந்து பாலக்காடு மாவட்டம் பட்டாம்பியில் உள்ள கூடல்லூர் என்ற ஊரில் தாழ்ந்த பகுதிகளை மூழ்கடித்தபோது சங்கரன்நாயர் பாருக்குட்டியை ஒரு சிறியபடகில் ஏற்றிவிடுகிறார். வெள்ளத்தால் உதிர்ந்து வீழ்ந்துவிடும் நிலையிலுள்ள வீட்டிலிருந்து அவளை காப்பாற்றுகிறார். நாலுகட்டு நாவல் விவரிப்பது 1942-ல் மத்திய கேரளத்தில் பெய்த கடும்புயல் மழையையும் அதனால் உருவான வெள்ளத்தையும்தான். இந்த இயற்கைசீற்றத்தை அடிப்படைப்புள்ளியாக வைத்துக்கொண்டு முன்பும் பின்புமாக காலத்தை ஊகிக்க ஆரம்பித்தால் நாலுகட்டு நாவலின் கதை நடக்கும் காலத்தை நம்மால் ஊகிக்கமுடியும்.

அந்த இயற்கைச்சீற்றம் உருவான 1942-ல் அப்புண்ணி எட்டாம் வகுப்பில் தேர்ச்சிபெற்று திருத்தாலா உயர்நிலைப்பள்ளில் நான்காவது ஃபாரம் சேர்ந்திருக்கிறான். அவனுக்கு பதினைந்து வயது. அப்படியென்றால் 1927ல் அப்புண்ணி பிறந்திருக்க வேண்டும். அப்புண்ணிக்கு மூன்றுவயது ஆகும்போது, அதாவது 1930-ல், அவனுடைய அப்பா கோந்துண்ணிநாயர் கொல்லப்படுகிறார். அப்புண்ணியின் கற்பனையில் அவன் தந்தை கோந்துண்ணி நாயர் பெரிய உடல்கொண்ட திடகாத்ரமான ஆளுமையாகவே இருக்கிறார். 1944-ல் பள்ளி இறுதிப்படிப்பில் தேர்ச்சிபெற்ற அப்புண்ணி ஸெய்த் அலிக்குட்டியின் உதவியுடன் வயநாட்டில் ஒரு ஹோட்டலில் வேலைக்கு சேர்கிறான். பின்பு ஐந்துவருடங்கள் அமைதியான வயநாட்டு வேலைக்காலம். அதன்பிறகு 1949-ல் அவன் மீண்டு வந்து பெரிய மாமாவிடமிருந்து நாலுகட்டுவீட்டை விலைக்கு வாங்கி அம்மாவையும் சங்கரன்நாயரையும் அங்கு குடியமர்த்துவதுடன் நாலுகட்டு நாவல் முடிவடைகிறது. கதை நடப்பது 1941 முதல் 1949 வரைதான். 1926 முதல் 1941 வரை உள்ள காலம் நாவலில் ஃப்ளாஷ்பேக்காக வருகிறது.

நாலுகெட்டு நாவல்

அந்த காலகட்டம் கேரள வரலாற்றின் மிக பிரதானமான காலகட்டம். கேரளத்திலும், கேரளத்திற்கு வெளியேயும் சம்பவங்களுக்கு மேல் சம்பவங்கள் என வரலாறு பித்துப்பிடிக்கும் வேகத்தில் பெரும் பாய்ச்சல்களாக நிகழ்ந்த காலம். வெறும் எட்டு வருடத்திற்குள்- உலகப்போர், சுதந்திரப்போராட்டம், சுதந்திரம் கிடைப்பது, காங்கிரஸ், கம்யூனிசம் என அந்த குறைந்த கால அளவில் அடையாளக்கற்களைப்போல நிற்கும்  வரலாற்று சம்பவங்களின் எண்ணிக்கை ஆச்சர்யப்படுத்தக்கூடியது. ஆனால், நாலுகட்டு நாவலில் இந்த சம்பவங்கள் ஒன்றுகூட விவரிக்கப்படுவதே இல்லை. வெறும் சொல்லாகவோ, மறைமுகமாக சுட்டப்பட்டோ, சின்ன குறிப்பாகவோ, ஏதோ ஒரு சாதாரண கதாப்பாத்திரத்தின் உரையாடலாகவோ, யாராவது அறிந்ததாகவோ என எந்தவகையிலும் நாவலில் அது குறிப்பிடப்படவே இல்லை. ஆனால், கதை நடக்கும் கூடல்லூர் என்ற ஊரின் விரிவான வரைபடமாக்கல் நாவலில் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. அங்குள்ள ஆறு, ஆற்றில் வந்து கலக்கும் பூமான் வாய்க்கால், பரம்புகள், வயல்கள், சாலைகள், ஊடுவழிகள், கரைகள், சந்தை, பள்ளிக்கூடம், யக்ஞேஸ்வரம் கோவில், தபால்நிலையம் என நாவல் தரும் விவரணைகளை மட்டும் வைத்துக்கொண்டு கூடல்லூரின் வரைபடம் ஒன்றை நாம் உருவாக்கிவிடலாம். அதைப்போலவே அந்த ஊரில் உள்ள பல்வேறு வகையான மனிதர்கள் அவர்களின் வண்ணபேதங்களுடன் விரிவாகவே சித்தரிக்கப்பட்டிருக்கின்றனர். முக்கியமான, முக்கியமற்ற என நூற்றுக்கும் மேற்பட்ட கதாப்பாத்திரங்கள் நாவலில் இருக்கிறார்கள். நாவலில் 75 பக்கங்கள் முடியும்போது 38 கதாப்பாத்திரங்கள்அறிமுகப்படுத்தப்பட்டிருப்பார்கள். நாம் கடிதமெழுதினால் அவர்களுக்கு கிடைத்துவிடும் என்னும் அளவுக்கு பல கதாப்பாத்திரங்களின் முழுமையான முகவரி அளிக்கப்பட்டிருக்கிறது. கதாப்பாத்திரங்களின் பெயர் மட்டுமல்ல, அவர்களின் குடும்பம், ஜாதி, மதம், ஜாதிகளுக்கிடையேயான மேல்கீழ், அதிகாரங்கள், ஆண்பெண் உறவுகள், ஒவ்வொருவரின் பேச்சுமொழிக்கும் இடையேயான மாற்றங்கள், அவர்கள் சாப்பிடும் உணவு, அவர்களின் விளையாட்டுகள், வணங்கும் தெய்வங்கள், அவர்களின் பொருளாதாரச்செயல்பாடுகள்- இப்படி கூடல்லூர் என்ற கிராமத்தில் 1927 முதல் 1949 வரையுள்ள காலத்தில் மனிதர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை கிட்டத்தட்ட வரலாற்று ஆவணம் போல எந்த வரலாற்று நூலிலும் காணமுடியாத அளவுக்கும் திட்டவட்டமாகவும், புறவயமாகவும் நாலுகட்டு நாவலில் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் ஒரு கிராமத்தின் தனித்தன்மைகளை வேறு எங்கும் காணமுடியாத தெளிவுடன் சித்தரித்துக்காட்டும் நாவல் அந்த ஊர் அப்படி வாழ்ந்தது எந்த காலகட்டத்தில் என்பது சுட்டிக்காட்டப்படவே இல்லை. நாலுகட்டு நாவலின் கதை நடப்பது ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில்தான் என்று நாம் ஊகித்துக்கொள்ள உதவும் இரண்டே இரண்டு குறிப்புகள்தான் நாவலில் இருக்கிறது. ஒன்று, கிராம நீதிமன்றம் பற்றியது. வடக்கேபாட்டு தறவாட்டை பாகம் பிரிக்கும்போது அதில் மேற்பார்வையிடும் வக்கீல் குமாரன் நாயர் இந்த கிராம நீதிமன்றத்தின் வக்கீல். காலனிய ஆட்சிக்காலத்தில் மலபாரில் நீதி நிலைநாட்டும் அமைப்பாக இருந்தது இந்த கிராம நீதிமன்றம் மட்டும்தான். இரண்டு, வயநாட்டில் அப்புண்ணி ஃபீல்ட் ரைட்டராக வேலைசெய்யும் தேயிலைத்தோட்டத்தின் நிர்வாகி ஒரு வெள்ளையர் என்ற குறிப்பு இருக்கிறது (நீ படித்து சாயிப்பாக ஆகப்போகிறாய் இல்லையா? என வேறு ஒரு இடத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது). காலனிய ஆட்சிக்காலத்தைப்பற்றி இந்த இரண்டு குறிப்புகளை தவிர்த்துவிட்டுப்பார்த்தால் 1940கள் பற்றிய குறிப்புகள் எதுவும் நாலுகட்டு நாவலில் இல்லை, ஒரு ஊரை, அதன் அமைப்பை,   மனிதர்களை, அந்த வாழ்க்கையை, மிகமிக துல்லியமாக சித்தரித்துக்காட்டும் நாவல் அது காட்டும் வாழ்க்கை எந்த காலகட்டத்தில் நடக்கிறது என்பது ஏன் குறிப்பிடவே இல்லை என்ற கேள்விக்கான பதில் நாலுகட்டு நாவல் இடத்தின் கதை காலத்தின் கதை அல்ல என்பதுதான். 

முதல் மலையாள நாவலாக கருதப்படும் “இந்துலேகா”

நாலுகட்டு நாவல் நிகழும் கூடல்லூரின் என்ற ஊரின் உள்ள மனிதர்களின் வாழ்க்கை நிகழும் காலகட்டத்தை அது கணக்கிலெடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், அந்த வாழ்க்கையில் வரலாற்றப்போக்கால் உருவான மாற்றங்களும், அது தனிமனித உறவுகளில், வாழ்க்கையனுபவங்களில் உண்டாக்கிய ஆழமான பாதிப்புகளின் சுவடுகளையும் நாவலில் காணமுடியும். பொருளாதாரமுறையில் வரும் மாற்றம் குடும்ப உறவுகளிலும் தனிமனித உறவுகளிலும் ஏற்படுத்தும் விளைவுகள், அதன்மூலம் உருவாகிவரும் புதிய உணர்வுத்தளங்கள் போன்றவை வரலாற்று நூல்களில் காணமுடியாத விஷேஷமான நிலையில் நாலுகட்டு நாவலில் தெள்ளத்தெளிவாக காணமுடியும். இலக்கியம் என்பது நிகழ்வுகளின் வரலாறு அல்ல, அனுபவங்களின் வரலாறு. நாலுகட்டு நாவல் 1940களில் கேரளத்தின் குடும்ப வாழ்க்கையில் நிகழ்ந்த பரிணாமமாற்றத்தின் நுட்பமான வரலாற்றை வாசகனுக்கு அளிக்கிறது. அதிலொன்று தந்தை என்ற உணர்வு உள்நுழைவது. என்.எஸ்.மாதவனின் ஒரு சிறுகதையிலுள்ள கதாப்பாத்திரம் “எங்களுக்கு தந்தை கிடைத்து ஒரு தலைமுறைக்காலம்தான் ஆகிறது” என்கிறது. கேரளத்தின் மருமக்கத்தாயத்தை (தாய்வழி சொத்துரிமை) அடிப்படையாகக்கொண்ட நாயர் சமூகத்தில் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம்வரை அவ்வளவு முக்கியமில்லாத, அதன்பின் ஐம்பது வருடங்களுக்குள் மிக முக்கியமானதும் ஆன உணர்வுநிலைதான் ‘தந்தை’. (பத்தொன்பதாம் நூற்றாண்டில் திருவிதாங்கூரில் 56 சதவிகதம் குடும்பங்கள் மருமக்கத்தாய முறைமை கொண்டவர்கள் என்கிறார் கனடாவைச் சேர்ந்த கேரள வரலாற்றாசிரியர் ராபின் ஜெஃப்ரி). சந்துமேனோனின் முதல் நாவலான இந்துலேகாவில் நாவலின் முக்கிய கதாப்பாத்திரங்களான இந்துலேகாவின், மாதவின் தந்தைக்கு முக்கியமான பங்கு இல்லை. சந்துமேனோனின் அடுத்த நாவலான ”சாரதா”வில் தந்தையின் முக்கியத்துவம் கூடுகிறது என்று சொல்லலாம். இடச்சேரியின் கவிதைகளில் ஒரு குறிப்பிடத்தக்க விடுபடல் தந்தைதான் என்ற அவதானிப்பை முன்வைத்திருக்கிறார் டாக்டர்.எஸ்.பி.ரமேஷ். தந்தை என்ற உறவுநிலையும் அதன் உணர்வுதளங்களும் மெல்லமெல்ல தீவிரமடைந்து வருவதன் நுட்பமான வரலாற்றை நாலுகட்டு நாவல் காட்டுகிறது. அந்த நாவலின் நாலுகட்டு தனித்தன்மை என்பதுதான் இதுதான். தன் மனதில் தந்தையை மட்டுமே பீடத்தில் ஏற்றியிருக்கும் அப்புண்ணி என்ற மகனின் கதைதான் நாலுகட்டு நாவல். நாலுகட்டு நாவலின் கதைப்போக்கிற்கு நாடகீயத்தையும், தீவிரத்தையும் அளித்து அதை முன்செலுத்துவது அப்புண்ணியின் ஆழ்மனதில் உள்ள தந்தைவடிவம்தான். நாலுகட்டு நாவலைப்பற்றிய பிரபலமான வாசிப்பு அது மருமக்கத்தாயம்(தாய்வழி சொத்துரிமை) இல்லாமலாகி மருமக்கள்(மருமகன்கள்) தனிக்குடும்பங்களாக ஆகும் சொத்துரிமை மாற்றத்தின் கதை அது என்பதுதான். மருமக்கதாய சொத்துரிமையில் தாய்மாமாவிலிருந்து மருமகனுக்கு செல்லும் அதிகாரமாற்றத்தில் தந்தை நடுக்கண்ணி மட்டும்தான். தந்தை என்ற அம்சமும் அந்த புதிய உறவுமுறையை  சூழ்ந்திருக்கும் உணர்வுப்பூர்வமான உலகமும்தான்  நாலுகட்டு நாவலின் பேசுபொருள். கேரளத்தில் தந்தை என்ற கருதுகோள் உருவாகி வருவதன் வரலாற்றைத்தான் நாலுகட்டு நாவல் எழுதியிருக்கிறது என்று சொல்லலாம். அப்புண்ணியின் தந்தை கோந்துண்ணி நாயர் பெரிய மனிதனாக, தன்மானத்துடன், அனைவராலும் விரும்பப்படும் வீரநாயகனாக ஆவது அப்புண்ணியின் கற்பனையில்தான். பெண்வீட்டுக்காரர்கள் சம்மதம் இல்லாமல் சாகசப்பூர்வமாக பெண்ணை தூக்கிச்சென்று திருமணம் செய்வது, பகடையாட்டத்தில் எதிராளிகள் அனைவரையும் தோற்கடிப்பது- இப்படி மற்ற மனிதர்களிலிருந்து கிடைக்கும் கதையம்சங்களை சேர்த்து அவன் கற்பனையில் தந்தையை உருவாக்கிக்கொள்கிறான். தந்தை உயிருடன் இல்லை என்பதால்தான் இது அப்புண்ணிக்கு சாத்தியமாகியது. சைத் அலிக்குட்டியுடன் சேர்ந்து செய்யும் வணிகமும் அப்படியே தொடர்ந்து  கோந்துண்ணிநாயர் கொல்லப்படாமல் அவர் உயிருடன் இருந்திருந்தால் அப்புண்ணியின் உலகம் ஒரு சராசரி மனிதனின் சாதாரணமான, கவனிக்கப்படாத வாழ்க்கையாக ஆகியிருக்கும். அப்புண்ணியின் கற்பனையில் வளர்ந்து செழித்த ‘தந்தை’ என்ற பேருருத்தோற்றம் உருவாகியே இருக்காது. மரணம்தான் ஒருவர் மற்றொருவரின் கற்பனையில் வளரும் வாய்ப்பை அளிக்கிறது. இறந்த மனிதன் காணாமல்போன புத்தகத்தைப்போல, அதற்கு முடிவற்ற வாசிப்பு சாத்தியங்கள். இப்படி சொந்த கற்பனையில் உருவாக்கப்பட்ட தந்தையின் விழைவுகளை நிறைவேற்றும் ஊடகமாகத்தான் அப்புண்ணி தன்னை எண்ணிக்கொள்கிறான். தந்தையை கொன்ற சைத் அலிக்குட்டியை பழிவாங்குவதுதான் தன் இலக்கு என்று சின்னவயதிலேயே அவன் முடிவெடுத்துவிடுகிறான். தந்தை விரும்பி திருமணம்செய்துகொண்ட பெண்ணின் பாதுகாவலன் என்ற நிலையில் அம்மாவின் ஏகபத்தினி விரதத்தை உறுதியாக வைத்திருப்பதை தன் கடமையாக அவன் நினைக்கிறான். அப்பா இல்லாத அம்மாவின் ஏகபத்தினி விரதத்தை காப்பாற்றுவது என்பது அப்பாவுக்காக அப்புண்ணி கடைபிடிக்கும் இரண்டாவது கடமை. அம்மா அதிலிருந்து பிறழ்வதாக தோன்றியவுடன் அவன் அம்மாவை கைவிடுகிறான். அதனால் அப்பாவின் இடத்திற்கு வந்த சங்கரன்நாயரும் அவனுக்கு எதிரிதான். நாவலின் கடைசிப்பகுதியில் அப்புண்ணியில் நிகழும் மாற்றம் என்பது தந்தையின் எதிரிகளை (அதனால் தன் எதிரிகளும்கூட) மன்னிப்பதுதான். அதற்கு பலகாலம் முன்பே தந்தையைக்கொன்ற சையத் அலிக்குட்டியை அவன் குற்றமற்றவனாக கருத ஆரம்பித்துவிட்டான் (”பக்கவாதம் வந்து படுக்கையிலிருக்கும் சையத் அலிக்குட்டி” நான் செய்ததற்காக கிடைத்தது இது” என்கிறான். தெய்வம் தண்டித்தபின் மனிதனால் மன்னிக்கமுடியும் அல்லவா?). சையத் அலிக்குட்டியின் தூண்டுதலால் அம்மாவை மன்னித்து, அவரை பார்ப்பதற்காக ஊருக்கு செல்கிறான். அம்மாவுக்காக அவர் மறுமணம் செய்துகொண்ட சங்கரன்நாயரை மன்னிக்கிறான். அதேசமயம் தன்னையும், அம்மாவையும், அப்பாவையும் அவமதித்த பெரிய தாய்மாமாவை அவர்கள் எல்லாவருக்காகவும் தண்டிக்கிறான். இறந்துபோன தந்தை தன் மகனின் கற்பனையில், அவன் செயல்பாடுகள் வழியாக வாழும் கதைதான் நாலுகட்டு நாவல். இவ்வளவு உணர்வுப்பூர்வமாக ’தந்தை’ என்ற உறவுமுறையை  அடிப்படையாகக் கொண்ட படைப்புகள் ’நாலுகட்டு’ நாவலுக்கும்முன் எழுதப்படவில்லை. ஆயிரத்து தொள்ளாயிரத்தி முப்பதுகளிலும், நாற்பதுகளிலும் கேரளத்தின் இரண்டாவது பெரிய சமூகமான நாயர்களின் சொத்துரிமை மாற்றமடைவதன் உணர்வுப்பூர்வமான வரலாற்றை இவ்வளவு நாடகீயமாக மற்ற எந்த படைப்பும் கையாளவில்லை. ‘இதோ அப்பா வருகிறார்’ என்ற புகழ்பெற்ற ரவிவர்மா ஓவியத்தின் நாவல்வடிவம் தான் நாலுகட்டு.

சிலரை மன்னித்தும், சிலரை தண்டித்தும் தந்தையின் விழைவுகளை பூர்த்தியாக்கும் நிலைக்கு அப்புண்ணியை கொண்டுசேர்க்கும் மிகப்பிரதானமான விசை அப்புண்ணி ஈட்டிய பணம்தான். வயநாடு எஸ்டேட்டில் (தோட்டத்தில்) மாதச்சம்பளம் நூற்றிநாற்பது ரூபாய். அதிலிருந்து சேமித்த நாலாயிரம் ரூபாயை வைத்துதான் அவன் நாலுகட்டு வீட்டை விலைக்கு வாங்கி அம்மாவையும் சங்கரன் நாயரையும் குடியேற்றுகிறான். அப்புண்ணியின் தந்தை கோந்துண்ணி நாயரைப்போல அந்த நாலாயிரம் ரூபாயும் அந்த நாவலின் கதாநாயகன் தான். அந்த நாலுகட்டுவீட்டை புதுப்பிக்க இன்னும் பணத்தை செலவழிக்க அப்புண்ணி நினைக்கிறான் என்ற குறிப்பும் நாவலில் இருக்கிறது. காரணம், மனிதன் வாழமுடியாத அந்த நாலுகட்டு வீட்டை இடித்து அங்கே காற்றோட்டமாக, வெளிச்சம் கொண்ட ஒரு சின்னவீட்டை, ஒரு கூட்டுக்குடும்பம் அற்ற தனிகுடும்ப அமைப்பை அமைக்க அவன் திட்டமிடுகிறான். தந்தை, தாய், மகன் என்ற தனிக்குடும்ப வீடு கட்டுகிறான் என்றால் அதற்கான முன்நிபந்தனையான பணம் அவனிடம் இருக்கிறது என்றுதான் அர்த்தம். இந்த நாவலில் உள்ள தந்தையின் வரலாறு என்பது கேரளத்தில் (குறைந்தபட்சம் நாயர்கள் என்ற ஒரு சாதியிலாவது) பணம்சார்ந்த பொருளாதார அமைப்பு உருவாகிவருவதன் வரலாறுதான். நாலுகட்டு நாவல் மருமக்கத்தாயத்திலிருந்து(தாய்வழி சொத்துரிமை) மக்கத்தாய சொத்துரிமைக்கு(தந்தைவழி சொத்துரிமை) மாறும் கதை மட்டுமல்ல. பண்டமாற்று பொருளாதார முறையால் இயங்கும் நிலப்பிரபுத்துவ சமூகம் பணத்தை அடிப்படையாகக்கொண்ட பொருளாதார அமைப்பாக மாறுவதன் உணர்வுப்பூர்வமான வரலாற்றை ’தந்தை’ என்ற உறவுமுறை வழியாக காட்டிய நாவலும்கூட. பணத்திற்கு தன்னளவில் பெரிய மதிப்பு எதுவும் இல்லாத, அதாவது பணம் சார்ந்த பொருளாதாரம் நோக்கி பரிணமிக்காத, பண்டமாற்று முறையில் இயங்கும் சமூகம். ஆனால் அந்த சமூகத்திற்கு வெளியே பணம் வலுவான இருப்பாக ஆகிவிட்டது, அந்த  அழுத்தம் இந்த சமூகத்தை பாதிக்கிறது. எதிர்காலத்தில், நம்மை வலுவாக்கும் ஒரே அம்சமாக ’பணம்’ ஆகப்போகிறது என்ற அறிதல் மெதுவாக உருவாகிக்கொண்டிருக்கும் விவசாயத்தை அடிப்படையாகக்கொண்ட கிராமம்தான் கூடல்லூர்.

எழுத்தாளர் தேவகி நிலையங்கோடு

ஒரு வரலாற்று ஆவணமாக ஆகுமளவுக்கு அந்த சமூக அமைப்பு நாவலில் விரிவாக அளிக்கப்பட்டிருக்கிறது. நால்வருணத்தை அடிப்படையாகக்கொண்ட நிலப்பிரபுத்துவ அம்சம் கொண்ட, ஆணாதிக்க சமூக அமைப்பு அது. மாங்கோத்து இல்லம், தென்தேத்து இல்லம் என்ற நம்பூதிரி இல்லங்களும்; வடக்கேப்பாடு, குண்டங்கல் போன்ற நாயர் தறவாடுகளும்தான் விவசாயநிலங்களின் உரிமைதாரர்கள். வேறு எந்த  தொழில்வாய்ப்புகளும் இல்லாததால் ஒரு நம்பூதிரி இல்லத்தில் நெல்புடைக்கும் வேலையை பாருக்குட்டி செய்கிறாள்.  கூலியாக பணம் இல்லை, நெல்லோ, அரிசியோதான். இல்லத்தில் விவசாயவேலை செய்யும் செறுமர்களுக்கு(புலையர் ஜாதியை சேர்ந்தவர்கள்) பணம் இல்லை, நெல்தான் கூலி. வடக்கேப்பாட்டு தறவாட்டில் சர்ப்பம் துள்ளல் நடக்கும்போது விருந்து முடிந்து வாழைத்தோட்டத்தில் வந்துவிழும் எச்சில் இலைகளுக்கு செறுமர் சாதியை சேர்ந்த குழந்தைகள் போட்டியிடுகிறார்கள். எச்சில் இலைகள் செறுமர் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பாருக்குட்டி போன்றவர்களுக்கும் அறிமுகமானதுதான். மனைக்கல் நம்பூதிரி வீட்டில் பாருக்குட்டிக்கு மதிய உணவை எச்சில் இலையில்தான் அளிக்கிறார்கள்- தேவகி நிலயங்கோட்டின் ‘எச்சில்’ என்ற கட்டுரையை நினைவுகூறுங்கள்.

குத்தகையை அடிப்படையாகக்கொண்ட நெல்விவசாயம் நடத்தப்படுவதன் சித்திரத்தையும் இந்த நாவல் அளிக்கிறது. குத்தகைத்தொகையாக நிறைய நெல் வரும் இல்லத்தில் இரண்டு பறை நெல்லை பாருக்குட்டி கூலியாக வாங்குகிறாள். குத்தகையை அளந்து வாங்குவதற்கு வலிய பறை. கூலியை அளந்து கொடுப்பதற்கு செறியபறை (கள்ளப்பறை). கோந்துண்ணிநாயர் தனக்கும் பாருக்குட்டிக்குமாக வீடு கட்டுவது நம்பூதிரி இல்லத்திலிருந்து குத்தகைக்கு வாங்கிய பறம்பில்தான். உழைப்பால் அந்த பறம்பை மலர்வனமாக ஆக்குகிறார். வடக்கேப்பாட்டு நாயர் தறவாடு தன் நிலத்தில் கொஞ்சத்தை மட்டும்  குத்தகைக்கு கொடுத்திருக்கிறது. மிச்ச நிலத்தில் சொந்த தேவைக்காக தாங்களே விவசாயம் செய்தார்கள். இன்று அந்த நிலை மாறிவிட்டது. ஆனால் தொழுவத்தில் நான்கு ஏர் மாடுகள் அப்போதும் நிற்கின்றன. முப்போகம் விளையும் தோணிக்கடவு நிலம் தறவாட்டைச் சேர்ந்ததுதான். நெல்விவசாயத்தை நம்பியிருக்கும் தேங்கிய பொருளியல் அமைப்பு. மாயாஜாலங்களை ஏற்படுத்தக்கூடிய ’பணம்’ அரங்கில் நுழையும்போதுதான் அந்த பொருளியல் அமைப்பு சலனமடைகிறது. புதுப்பணக்காரர்களின் வீடுகள் கூடல்லூரில் உருவாகிவருவதை பார்த்து அப்புண்ணியின் பெரியமாமா வெறுப்படைவதை நாவலில் காணமுடியும். ‘ இன்று ஊரில் காசுபணம் வந்துவிட்டது. இவர்களைவிட சொத்துகள் உள்ளவர்கள் நாயர்சாதியிலும் இருக்கிறார்கள். இங்கு களப்புரையிலிருந்து நெல் வாங்கிக்கொண்டு சென்றவர்கள் இப்போது மாளிகைகட்டி வாழ்கிறார்கள்’. நிலப்பிரபுத்துவத்தின் முக்கியமான உரிமைதாரர்களை (நாயர்களை) தொந்தரவு செய்த ஒரு பிரதானமான சக்தி அவர்களுடைய மேன்மையை அசைத்துப்பார்க்கும்படி கேரளத்தில் இருபதாம் நூற்றாண்டில் முதல்பகுதியில் வந்துசேர்ந்த புதுப்பணம்தான். அவ்வாறு புதிதாக உருவாகிவந்த பணக்காரர்களின் குடும்பம்தான் குண்டுங்கல் தறவாடு. அந்த தறவாட்டை சேர்ந்தவர்கள் பெரிய வீடுகளில் மேற்பார்வையாளர்களாக இருந்து உண்டாக்கியதுதான் அவர்களுடைய பணம். முதலாளியின் வீட்டிலும் பணம் இருப்பதன் குறிப்பு இருக்கிறது. நம்பூதிரி இல்லத்திலிருந்து வரும் உண்ணி நம்பூதிரி நூறு ரூபாயுடன் பள்ளிக்கூடத்திற்கு வருகிறான். வடக்கேப்பாட்டு தறவாட்டிலும் அப்புண்ணியின் பெரியம்மா பணத்தின் மதிப்பை அறிந்து சொந்தமாக பணத்தை சேமிக்கவும் தொடங்குகிறார். அவர் ஒரு நம்பூதிரியுடன் சம்பந்த உறவில் இருகிறார். அந்த நம்பூதிரி அளித்த விவசாய நிலத்திலிருந்து வரும் குத்தகை நெல்லை விற்று பணமாக்கி பெரியம்மா பாதுகாக்கிறார்.   ’அவளுடைய கையிலிருந்து பூத்த பணம் இது’ என்கிறார் பெரிய மாமா. பெரிய மாமாவிற்கு மற்றவர்களின் பணம்மீது வெறுப்பு இருக்கிறது என்றாலும் புதிய தலைமுறையின் தந்தையாக ஆவதற்கான தயாரிப்பு என்பதுபோல வடக்கேப்பாட்டின் சொத்தை வைத்து மனைவியின் மடியை நிறைக்கிறார். அவரின் மகள் அம்மிணியேட்டத்தியின் கணவர் கொழும்பிற்கு சென்று நிறைய பணம் சம்பாதித்தவர். வெளியே இருந்து வரும் பணத்தால் அல்லது அங்கங்கே சிறிய அளவில் உருவாகக்கூடிய பணம்சார்ந்த பொருளாதாரத்தால் கூடல்லூரின் இறுக்கமான விவசாயம் சார்ந்த பொருளாதார அமைப்பு நெகிழ்ந்து உருமாறும் கட்டத்தில்தான் நாலுகெட்டு நாவலின் கதை நடக்கிறது.   

புதிதாக உருவாகிவந்த பணம்சார்ந்த பொருளாதாரம் பலவிதங்களில் நாலுகட்டு நாவலின் கதைப்போக்கை மாற்றுகிறது, அந்த பாதிப்பு பலவிதங்களில் கதாப்பாத்திரங்களில் பிரதிபலிக்கிறது, அந்த கதாப்பாத்திரங்களில் பணம் இல்லாமை தீவிரமான இழப்புணர்வை ஏற்படுத்துகிறது. வடக்கேப்பாட்டு விவசாயம் முழுவதையும் மேற்பார்வை செய்யும், சேற்றில் இறங்கி வேலைசெய்யும் அப்புண்ணியின் தாய்மாமா குட்டன் வறுமையானவர் இல்லை, ஆனால் தன்னிடம் பணம் இல்லை என்ற எண்ணம் அவரில் தீவிரமாக இருக்கிறது. ‘கையில் தொட்டுப்பார்க்க ஒரு காசு எனக்கு கிடைக்கவில்லை’ என்கிறார். மகள் மாளுவிற்கு பொன்னால் ஆன தோடு வாங்கிக்கொடுக்கவேண்டும் என்ற ஆசை இருந்தாலும் அதற்கு பொற்கொல்லன் குஞ்சுவிற்கு கொடுக்க நாலணா கையில் இல்லை. ‘உன் கையில் கொஞ்சம் பணம் இருக்க வேண்டுமே’ என்கிறார் பாட்டி. பணத்தை வைத்து எதையும் நிறைவேற்றிக்கொள்ளும் அவசியமில்லாத பழைய நிலப்பிரபுத்துவ சமூகத்தில் யாருக்கும் பணமின்மை என்ற இழப்புணர்வு இல்லை, இப்போது பொருளாதார அமைப்பு உருமாற்றமடையும் காலகட்டத்தில் சமூகத்தில் மேல்தட்டில் உள்ளவர்களிடம் கூட பணமின்மை என்பது தீவிரமான இழப்புணர்வை ஏற்படுத்துகிறது. அப்புண்ணியின் மனம் முழுக்க பணம் இல்லை என்பதன் கௌரவக்குறைச்சலும், பலவீனமும்  நிறைந்திருக்கிறது. ‘இல்லத்தின் பணிப்பெண்ணின் மகன். பெரிய வீடில்லை, பணமில்லை’. இந்த தாழ்வுணர்ச்சியால் மற்ற பையன்களிலிருந்து விலகி அப்புண்ணி வாழ்கிறான். ஓட்டன் துள்ளல் ஆடுபவருக்கு கொடுக்க எல்லோரும் இரண்டணா கொண்டுவரவேண்டும் என்று சொன்னபோது அது இல்லாததால் அவன் பள்ளிக்கூடத்திலிருந்து சீக்கிரமே கிளம்பிவிடுகிறான். அவன் பள்ளிக்கு மதிய உணவு எடுத்துச்செல்ல பித்தளை பாத்திரம் வாங்குவதற்கு தேவையான ஐந்து ரூபாய் அவனது அம்மாவால் ஏற்பாடுசெய்ய முடியவில்லை. இறுதித்தேர்வுக்கான பணம் கட்ட தடுமாறும்போது, தனக்கு கிடைத்த கல்வி உதவித்தொகையை கடன் வாங்கிய குட்டன்மாமா தான் வாங்கிய பணத்தை திரும்ப தந்து அவனுக்கு உதவவில்லை. அப்புண்ணியுடன் படிக்கும் உண்ணிநம்பூதிரி, தன்னிடம் பணம் இருக்கிறது, ஆனால் இப்போது தன்னால் அளிக்க முடியாது என்று சொல்லிவிடுகிறான். ரெயில்வே குமாஸ்தா வேலைக்கு விண்ணப்பிக்க அப்புண்ணியால் முடியவில்லை, காரணம் அவனிடம் ஒன்றரை ரூபாய் இல்லை. கடைசியில் வயநாட்டில் ஒரு வேலை கிடைக்கும் என்று ஆனபோதும் அங்கு செல்வதற்கு தேவையான பணமும் அப்புண்ணியிடம் இல்லை. அவனிடம் கடன் வாங்கிய பதினைந்து ரூபாயை திருப்பிக்கொடுத்த ராமகிருஷ்ணன் மாஸ்டர் அப்புண்ணிக்கு உதவுகிறார். இரண்டணா, நாலணா, நாலு ரூபாய், அஞ்சுரூபாய், பதினைந்து அணா, பதினைந்து ரூபாய்….. நாலுகெட்டு நாவலின் கதைப்போக்கில் பெரும்பாலான திருப்பங்கள் ஏற்படுவது இந்த சின்ன சின்ன தொகைகளால்தான். அப்புண்ணி வயநாட்டிற்கு போக வழிச்செலவுக்கு தேவையான பதினைந்து ரூபாய் கிடைக்காமல் போயிருந்தால், அவன் பரீட்சைக்காக கட்டவேண்டிய பதினைந்து ரூபாயை யாருமறியாமல் அம்மா தந்திருக்காவிட்டால், அவன் பள்ளியில் சேர ஐந்து ரூபாயை சங்கரன் நாயர் கொடுக்கவில்லையென்றால், அவன் கல்விக்கு மாதம் ஆறுரூபாய் உதவித்தொகை கிடைக்கவில்லையென்றால் நாலுகட்டு நாவலின் கதைபோக்கு வேறு ஒருவகையில் இருந்திருக்கும். கோந்துண்ணி நாயரின் கொலைக்கு காரணமான ஆயிரம் ரூபாய்தான் நாலுகட்டு நாவலின் கதைப்போக்கை தீர்மானித்த மிகப்பெரிய தொகை. நாலுகெட்டு நாவலின் கதையோட்டத்தை ஆயிரம் ரூபாய் மாற்றுகிறது அல்லது அது அப்புண்ணியின் வாழ்க்கையை மாற்றுகிறது. அப்படி தடம்மாறிய வாழ்க்கையை நாலாயிரம் ரூபாயை வைத்து அப்புண்ணி மீண்டும் நிலைநிறுத்துகிறான் என்றும் சொல்லலாம். அப்படிப்பார்த்தால், நாலணாவிலிருந்து நாலாயிரம் ரூபாய்வரையான பலவகையான தொகைகளின் ஒட்டுமொத்தம்தான் நாலுகட்டு நாவல். இந்த நாவலில் ’பணம்’ என்பது இரண்டாம்பட்சமான பேசுபொருள் அல்ல. அது நாவலின் உணர்வுத்தளத்தையே பாதிக்குமளவுக்கு அடிப்படையான ஆற்றலாக இருக்கிறது.

நாலுகட்டு வீட்டை வாங்கத் தேவையான நாலாயிரம் ரூபாயை அப்புண்ணி எப்படி ஏற்பாடு செய்கிறான்? வயநாட்டின் தேயிலைத்தோட்டத்தின் ஃபீல்ட் ரைட்டர் வேலையிலிருந்து கிடைக்கும் சம்பளம் என்பதுதான் அதற்கான பதில்.  மாதாமாதம் நூற்றிநாற்பது ரூபாயும் ஐந்துமாத போனஸும் சேர்த்ததுதான் இந்த சம்பளம். செலவு நாற்பதுரூபாய், மிச்சமுள்ள நூறு ரூபாயை சேமித்துவைக்கலாம் என்று அப்புண்ணி நினைப்பதாக நாவலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவன் சொந்த ஊரான கூடல்லூரில் சம்பளம் வாங்கும் ஒரே ஆளான ராமகிருஷ்ணனால் அப்புண்ணியின் இந்த சம்பளத்தை கனவுகாணக்கூட முடியாது. 1940 களில் ஆங்கிலேயர்களின் தேயிலைத்தோட்டம் போன்ற பெரிய முதலாளித்துவம் சார்ந்த விவசாயக் கம்பெனிகளில் மட்டும் கிடைக்கக்கூடிய பெரிய வருமானம். கேரளத்தில் பணம்சார்ந்த பொருளாதாரம் முதலில் கூடல்லூர் போன்ற நெல்விவசாயம் செய்யும் இடங்களில் அல்ல, வயநாடு, ஹைரேஞ்ச் (கேரளத்தில் தேயிலை, ரப்பர், மிளகு, ஏலாக்காய்  எஸ்டேட்கள் உள்ள மூணார், தேக்கடி, வாகமண், குமிளி, பீர்மேடு போன்ற மலைப்பிரதேசங்கள்) போன்ற மலைத்தோட்டங்களில்தான் (estate) என்று ”கேரளத்தில் நவீனத்துவம்” என்ற நூலில் டாக்டர்.பி.கெ.மைக்கல் தரகன் சுட்டிக்காட்டுகிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் ஐரோப்பியர்கள் மேற்குதொடர்ச்சிமலையின் பகுதியான வயநாட்டில் உருவாக்கிய பணப்பயிர்களிலிருந்து கொட்டிய பணம்தான் சம்பளமாக, வங்கி முதலாக, கம்பெனிகளின் லாபமாக ஆனது என்று அவர் குறிப்பிடுகிறார். அப்படி நாணயம் விளையும் தோட்டம்தான் அப்புண்ணியை அவன் சொந்த ஊரான கூடல்லூரின் நிலப்பிரபுத்துவ பொருளியல் அமைப்பின் போதாமையிலிருந்து மீட்கிறது. அப்புண்ணி போய்சேரும் இந்த வயநாட்டு தோட்டம், அதிலிருந்து உருவாகும் பணம் இவற்றுடன் ஒப்பிடமுடியாது என்றாலும், பணம் விளையும் மையங்களான பல  சிறிய அளவிலான தோட்டங்கள் நாலுகட்டு நாவலில் பல இடங்களில் வருகிறது. அதிலொன்று, அவ்வப்போது தேவைப்படும் சின்ன தொகைக்காக சங்கரன்நாயர் நட்டுவளர்த்தும் நேந்திரம்பழத் தோட்டங்கள்.

நாலுக்கெட்டு வடிவத்தில் அமைந்த வீடு

ஆனால், அதைவிட வலுவான, முக்கியமான கதைப்போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையிலான செயல்பாடு  கோந்துண்ணிநாயர் சையத் அலிக்குட்டியுடன் சேர்ந்து ஆற்றங்கரையில் மரவள்ளிக்கிழங்கு நாற்றுகளை நட்டு உருவாக்கும் பெரிய தோட்டம். 1930-ல் ஆயிரம் ரூபாய் விலை கிடைக்கக்கூடிய தோட்டம். அந்த தோட்ட விவசாயத்தில் சையத் அலிக்குட்டியின் சதியால் இறப்பவர்தான் கோந்துண்ணிநாயர்- தோட்ட விவசாயத்தின் ரத்தசாட்சி. அந்த ரத்தசாட்சியின் மகன் அப்புண்ணி, அவன் தந்தையின் நிறைவேறாத விழைவை தன் சொந்த வாழ்க்கையால் நிறைவேற்றுகிறான். தந்தையால் கனவுகூட காணமுடியாத அளவுக்கு, தந்தையின் பகடையில் ஒருமுறைகூட விழாத பெரிய எண்ணை (ஆயிரம் ரூபாயின் பலமடங்கு) பணம்விளையும் பெரிய தோட்டத்திலிருந்து அவன் தனக்கு தேவையானதை அறுவடை செய்துகொள்கிறான். தந்தை நட்டு நஷ்டப்பட்டுப்போன தோட்ட்டத்தை அதைவிட பெரிய தோட்டத்தால் மீண்டெடுத்து தந்தையின் வாழ்நாள் கனவை மகன் நிறைவேற்றுகிறான். தந்தை, பணம், தோட்டம்- இந்த மூன்று பேசுபொருள்கள்தான் நாலுகட்டு வீட்டை/நாவலை தாங்கிப்பிடிக்கும் மூன்று தூண்கள். அதோடு மகன் என்ற நான்காவது தூணும் சேரும்போது நாலுகட்டின் சதுர அமைப்பு முழுமையாகிறது. மருமக்கத்தாய(தாய்வழி) சொத்துரிமையை அழித்து உருவாகிவரும் தந்தையை மையமாகக்கொண்ட குடும்ப அமைப்பு, அதை சாத்தியமாக்கிய பணத்தை அடிப்படையாகக்கொண்ட பொருளாதார அமைப்பு, அந்த பணத்தை உருவாக்கிய, வளரச்செய்த தோட்டங்களின் வளர்ச்சி- கேரளவரலாற்றில் நாற்பதுகளில் நிகழ்ந்த இந்த பெரிய மாற்றத்தை இறந்த தந்தையின், அந்த தந்தையை நினைவிலும், செயல்பாட்டாலும் மீட்டுருவாக்கம் செய்யும் மகனின் கதையாக காட்டுகிறது என்பதுதான் நாலுகட்டு நாவலின் தனித்தன்மை. நாலுகட்டு நாவலில்  வரலாற்று அம்சம் கூடல்லூர் என்ற கிராமத்தின் நிலப்பரப்பிலேயே பதிந்திருக்கிறது என்று சொல்லலாம். முதலில் நாலுகட்டு வீடுகள், நெல்வயல்கள், வயல்களின் எல்லையில் ஆறு, ஆற்றங்கரை, கரைக்கு அப்புறம் ரயில்நிலையம். ரயில்நிலையத்திலிருந்து புறப்படும் ரயில்கள் பாலங்களைப்போல. அவை அங்குள்ளவர்களை நிலப்பிரபுத்துவ அமைப்பின் போதாமையிலிருந்து கரையேற்றி சுதந்திரமான பொருளாதார இருப்புகளான, பணம் விளையும் நிலங்களான எஸ்டேட்களுக்கு இட்டுச்செல்பவை. இந்த நாவலில் விரிவாக சித்தரிக்கப்படும் கூடல்லூர் குறியீடுபோல. அந்த விவரணைகள் வழியாக நாவலின் கதை நடக்கும் காலகட்டத்தின் ஒட்டுமொத்தமான வரலாற்று சித்திரம் பிரதிபலித்துக்காட்டப்படுகிறது. அந்த நாவலின் கதை நிகழும் காலத்திற்கு அப்பால் எதிர்காலத்தில் படியிறங்கி, வயல்களைக்கடந்து, ஆற்றங்கரையை கடந்து, ரயிலேறி அறியாத நகரங்களுக்கு செல்லப்போகிற எத்தனையோ ஆண்களின் பயண வரைபடமாக கூடல்லூர் என்ற ஊர் ஆகப்போகிறது. அவ்வாறுதான் அந்த ஊர் வரலாற்றில் பதியப்போகிறது. நாலுகட்டு நாவலில் வரலாற்று நிகழ்வுகள் ஒன்றுகூட இல்லை. ஆனாலும், அந்த நிகழ்வுகள் கதாப்பாத்திரங்களில் உணர்வெழுச்சிகளை உருவாக்கிய கருக்களாக, மனித உறவுகளில் எஞ்சும் அடையாளங்களாக, கூடல்லூர் என்ற ஊரின் வரைபடத்தின் மாதிரியாக தன் இருப்பை வாசகனில் அறிவுறுத்திக்கொண்டேயிருக்கிறது. இரட்டை பரிமாணம் கொண்ட தழும்பேறிய கிராமத்தில் காலம் உருவாக்கிய சுவடுகளாக வரலாறு வெளிப்படலாம், குறைந்தபட்சம் இலக்கியப்படைப்புகளிலாவது அப்படி வெளிப்படலாம். அதுதான் நாலுகட்டு நாவல்.

அடிக்குறிப்புகள்:

மருமக்கத்தாயம்– கேரளத்தில் எப்போதென்று அறியமுடியாத காலம் முதலே மருமக்கள் சொத்துரிமை முறை இருந்து வருகிறது. இது தாய்வழிச் சொத்துரிமை முறையின் இன்னொரு வடிவம். சொத்துரிமை முழுக்க முழுக்க பெண்களுக்கு இருந்தது. பெண்களின் சொத்துக்கு நிர்வாகியாக , உரிமை இல்லாதவராக, அவர்களின் மூத்த சகோதரர் இருந்தார். அவர் காரணவர் என்று அழைக்கப்பட்டார். பெண்களின் சொத்து அப்பெண்களின் பெண்களுக்கே செல்லும். மகன்களுக்குச் செல்லாது. அந்த மகன்களுக்கு மகள் இருந்தால் அவளுக்குச் செல்லும். அரசுரிமை  போன்ற ஆண்கள் வகிக்கும் பதவிகள் காரணவராக இருக்கும் மாமனில் இருந்து மூத்த சகோதரியின் மூத்த மகனுக்குச் செல்லும்.

 ஒரு சிக்கலான சொத்துரிமை முறை. இது தொடர்ந்து பல மாற்றங்களுக்கு உள்ளாகி வந்திருக்கிறது. இந்தச் சொத்துரிமை முறை திருவிதாங்கூரில் அரசநிர்வாகத்துடன் தொடர்பு கொண்டிருந்த எல்லா சாதியினருக்கும் பரவியிருந்தது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மருமக்கள் சொத்துரிமை என்பது சீரழிந்த நிலையை அடைந்தது. அது பெண்ணுக்குச் சொத்துரிமை என்ற அடிப்படையில் உருவானது. ஆனால் நடைமுறையில் பெண்கள் வீட்டுக்குள் அடைபட பெண் பெயரில் ஆண்கள் சொத்தை கையாள ஆரம்பித்தார்கள். அப்படி கையாள்பவர் தன் சொந்த மனைவியின் குழந்தைகளுக்கு அதை அதிகாரபூர்வமாகக் கொடுக்க முடியாது. ஏனென்றால் அவரது மருமக்களுக்கு உரியது அந்தச் சொத்து. ஆகவே சொத்தை பலவகையிலும் திருடி தன் மக்களுக்குக் கொடுத்தனர் சிலர். மாமன் ஒழுங்காக இருந்தாலும் அவர் தங்கள் சொத்தை திரூவதாக எண்ணினர் மருமக்கள். குடும்பங்கள் சண்டைகளில் சீரழிந்தன

பறை– கேரளத்தின் பழைய அளவைமுறைகளில் ஒன்று பறை. நெல்லை அளப்பது நாழி, பறை போன்ற அளவைப்பாத்திரங்களில்தான்.  இன்றைய அளவைப்படி ஒரு பறை நெல் என்பது கிட்டத்தட்ட 10 kg விற்கு சமானமானது. பறை, 

விவசாய நிலங்களையும் பறை என்ற கணக்கில்தான் அளந்தனர். உதாரணமாக, ’பத்து பறை கண்டம்(வயல்)’ என்றால், பத்து பறைகளில் சேமிக்கும் நெல்விதைகளை விதைக்கும் அளவுக்கான நிலம் என்று பொருள்.

வலிய பறை- தங்கள் விவசாய நிலத்தை குத்தகைக்கு கொடுத்திருக்கும் பெரிய நிலப்பிரபுக்கள் தங்களுக்கு வரவேண்டிய குத்தகையை நெல்லாக வாங்கிக்கொள்வார்கள். அதை வழக்கமான பறை அளவுகோலைவிட(10 kg) கொஞ்சம் அதிகமாக வரும் பாத்திரத்தில் அளந்து குத்தகைக்காரர்கள் நிலப்பிரப்புகளுக்கு அளிக்க வேண்டும், அதை வலிய பறை என்பார்கள்.

செறிய பறை (கள்ளப்பறை)- பெரிய நிலப்பிரப்புகள் தங்களிடம் கூலிவேலை செய்பவருக்கு அவர்களின் கூலியை நெல்லாக அளிக்கவேண்டும். அதை அவர்கள் அளவில் கொஞ்சம் சின்ன பாத்திரத்தில் (’பறை’ என்ற வழக்கமான அளவைவிட குறைவாக) அளிப்பார்கள். நிலப்பிரப்புக்களின் சுரண்டலுக்கு காரணமான இந்த அளவைப்பாத்திரத்தை கள்ளப்பறை என்பார்கள்.  

சம்பந்த உறவு– நம்பூதிரிகளின் வழக்கப்படி குடும்பத்தில் மூத்த மகனுக்கு மட்டுமே திருமணம் செய்து வைக்கப்படும். மீதியுள்ள மகன்கள் நாயர் பெண்களுடன் சுதந்திரமான உறவில் இருக்க அனுமதிக்கப்பட்டனர். அது சம்பந்த உறவு என்று சொல்லப்படுகிறது. அந்த உறவில் உள்ள நம்பூதிரி ஆணும் நாயர் பெண்ணும் எந்த நிலையிலும் அந்த உறவை முறித்துக்கொள்வதற்கான சுதந்திரம் உண்டு.  

சர்ப்பம் துள்ளல்– கேரளத்தின் ஒவ்வொரு குடும்பங்களுக்கும் அவரவருக்கான நாக தெய்வங்கள் உண்டு. அவை வீட்டின், வயல்களின் எல்லைகளில் உள்ள காடுகளில் பிரதிஷ்டிக்கப்பட்டிருக்கும். அவற்றை சர்ப்பக்காவு என்று அழைப்பார்கள். நாக-தெய்வங்களை சாந்திபடுத்துவதற்காகவும், குடும்ப தோஷ நிவர்த்திக்காகவும் சர்ப்பக்காவுகளில் நிகழ்த்தப்படும் சடங்கு பாம்பின் துள்ளல் அல்லது சர்ப்பம் துள்ளல். அந்த சடங்கை செய்வது  நாக வழிபாட்டை அடிப்படையாகக்கொண்ட புள்ளுவர் ஜாதியை சேர்ந்த புள்ளுவனும், புள்ளுவத்தியும். காவில் நாக பிரதிஷ்டை முன் நாகத்தை வண்ணப்பொடிகளால் வரைந்து இரவு முழுக்க புள்ளுவத்தி சன்னதத்துடன் ஆடும் சடங்கு இது. 

பறம்பு– மேடான நிலப்பகுதி. அங்கு விவசாயம் செய்யமுடியாது, அடர்ந்த காடாக இருக்கும். அதை திருத்துவது கடினமானது. திருத்தி வீடு கட்டிக்கொள்ளலாம் அல்லது தென்னை அல்லது தேக்கு போன்ற மரங்களை நடலாம், பூச்செடிகளை வளர்க்கலாம். 

Republished with permission from the translator Azhagiya Manavalan.

எம்.டி. வாசுதேவன் நாயரின் “நாலுக்கெட்டு” நாவலை முன்வைத்து – விமர்சகர் கே.சி. நாராயணின் கட்டுரை | தமிழ் மொழியாக்கம் – அழகிய மணவாளன்

error: Feel free to share the article link. Please contact Mozhi for rights to copy any content.