

வளர்வான். வளர்ந்து பெரிய ஆளாவான். கைகளுக்கு நல்ல திடமிருக்கும். அப்போது யாருக்கும் பயப்பட வேண்டியதில்லை. தலைநிமிர்த்தி நிற்கலாம். ‘யாரடா’ என்று கேட்டால் தயங்காமல் சொல்லலாம். “நான்தான் கோந்துண்ணி நாயர் மகன் அப்புண்ணி.”
அன்று, ஒருமுறையாவது செய்தாலிக்குட்டியைப் பார்க்காமல் இருக்கமுடியாது. அதற்குப் பிறகுதான் பழிவாங்கல். செய்தாலிக்குட்டியின் கழுத்து கைகளுக்கிடையில் நெரிபடும்போது சொல்வான் “நீதானே, நீதானே . . . என் . . .”
– அதை நினைக்கும்போதே அப்புண்ணியின் கண்களில் நீர் துளிர்க்கும்.
செய்தாலிக்குட்டியுடன் மோதுகிற காட்சி அப்புண்ணியின் கற்பனையில் பல தடவை விரிந்ததுண்டு. கண்களைத் மூடித் தூக்கம் வராமல் படுத்திருக்கும் போதும், குண்டுங்ஙல் வீட்டுப் படிக்கல்லில் மஞ்சாடி மூட்டில் மதிய நிழலில் தனியாக அமர்ந்திருக்கும்போதும் எல்லாம்.
யாரிந்த செய்தாலிக்குட்டி? அப்புண்ணி அவனைப் பார்த்ததில்லை. பார்த்துவிடக் கூடாது என்பதுதான் அவனுடைய பிரார்த்தனையும். கொஞ்ச காலம் கழிந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம். வளர்ந்து பெரிய ஆளான பிறகு அவனைத் தேடிக் கண்டு பிடித்துக்கொள்ளலாம்.
சாயங்காலம் கடைக்குப் புறப்படும்போது செய்தாலிக்குட்டியைப் பற்றி அவன் யோசிக்கவுமில்லை. அவனைப் பார்ப்போம் என்று நினைக்கவுமில்லை.

பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்கு வந்து சேர தாமதமாகிவிட்டது. அம்பல வட்டம் நண்பர்களுடன் நடந்துகொண்டிருந்தான். ஷாரடியின் மேல்புறம் முந்திரித் தோப்பில் கல்லெறிந்து பழம் பறித்தான். பரங்ஙோடனின் தோப்பிலோ அச்சுதக்குறுப்பின் தோப்பிலோ பழம் பறிப்பதைப் பற்றி நினைக்கவே வேண்டாம். மோசமான ஆட்கள். பிடித்தால் தாய்க்கும் தகப்பனுக்கும் சேர்த்துத் திட்டு விழும். ஷாரடியிடம் கேட்டாலே போதும். ‘பறிச்சிக்கடா’ என்று விடுவார். வயதான அவருக்கு முந்திரிக் கொட்டை கிடைத்தால் போதும். ஷாரடிக்குக் குழந்தைகள் இல்லை என்பதால்தான் மற்ற பையன்கள் மீது கொஞ்சம் அன்பு காட்டுகிறாராம்.
பழம் பறித்து முடித்து குன்றின்மீது வந்ததும் நனைந்துகிடக்கும் புல் கட்டைகளை மிதித்துப் பெயர்த்து வழுக்குப்பாதையாக்கி விளையாடினான். நேரம் போனதே தெரியவில்லை.
பள்ளிக்கூடம் விட்டு நேராக வீட்டுக்கு வரும் நாட்களில் அம்மா இல்லத்திலிருந்து1 வந்திருக்க மாட்டாள். அடுக்களை உறியில் வைத்திருக்கும் கஞ்சிப்பாத்திரத்தை எடுத்து ஒரே மூச்சில் குடித்துவிட்டு குடிசை முத்தாச்சியின் பக்கத்தில் போய் ஏதாவது பஞ்சாயத்து பேசிக்கொண்டிருக்கும்போது அம்மாவும் வந்து சேருவாள்.
அன்று அவன் வரும்போது இரவு உணவுக்கான அடுப்பில் அம்மா உமியை எறிந்து தீ மூட்டிக்கொண்டிருந்தாள்.
“பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்கு வர்றதுக்கு ஏண்டா இவ்வளவு நேரம்?”
“ஒண்ணுமில்லம்மா.”
“எத்தனை வாட்டி சொல்லியிருக்கேன், கருக்கலுக்குள்ளே வீடு வந்து சேரணும்னு.”
அப்புண்ணி பதிலெதுவும் சொல்லவில்லை. அவனுக்குத் தெரியும். அம்மாவிடமிருந்து கிடைக்கும் திட்டு அதிக பட்சம் இவ்வளவுதான் என்று.
கஞ்சியை நின்றபடியே உறிஞ்சிக் குடித்தான். அம்மா சொன்னாள்:
“எஞ்செல்லம் போயி அந்த ஈசுபு கடையிலேருந்து ரெண்டணாவுக்குத் தேங்காண்ணெ வாங்கியா.”
அவன் வெளியே பார்த்தான். வெயில் சுத்தமாக மாய்ந்து போயிருந்தது. இருட்டுப் படரவில்லைதான். ஆனால், வானம் இருண்டு கிடந்தது. இருபுறமும் தாழை வளர்ந்து கிடக்கும் காட்டினூடே, இருட்டிய பிறகு குறுக்குப்பாதையில் போக அவனுக்குக் கொஞ்சம் பயம். அந்தப் பாதையோரத்தில்தான் மந்திரவாதி ஏரோமனின் உடல் தகனம் செய்யப்பட்டது. அப்புண்ணி தயங்கி நின்றான்.
“நாளைக்கு வாங்கிக்கலாம்மா.”
“தொட்டுப் புரட்டுறதுக்குக்கூட ஒரு துளி எண்ணெயில்லடா. ஒரே ஓட்டமா போய் வாங்கியாந்துடு.”
அவன் தயக்கத்துடன் நின்றான். ‘பயம்மா இருக்கும்மா’ என்றால், அம்மா வேண்டாம் என்று சொல்லி விடுவாள்தான். ஆனால், அது கௌரவக் குறைவு. அப்படிச் சொல்கிற அளவுக்கு அவன் சின்னப் பையனுமில்லை. எட்டாம் வகுப்புப் படிக்கிறான். வகுப்பில் மானிட்டரும்கூட!
“போயிட்டு வா அப்புண்ணி. சீக்கிரமா வந்தா, வெங்காயம் வதக்கி சோறு வெக்கிறேன்.”
பிறகு அவன் தயங்கவில்லை.
“குப்பியும் பைசாவும் எடுங்க.”
வெங்காயம் வதக்கிய சோறு என்பது சாதாரண விஷயமல்ல! அதன் ருசியை இரண்டோ மூன்றோ முறை மட்டுமே அவன் அனுபவித்திருக்கிறான். வாணலியில் சின்ன வெங்காயத்தை நறுக்கிப்போட்டு, தேங்காயெண்ணெய் விட்டு அடுப்பில் வைப்பாள் அம்மா. வெங்காயம் பொரிந்து வரும்போது, சட்டுவத்தில் சோற்றை அள்ளிப் போடுவாள். அதைக் கிண்ணத்தில் வைத்துப் பரிமாறும்போது ஒரு வாசம் எழும்.
ஹா . . ! நினைக்கும்போதே வாயில் நீரூறியது.
அணாவைச் சிவப்பு நிக்கர் பாக்கெட்டில் வைத்தான். குப்பியைக் கையிலெடுத்து விட்டு ஓட்டம் பிடித்தான். தாழைக்காட்டின் இடைவழியை அடைந்தபோது ஒரு நிமிடம் தயங்கி நின்றான். இல்லை, அவ்வளவு ஒன்றும் இருட்டில்லை. ஆனால், இருபுறமும் தாழைப்புதர் மண்டிக் கிடக்கிறதே?
தாழைப்புதரின் இடையிலுள்ள பொந்துகள்தான் நல்ல பாம்பின் வசிப்பிடம். தாழம்பூ வாசம் பாம்புகளுக்கு மிகவும் பிடிக்குமாம். நல்ல வாசம், நல்ல இராகம், அழகான பெண்கள் – இதுவெல்லாம் கொடிய விஷமுள்ள நல்ல பாம்புகளுக்குப் பிடித்தமானவை. விஷமுள்ள பாம்புகளுக்கு மட்டும்தானா?
இடைவழியிலுள்ள ஒவ்வொரு பள்ளமும், படிக்கல்லும், கல்லும், குழியும் அவனுக்கு மனப்பாடம். மெதுவாகப் போனால்தானே பயம்? அவன் குதித்தோடினான். புதர்க்காட்டின் தொடக்கத்தை அடைந்தபோது சற்று நிதானித்தான்.
இன்னும் ஒரு தோப்பைக் கடந்து விட்டால் போதும். ஆற்றங்கரையில்தான் கடை வீதி. எல்லாமே வைக்கோல் வேய்ந்த சின்னச் சின்ன கடைகள். ஓடு வேய்ந்தக் கடை ஒன்றே ஒன்றுதான். அதில் வியாபாரம் கிடையாது. மாடியில் யாரோ தங்கியிருக்கிறார்கள்.
கடைகளில் விளக்கேற்ற ஆரம்பித்து விட்டார்கள். பெரும்பாலும் மங்கலான பதினாலாம் நம்பர் விளக்குகள். யூசுபின் கடையில் மட்டும்தான் பெட்ரோமாக்ஸ் இருந்தது. கிராமத்திலுள்ள பெரிய கடையும் அதுதான். சித்திரை விஷுவின்போது பட்டாசு விற்பனைக்கு வருவதும் யூசுபின் கடையில் மட்டும்தான். பட்டாம்பியில் இருந்து புதிதாக ஒரு தையல்காரன் வந்திருந்தான். கூடலூரின் முதல் தையல்காரன். தையல் மெஷினுடன் யூசுபின் கடையில்தான் அவன் உட்கார்ந்திருப்பான்.
யூசுபின் கடைக்குச் செல்வது அப்புண்ணிக்கு ரொம்பப் பிடிக்கும். துணி தைப்பதையும் பார்க்கலாம். கடகடவென்ற சத்தத்துடன் ஊசி உயர்ந்து, தாழ்ந்துகொண்டிருப்பதும் பல நிறங்களிலுள்ள துணிகள் சுருள் சுருளாக மடிவதும் கண்கொள்ளாக் காட்சிகள்.
அம்மாவிடம் சொல்ல வேண்டுமென்று நீண்ட நாட்களாகவே நினைக்கிறான் அப்புண்ணி. இனி, ராவுத்தரிடமிருந்து சட்டை வாங்க வேண்டாம் என்று சொல்ல வேண்டும். ‘ஜவுளி . . . ஜவுளி’ என்று கூவிக்கொண்டு போகும் ராவுத்தரைக் கூப்பிட்டு வாங்கியதுதான் அவனிடமிருக்கும் மூன்று சட்டைகளும். அதில், இரண்டு சட்டைகள் அளவில் பெரியவை. இன்னொன்று, ரொம்பவும் குட்டையானது. துணி வாங்கி தையல்காரனிடம் கொடுக்க வேண்டும். கடையிலுள்ளவர்கள் பார்த்துக்கொண்டிருக்க அவன் அளவெடுப்பான். டேப் வைத்து அளவெடுத்துத் தைத்தால் சரியாக இருக்கும். அதை வெட்டுவதையும் தைப்பதையும் கொஞ்சம் உரிமையுடன் பார்த்துக்கொண்டும் நிற்கலாம் அல்லவா?
அப்புண்ணி வரும்போது யூசுபின் கடையில் கூட்டம் அதிகமாக இருந்தது. வேலை முடிந்து கூலி வாங்கி வரும் செறுமிகள்2 சாதனங்கள் வாங்கும் நேரம் அது.
“ரெண்டு காலணாக்கு கெரஸின்.”
“நாழி உப்பு.”
“காலணாக்கு வெத்திலயும் போயிலையும் சேத்து.”
“என்னைக் கொஞ்சம் சீக்கிரமா அனுப்பி வைங்க முஸலியாரே.”
கல்லாப்பெட்டியின் முன் உட்கார்ந்திருப்பது மட்டுமே யூசுபின் வேலை. ஆட்டுக் கடாபோல் குரல்வளையை நோக்கி உள்வளைந்த வெள்ளைத்தாடி வைத்த முஸலியார் பொருட்களை எடுத்துக்கொடுப்பார்.
கூட்டம் அதிகமாக இருந்தது. நெரிசலின் இடையிலும் செறுமிகள் குடில் காரியங்களையும் தம்புரான் 4படிக்கல் விசேஷங்களையும் பரிமாறிக் கொண்டனர். தலையில் ஊற்றிக்கொடுத்த ஒன்றரையணா தேங்காயெண்ணெயில் ஒரு சொட்டு தரையில் விழுந்ததற்காக ஒரு செறுமிக்குமரி முஸலியாரைக் கடிந்துகொண்டாள்.
தையல்காரன் மெஷினைக் கடைக்குள் வைத்துவிட்டுப் போயிருந்தான்.
அப்புண்ணி கடைத்திண்ணையில் ஒதுங்கி நின்றிருந்தான். “தெய்வமே, நேரம் இருட்டிடுச்சே!”
கருக்கல் நேரத்தில் தாழைப்புதர்களில் நல்ல பாம்புகள் வந்தடையும்.
பாதையோரத்தில் மந்திரவாதி ஏரோமன் தகனம் செய்யப்பட்டிருக்கிறான்.
“ரெண்டணாவுக்குத் தேங்காயெண்ணெய்.” – அப்புண்ணி கேட்டான்.
செறுமிகளின் ஆரவாரத்தினிடையே முஸலியாரின் காதுகளில் விழவில்லை.
அவர்களிடையே முண்டியடித்தேறுவதற்கான முயற்சியையும் அவன் மேற்கொண்டு பார்த்தான். தீட்டுப்பட்டாலும் பரவாயில்லை. எப்படியும் வீட்டுக்குப் போய் குளிக்க வேண்டியது தானே? அவர்களது கறுத்த உடலின் அருகில் சென்றபோது வேர்வையும் எண்ணெயும் சேறும் கலந்த, குடலைப் புரட்டுகிற ஒரு நெடி. அவன் அப்படியே பின் வாங்கி, பெட்ரோமாக்சைச் சுற்றி வரும் பூச்சிகளை வேடிக்கைப் பார்த்தபடி நின்றிருந்தான்.
அப்போது இரண்டு பேர் கடைக்கு வந்தார்கள். வெள்ளைச் சட்டையும் நரை படர்ந்த சிறு மீசையுமுள்ள தடித்த குள்ளமான ஒருவர். இன்னொருவர், தோணித்துறை பக்கத்தில் ஒரு சில நாட்கள் சாயாக்கடை நடத்திப் பணத்தை இழந்த பத்மனாபன் நாயர். அப்புண்ணிக்கு அவரைத் தெரியும். அவருடைய இரண்டு பையன்கள் அப்புண்ணியின் வகுப்பில்தான் படிக்கிறார்கள்.
அப்புண்ணி இன்னும் கொஞ்சம் அருகில் நெருங்கி, சுவரில் சாய்த்து அடுக்கி வைக்கப்பட்டிருந்த நிரவுப் பலகைகளின்மீது சாய்ந்து நின்றான்.
“யாவாரம் சக்கைப்போடு போடுது போலிருக்கே முதலாளி?”
தடித்த, உயரம் குறைந்த வெள்ளைச் சட்டைக்காரன் சத்தமாகச் சொன்னான். குரல் கேட்ட செறுமிகள் திரும்பிப்பார்த்தனர். மேசையின் முன்னாலிருந்து சில்லறை எண்ணிக்கொண்டிருந்த யூசுபால் வந்தவனைப் பார்க்க முடியவில்லை.
“யாரது?”
தேக்கு இலையில் தனியாவைப் பொட்டலம் கட்டிக்கொண்டிருந்த முஸலியார் சிவந்தப் பற்கள் முழுவதையும் காட்டிச் சிரித்தபடியே சொன்னார்:
“றப்பே! இது யாரு, இன்னும் நீ மய்யத்து ஆகலையா ஷைத்தானே?”
“நாம எப்பவும் ரெடிதான் முஸலியாரே. இஸ்றாயீலுக்குதான் என்னை வேண்டாம் போலிருக்கு.”
கல்லாவிலிருந்து எழுந்து வெள்ளைச் சட்டைக்காரனைப் பார்த்த யூசுபும் சொன்னான்: “றப்பே, இது யாரு?”
முஸலியார் கேட்டார்: “எப்படா வந்த நீ?”
“அஞ்சரை மணி வண்டியில”
பொட்டலம் போடுவதினிடையே முஸலியார் சொன்னார்: “சைத்தான் கொஞ்சம் தேறியிருக்கான். இல்லையா பப்பனாவன் நாயரே?”
பீடியைப் பற்ற வைத்து, திண்ணையில் உட்கார்ந்து செறுமிகளைப் பார்த்தபடியே இழுத்துக்கொண்டிருந்த பத்மநாபன் நாயர் சொன்னார்:
“ஆமா . . . வெளியூர் சோறில்லையா?”
எச்சில் துப்புவதற்காக முற்றத்தை நோக்கித் திரும்பிய நாயர், அப்புண்ணி நிற்பதைப் பார்த்தார்.
“நீ எதுக்குடா இங்க நிக்கிறே?”
எதுவும் நடந்துவிடவில்லைதான். இருந்தாலும் அப்புண்ணிக்கு அழுகையாக வந்தது. இன்னும் கொஞ்ச நேரத்தில் அழுது விடுவாமோ என்று பயந்தான். நாயரின் முகத்தைப் பார்க்காமலேயே சொன்னான்: “தேங்காயெண்ணெ வாங்க.”
செறுமிகளிடையே சிறு சலசலப்பு உருவானது.
வெள்ளைச் சட்டைக்காரன் பத்மனாப நாயரிடம் கேட்டான்: “யாரிந்தப் பையன்?”
“நம்ம கோந்துண்ணியாரோட மகன். வடக்குப்பாட்டு வீட்டிலே . . .”
அப்புண்ணி தலையை உயர்த்தவில்லை.
செறுமிகள் திடீரென்று அமைதியானார்கள். அப்புண்ணியின் அருகில் நின்றிருந்த இரண்டு பேர் தங்களுக்குள் எதுவோ பேசிக்கொண்டனர். முன்னால் நின்றவர்கள் விலகிக்கொண்டனர். இப்போது, முண்டியடிக்காமல் அவனால் முன் நகர முடிந்தது. குப்பியை வாங்கி, புனலை வைத்து, சிறு கரண்டியை டப்பாவுக்குள் அமிழ்த்தி, இரண்டு முறை ஊற்றிய முஸலியார், துளியூண்டு எண்ணெயைக் கொசுறாகவும் ஊற்றினார்.
காசைக் கொடுத்து விட்டு, காய்ந்த இலையைச் சுருட்டிக் குப்பியை மூடிப் புறப்பட இருக்கும்போது வெள்ளைச்சட்டைக்காரன் கேட்டான்: “தனியாகப் போயிட முடியுமா?”
தன்னிடம்தான் கேட்கிறான் என்று அப்புண்ணிக்கு முதலில் புரியவில்லை.
“பயங்கர இருட்டா இருக்கே பிள்ளை?”
யாருக்கும் கேட்காமல் எதையோ முணுமுணுத்தான் அப்புண்ணி. அதிகாரியின் வீட்டில் வேலை செய்யும் செறுமிக் கிழவி கோச்சி, சத்தமாகச் சொன்னாள்: “நில்லுங்க சின்னத் தம்புரானே, தனியாகப் போகவேண்டாம். அடியேனும் அந்த வழிதான் வரேன்.”
கோச்சி, காசும் வெற்றிலையும் வைக்கும் தாழைமடலால் முடைந்த வட்டிலையும் கடையிலிருந்து வாங்கிய சாமான்களையும் தனது பெரிய முந்தானையில் கட்டிக்கொண்டு அப்புண்ணியின் பின்னால் புறப்பட்டாள். கையிலிருந்த ஓலைப் பந்தத்தைப் பக்கத்துக் கடையின் இரட்டைச் சிமினியில் பற்ற வைத்துவிட்டுச் சொன்னாள்: “நடங்க, சின்னத் தம்புரானே.”
அப்புண்ணியின் பயம் விலகியது. புதர்க்காட்டின் இடைவழியில் தாழம்பூவின் மெல்லிய நறுமணம் தங்கி நிற்பதை உணர்ந்தான். இருந்தாலும், காலடியில் வெளிச்சமிருந்தது.
வழியில் வைத்து அப்புண்ணி கேட்டான்: “யாரு கோச்சி அது?”
“யாரைக் கேக்குறீங்க சின்னத் தம்புரானே?”
“ஈசப்பு கடையில . . ?”
“அவருதான் செய்தாலிக்குட்டி மாப்பிளை. தெரியாதா?”
“எந்த செய்தாலிக்குட்டி?”
“முண்டத்தாயத்து . . . ஊரை விட்டுப் போயி ரொம்பக் காலத்துக்குப் பிறகு வந்திருக்காரு.”

செய்தாலிக்குட்டி!
உடம்பினூடே ஒரு அதிர்வு கடந்துபோனதுபோலிருந்தது அப்புண்ணிக்கு. தடித்துக் குறுகிய முரட்டுக் கைகள். மயிரடர்ந்த உடல். இரத்த நிறத்தில், உருண்டைக் கண்கள் – அவன்தான் செய்தாலிக்குட்டி. அவனைத்தான் . . .
கோயில் முற்றத்தில் கதகளி நடந்த அன்று, அதிகாலையில் கண் விழித்தபோது கண்ட காட்சிதான் முதலில் நினைவுக்கு வந்தது. துச்சாதனனின் மார்பிலேறி அமர்ந்த பீமன் வயிற்றைக் கிழித்துக் குடலை வெளியே எடுக்கிறான். அதுபோல் செய்தாலிக்குட்டியின் மார்பில் . . .
ஆனால், அப்புண்ணிக்குப் பலம் போதாது. அவன் வளரவில்லை.
அப்புண்ணி மூச்சு வாங்கினான்.
இருந்தாலும், கல்வெட்டாங்குழியின் விளிம்பிலோ ஆனைப்பாறையின் கீழுள்ள இடைவழியிலோ நடக்கும்போது இலேசாக தள்ளிவிட்டால் . . .
ஒரு கல்லைத் தூக்கித் தலையில் போட்டால் . . .
“சின்னத் தம்புரான் இனி போங்க.”
வீடு வந்துவிட்டதை அப்புண்ணி அப்போதுதான் உணர்ந்தான்.
“அப்புண்ணீ . . .”
அம்மா கூப்பிடுவது காதில் விழுந்தது. அம்மா வாசலிலேயே காத்து நிற்கிறாள். அவன் படியைக் கடந்து மூச்சு வாங்க அம்மாவின் அருகில் சென்றான்.
“மூத்தாரு தெய்வங்களே, நான் பதறிப் போய் நிக்கிறேன்.”
அவன் பதில் சொல்லவில்லை. கல்வெட்டாங்குழியில் விழுந்து சிதைந்த குட்டைத் தலையிலிருந்து இரத்தம் வடிகிறது.
“ஏன் அப்புண்ணி இவ்வளவு நேரம்?”
“கடையில நல்ல கூட்டமா இருந்துச்சும்மா.”
அழுக்குத் துண்டை சுற்றிக்கொண்டு கிணற்றங்கரையில் குளிக்கச் சென்றான் அப்புண்ணி. தண்ணீரை மொண்டு தலையில் ஊற்றிக்கொடுத்தாள் அம்மா. இப்போதும் அவனைத் தேய்த்துக் குளிப்பாட்டுவது அம்மாதான். முதலில் அவன்தான் தலையைத் துவட்டுவான். முடியைப் பிடித்துப் பார்த்துவிட்டு ஈரம் போகவில்லை என்று சொல்லி, மீண்டும் அழுத்தித் துவட்டி விடுவாள் அம்மா.
வதக்கிய வெங்காயச் சோற்றுக்கு அன்று போதுமான சுவை தெரியவில்லை.
முன்வாசலையும் அடுக்களைக் கதவையும் சாத்தி, பாத்திரங்களைக் கழுவிக் கவிழ்த்து வைத்த அம்மா, உள்ளே இருந்த அறையில் மெத்தை போட்டு, பக்கத்தில் ஒரு பாயும் விரித்தாள்.
விளக்கு அணைந்து இருட்டுக் கவிழ்ந்தபோது ஏனோ அவனுக்குள் பயம் உருவானது. இருட்டில், குட்டைத்தலையும் இரத்த நிறம்கொண்ட இரண்டு கண்களும் தெரிந்தன.
“அம்மா . . . தூங்கிட்டீங்களா?”
“இல்லப்பா, ஏன்?”
“ம் . . . ம் . . .”
கண்களை இறுக மூடிக்கொண்ட அப்புண்ணி தூக்கம் சீக்கிரம் வரட்டுமென்று பிரார்த்தனை செய்தான்.
“அம்மா . . .”
அப்புண்ணியின் முதுகினூடே கையை நுழைத்து இறுக்கமாகப் பற்றிக்கொண்ட அம்மா கேட்டாள்: “என்னடா?”
அப்புண்ணி மீண்டும் தயங்கினான். சொல்லவா?
“நான் வந்து . . . செய்தாலிக்குட்டியைப் பாத்தேன்.”
எந்த செய்தாலிக்குட்டியை என்று அம்மா கேட்கவில்லை.
அவனை மேலும் இறுக்கமாக அரவணைத்து முதுகில் முகத்தை அமர்த்திய அம்மா சொன்னாள்: “எஞ்செல்லம் தூங்கு.”
அந்தக் கதையை அம்மா இதுவரை சொல்லவில்லை. குடிசைக்கார முத்தாச்சி பல தடவையாக சொன்ன ஓரளவுக் கதையை மட்டுமே அவன் கேட்டிருக்கிறான்.
அவர்களது வளவின் தெற்குப் பகுதியில்தான் குடிசை முத்தாச்சியின் வசிப்பிடம் அது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் குடிசைக்குப் போய் விடுவான் அப்புண்ணி.
ஆனால், முத்தாச்சி எப்போதும் அங்கேதான் இருப்பாள் என்று சொல்ல முடியாது. சில நேரங்களில் மஞ்சள் நிற கம்பளி சால்வையைப் போர்த்திக்கொண்டு கம்பை ஊன்றியபடி வெளியே சென்றுவிடுவாள். அந்த சால்வை கொழும்பில் இருந்து கொண்டுவந்ததாம். இரண்டு மூன்று நாட்கள் கழிந்த பிறகுதான் முத்தாச்சி திரும்பி வருவாள். தேந்தேத்து இல்லம், மாங்கோத்து இல்லம் போன்ற வழக்கமான சில வீடுகளுக்கும் வேறு இரண்டு மூன்று வீடுகளுக்கும் மட்டுமே அவள் செல்வாள். அங்கெல்லாம் அரிசியும் தேங்காயும் கிடைக்கும். கேட்காமலேயே அவர்கள் கொடுத்துவிட வேண்டும். இடையிடையே முத்தாச்சி தன்னைத்தானே ஆறுதல்படுத்திக்கொள்வதுபோல், “நான் ஒண்ணும் யாசகம் கேட்டுப் போறவ இல்ல” என்பாள்.
குடிசை முத்தாச்சியைத் தெரியாதவர்கள் என்று கூடலூரில் யாருமே கிடையாது. சிறு வயதில் முத்தாச்சி மூன்று புருஷன்களுக்கு வாழ்க்கைப்பட்டிருந்தாள். ஆனால், குழந்தைகள் இல்லை. முதல் புருஷன், முத்தாச்சியைத் தள்ளி வைத்தார். இரண்டாவதும் மூன்றாவதும் புருஷன்களைப் முத்தாச்சியே தள்ளி வைத்தாள். எழுபது வயதைக் கடந்த முத்தாச்சி, இளம் வயதினருடன் சேர்ந்து இப்போதும் திருப்பு அறுப்பாள்; கைகொட்டி விளையாடுவாள். ஓரளவு வசதியுள்ள வீடுகளுக்குச் சென்றால் ஒன்றோ இரண்டோ நாட்கள் தங்கியிருப்பாள். அங்கிருந்து புறப்படும்போது அவர்கள் அரிசியோ பணமோ கொடுக்க வேண்டும். அதுவும் இளம் வயதினர்தான் கொடுக்க வேண்டும். அரிசியும் பணமும் கொடுக்கும் இல்லத்தாரின் கொடை மனதையும் அருமை பெருமைகளையும் ஊரெங்கும் பறைசாற்றுவாள்.
இயன்ற காலத்தில் பிள்ளைத்தாய்ச்சிகளும் நோயாளிகளுமுள்ள வீடுகளுக்குச் செல்வாள். இன்று ஊரில் வாழ்கிற பலரும் பிறப்பதற்குக் காரணம் முத்தாச்சிதான். பலர் இறப்பதற்கும்கூட முத்தாச்சிதான் காரணமாக இருந்திருக்கிறாள். காலனின் வருகை குறித்துப் பேசுவது முத்தாச்சிக்குப் பிடிக்காது.
“முத்தாச்சியைத் தெக்குப் பார்க்க தூக்கிட்டுப்போறதுல உனக்கென்ன அவ்வளவு அவசரம் மகனே?” என்பாள். பிறகு, தனக்குத்தானே ஆறுதல்போல் சொல்லிக்கொள்வாள்: “என் சீட்டு அப்படியெல்லாம் சீக்கிரமாக் கிழிஞ்சிடாது.”
ஒரு சுற்றுப் போய் வந்தால், ஐந்தாறு நாட்கள் முத்தாச்சி குடிசையிலேயே இருந்துவிடுவாள். அந்நாட்களில் அப்புண்ணிக்கு பெரும் மகிழ்ச்சியாக இருக்கும். குடிசையில் கயிற்றுக்கட்டிலில் சென்று உட்கார்ந்தால் போதும். பயணத்தின்போது கிடைத்தவற்றில் உப்பிலிட்ட மாங்காய், தேந்தேத்து இல்லத்து பலாப்பழ அப்பளம் என்று நல்லவை ஏதேனும் இருந்தால் அது அப்புண்ணிக்குத்தான். கேட்பதற்கு இரண்டு வயதுக் குழந்தை கிடைத்தால்கூட போதும்; முத்தாச்சிக்குச் சொல்வதற்கென்று நிறைய செய்திகள் இருக்கும்.
அப்பாவைப் பற்றிய பல்வேறு செய்திகளை, முத்தாச்சி சொல்லித்தான் அவன் அறிந்துகொண்டான்.
“கோந்துண்ணி சாகும்போது நீ, இந்தா இம்புட்டுத்தான் இருப்பே.”
எல்லாப் பையன்களையுமே முத்தாச்சி, அப்பு என்றுதான் கூப்பிடுவாள். பெண் பிள்ளைகளாக இருந்தால் அம்மு என்பாள்.
அப்பா இறக்கும்போது அவன் முத்தாச்சியின் சுண்டு விரலின் பகுதியளவுதான் இருந்தான். அப்புண்ணிக்கு வேடிக்கையாக இருக்கும்.
அப்பாவின் மரணம் இயற்கையானது அல்ல; யாரோ விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டார்கள் . . .
“கோந்துண்ணியைப்போல ஒரு பாசக்கார மனுசன் இந்த ஊர்லேயே கிடையாது. யானைகூட பிடிக்க முடியாத ஒரு உடல் கட்டு. எங்க வச்சுப் பார்த்தாலும் சரி, முத்தாச்சிக்கு வெத்திலை பாக்கு வாங்குறதுக்குன்னு ஏதாச்சும் தந்துடுவான் . . .” என்று சொல்லி, அப்புண்ணியின் தலையைத் தடவியபடியே முத்தாச்சி சொல்வாள்: “கடவுள் அவளுக்குக் கொடுத்து வைக்கலைப்பு.”
அப்பாவைப் பற்றிய நினைவுகளில் எதுவுமே அப்புண்ணிக்குத் தெளிவாக இல்லை. ஆனால், அவனைப் பார்ப்பவர்கள் எல்லோரும் அப்பாவைப் பற்றியே பேசினார்கள். ஊரிலுள்ள அனைவருக்கும் அப்பா பிரியமானவராக இருந்திருக்கிறார். ஊரில் நடைபெறுகிற ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் கோந்துண்ணி நாயர் தேவைப்பட்டார்.
திருமணத்துக்கும் பதினாறு அடியந்திரத்துக்கும்8 பந்தல்கட்ட அவரும் கூடவே நிற்பார். ஆனால், அப்பாவின் குடும்பத்தாருக்கு மட்டும் சிறுவயது முதல் அவரைப் பிடிக்காது.
“அவன் தாயக்கட்டையை உருட்டிட்டு நடக்கட்டும். தான்தோன்றி” என்பதுதான் அப்பாவைக் குறித்து அப்பாவின் அம்மாவுடைய முடிவு. அந்தக் குடும்பத்துக்கே அப்பாதான் ஏக வாரிசு. அப்பாத்தா சாகும்போது அப்பா தன்னந்தனியன்.
கோந்துண்ணி நாயர் பேர்பெற்ற பகடை விளையாட்டு வீரர்.
ஓணம், சித்திரை விஷு, திருவாதிரை போன்ற விசேஷ நாட்களில் ஆலமரத்தடியின் சுற்றுக்கெட்டு நிழலில் இப்போதும் பகடை விளையாட்டு நடப்பதுண்டு. கூடலூர் கிராமத்துக்காரர்களுக்கும் பெரும்பலம் கிராமத்துக்காரர்களுமிடையே போட்டி நடக்கும்.
பேர்பெற்ற பெரிய பெரிய பகடை விளையாட்டுக்காரர்கள் எல்லாம் போய்ச் சேர்ந்துவிட்டார்கள். இப்போது புதிதாக சில இளைஞர்கள் வந்திருக்கிறார்கள். “பழைய காலம்போல விளையாட்டு இப்ப சூடு பிடிக்கிறதில்லை” என்கிறார்கள் வயதானவர்கள். பகடைக்காய்களை உருட்டும் சத்தம் கேட்கும் போதும், உற்சாகக்குரல் எழும்போதும் அப்பாதான் நினைவுக்கு வருவார். அப்புண்ணிக்கு வருத்தத்தையும் மீறிய ஒரு பெருமித உணர்வு உருவாகும்.
சொல்லி வைத்த எண்ணிக்கையில் பகடை உருட்டும் ஒரே ஒருவர்தான் அந்த ஊரிலிருந்தார். அது அப்புண்ணியின் அப்பா கோந்துண்ணி நாயர் மட்டும்.
“நான் இந்த இரு கண்ணால பாத்திருக்கேன். பெரும்பலம் காரங்களோட நடந்த கடைசி விளையாட்டு அது. எதிரணியில மாரார் விளையாடுறாரு. அவர்கூட நேருக்கு நேரா போட்டி போட்டு மூணாவது காயை விழத்தட்டுற நேரம். தோற்றுப்போனா ஊரோட மானமே போச்சு. சும்மா உக்கார்ந்திருந்து பலனில்லை. விளையாடுனவங்களுக்கு எல்லாம் சலிச்சிப் போயிடுச்சு. மறுபக்கம் வண்ணான் சோப்பன் செய்வினை செய்திருக்கான். பிறகுதான் நமக்கு இது தெரிய வந்தது. முப்பத்திரெண்டு எண்ணிக்கை வேணும் சரிக்கு சமமா வர்றதுக்கு. காய்களைக் கையில எடுத்துட்டு வானத்தைப் பாத்துட்டு நிக்கிறார் அச்சும்மான்.
ஏமாத்திட்டியே தெய்வமே . . . உண்மையைச் சொல்லணும்னா அச்சும்மானுக்கும் தைரியமில்லை. இந்த எறியிலும் கிடைக்கலேன்னா தோல்வி நிச்சயம். என்னைப் பாத்து, அவர் மெதுவாக் கேட்டார்: “என்னடா பையா, ஊரோட மானம் போகுது . . ?”
இருந்தாலும் விடுறதா இல்லை அச்சும்மான். அவரு ஆளு யாரு? திரும்பி நின்னுச் சத்தமாக் கேட்டார்: “பையங்க யாராவது இருக்காங்களா?”
அப்ப, ‘காயை எங்கிட்ட தாங்க, பெரியவரே’ன்னு ஒரு குரல்.
பாத்தா, கோந்துண்ணி நாயர் நிக்கிறாரு.
எதிரணியில மாராரும் ஆட்களும், பூமியிலுள்ள சகலமான தெய்வங்களையும் அழைச்சுக் கூப்பாடு போடுறானுங்க. இந்தக் கூப்பாடு ரொம்ப தூரம் வரைக்கும் கேட்டது.
அந்தப் பாழாப்போனவளை நான் எதுக்குக் கூப்பிடணும்? கோந்துண்ணியாரு நெஞ்சிலறைஞ்சபடியே நாலு கெட்ட வார்த்தை. யாரை? தேவி பகவதியை! சொல்லும்போதே உடம்பு சிலுக்குது. கண்ணை மூடிட்டு ஒரு நாழிகை பிரார்த்தனை செய்த கோந்துண்ணியாரு ஒரு எறி வெச்சார். பளிங்கு பளிங்குபோல இந்தா கிடக்குது பன்னெண்டு.
கண்ணெல்லாம் அப்படியே செவந்துபோய்க் கிடக்கு. பாத்தா, பயமாயிருக்கும்.
இரண்டாவதும் ஒரு எறி. இப்பவும் பன்னெண்டு.
பிறகு, விளையாட ஆரம்பிச்சாரு. ரெண்டு மூணு, ஒரு ஆறு
கட்டிக்குங்க கொம்பைன்னு சொல்லி ஒரு எறியும் கொடுத்துட்டு அப்படியே நடந்தார். அவர் களத்துப்படிக்குப் போய்ச் சேரும்போதுதான் இங்கே விளையாட்டும் நின்னுது. பார்த்தால், பகடை.”
“இப்பேர்ப்பட்ட ஆணாப் பொறந்த ஒருத்தன் இனி பொறக்கவே போறதில்லை.”
கூடலூரின் இப்போதைய முன்னணி விளையாட்டுக்காரரான குட்டன் நாயர் சொன்னார்:
“அந்த வீரன் தன்னோட இருபத்தொண்ணாவது வயசுலதான் குற்றிப்புறம், வட்டாஞ்சேரின்னு நடந்து அங்குள்ள பெரிய பெரிய விளையாட்டுக்காரன்களை எல்லாம் குப்புறவிழ வெச்சார்.”
தோல்வி என்றால் என்னவென்றே தெரியாத தெற்கத்தி வண்ணான் ஒருவன் இருந்தான். தன்னுடைய மண்டகத்தில் வைத்து மட்டுமே அவன் விளையாடுவான். போட்டிக்கு வருகிற ஒவ்வொருவரையும் அவன் தோற்கடித்து வந்தான். ஒரு ஓணக்கால அவிட்டம் நாளன்று, அப்பா அங்கே புறப்பட்டார். கூடவே அப்புப்பணிக்கரும். அப்புப்பணிக்கர் இப்போதும் அதைச் சொல்லாத நாளே கிடையாது.
“ஒருநாள் காலையில தொடங்குன விளையாட்டுல மூணாவது நாள் அப்பா போட்டி போட்டாரு. தெக்கத்தியான் படிச்ச வித்தைகள் பலதையும் பிரயோகிச்சுப் பாத்தான். நாலாவது நாள் சாயங்காலம்தான் சூதாட்டம் முடிஞ்சுது. விளையாட்டைப் பாக்க வந்தவங்களோட கூட்டம் மண்ணள்ளிப் போட்டா கீழே விழாது. அப்பா எழுந்ததும் தெக்கத்தியான் கும்பிட்டபடியே சொன்னான்: “எஜமான்கூட அடியேன் இனிமே விளையாட மாட்டேன். இது, அடியேனுடைய சந்தோஷத்துக்காக!”
நாலு ராத்தல் எடையுள்ள வெண்கலப் பகடைக் காய்கள் தெக்கத்தியான் அன்னைக்குக் கொடுத்ததுதான். அந்தக் காய்களை உருட்டி விளையாடினா இப்ப உள்ள இளந்தாரிகளோட நெஞ்சுக்கூடு கலங்கிடும். அதை வெச்சி விளையாடித்தான் கானோத்துப் பணிக்கர்மாரைத் தோற்கடிச்சார்.”
இப்படி, அப்புண்ணியின் அப்பா கோந்துண்ணி நாயரைப் பற்றி சொல்வதற்கு மக்களிடம் ஏராளமான செய்திகள் இருந்தன.
ஊரிலுள்ள பல இளைஞர்கள் அப்பாவின் பின்னால் நடந்தார்கள். எல்லோருக்குமே அப்பா தேவைப்பட்டார். அப்பாவின் திருமணத்துக்குப் பிறகு நண்பர்களில் பலர் அவரை விட்டுப் பிரிந்துபோய்விட்டார்கள். காரணம், அம்மாவின் குடும்பத்தை அப்பா இழிவுபடுத்தி விட்டாராம்.
வடக்குப்பாட்டு குடும்பத்தை இழிவுபடுத்திய அப்பாவின்மீது ஊரிலுள்ள பலருக்கும் வெறுப்பு உருவானதாம்.
அப்பாவின் குடும்பம் தகுதியில் குறைந்ததுதான். மூன்றோ நான்கோ தலைமுறைகளுக்கு முன்பு அப்பாவின் குடும்பத்திலுள்ள ஒரு பெண் வழி தவறிவிட்டாள் என்பதுதான் இதற்குக் காரணம். போதாக்குறைக்கு எல்லா சாதிக்காரர்களுடனும் அப்பா நட்புறவு வைத்திருந்தார். சாயா குடிப்பதே கெட்டப் பழக்கம் என்றிருந்த அன்றைய காலகட்டத்தில் அப்பா மாப்பிளை முஸ்லிம் கடைகளுக்குப்போய் சாயா குடித்தார். மாப்பிளையின் சாயாவை இந்துக்கள் குடிப்பது முறையல்லவே? அப்பா பெருந்தவறு செய்துவிட்டார். அவரது பகடை விளையாட்டும் வடக்குப்பாட்டு பெரியவர்களின் கண்களில் தவறான ஒன்றாகவே தென்பட்டது. பகடை விளையாடப்போகும்போது அப்பா, கள்ளுக்குடிப்பதும் உண்டாம். இப்படிப்பட்ட ஒருவனுக்கு வடக்குப்பாட்டுக் குடும்பத்துப் பெண்ணை ஒரு போதும் முறைப்படி திருமணம் செய்து வைக்க மாட்டார்கள்.
அம்மாவுக்கு ஒரு சகோதரர் இருந்தார். இறந்துவிட்டார். அப்புண்ணி அவரை மாதவ மாமா என்பான். கோந்துண்ணி நாயரும் மாதவ மாமாவும் நண்பர்கள்.
பெரிய மாமா வீட்டில் இல்லாத ஒருநாள். அன்றெல்லாம் அன்னியர் யாரும் பத்தாயப்புரைக்குள் நுழைவதில்லை. சாயங்கால நேரம், பத்தாயப்புரைக்குள்ளிருந்து மாதவ மாமாவும் அப்பாவும் பேசிக்கொண்டிருந்தார்கள். நேரம் போவதே தெரியாமல். திண்ணையில் இருந்து பெரிய மாமாவின் குரலைக் கேட்டதும் அவர்கள் திடுக்கிட்டார்கள்.
“யாருடா மாதவா அது?”
இதற்கான பதிலை அப்பாவே சொன்னார்: “தாழத்து வீட்டு கோந்துண்ணி.”
“அன்னிய ஆண்களுக்கு சாயங்கால வேளையில இங்கென்ன வேலை?”
அப்பா, பணிவுடன் சொன்னார்: “நான் வடக்கு கட்டுக்குப் போகலை. இங்க, மாதவனோட பேசிட்டிருந்தேன்.”
பெரிய மாமா காலைத் தரையில் தேய்த்தவாறே நடந்து வந்தார்.
“திண்ணையில நின்னு பேசணும். வந்த காரியம் முடிஞ்சா கிளம்பணும். அதை விட்டுட்டு, வடக்குப்பாட்டு பத்தாயப்புரைக்குள்ள உட்கார்ற அளவுக்குத் தாழத்து வீட்டு ஆண் பிள்ளைகளுக்குத் தகுதி பத்தாது.”
அப்பா கோபத்தை அடக்கியவாறே சொன்னார்: “நான் இங்க ரகசியமாக இருக்க வரலை. இங்கிருந்து பெண் வேணும்னா என்னால கொண்டு போகவும் முடியும்.”
“ப்ஃபூ . . .” பெரிய மாமா அதட்டினார்.
அப்பா காறி உமிழ்ந்துவிட்டுச் சொன்னாராம்: “குடும்பமாமே . . . பெரிய குடும்பம்.”
இதையெல்லாம் தெற்கு மனையின் சாய்வுப்படி மரச்சட்டங்களுக்குப் பின்னால் நின்று ஒரு ஜீவன் பார்த்துக்கொண்டிருந்தது – அம்மா.

அம்மா அப்போது பருவம் நிறைந்த பெண். வடக்குப்பாட்டு காரணவர் குஞ்ஞிக்கிருஷ்ணனின் இளைய மருமகள். வெகு விமரிசையுடன் திருமணம் செய்து வைக்க நிச்சயிக்கப்பட்டிருந்த பெண். சம்பந்தக்காரன், பன்னிரெண்டு மைல் தொலைவில் காடும் குளங்களுமுள்ள பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவன். முற்றம் நிறைத்துப் பந்தல் போடப்பட்டிருந்தது. பூமான்தோடு முதல் கைதக் காடுவரையுள்ள மொத்த நாயர் வீடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. சமையலுக்கு, கொடிக்குன்னத்துக் குட்டிப்பட்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தனர்.
ஆனால், திருமணம் நடந்தேறவில்லை.
புதுமாப்பிள்ளையின் வீட்டார் வந்த பிறகுதான் வீட்டுக்குள் இருந்தவர்களுக்கு விஷயம் தெரிய வந்தது. புதுப்பெண்ணைக் காணவில்லை.
“என்னாச்சு முத்தாச்சி?” ஆச்சரியம் மேலிட பதற்றத்துடன் கேட்டான் அப்புண்ணி.
“வேறென்ன, கோந்துண்ணி, பாருக்குட்டியைக் கடத்திட்டுப் போயிட்டான்.”
சீதையை புஷ்பக விமானத்தில் இராவணன் கடத்திச்சென்ற கதையை அவன் கேள்விப்பட்டிருக்கிறான். இராவணன் துஷ்டன். இராமரின் மனைவியைக் கடத்திச் சென்றதற்குக் காரணம் அவனது துஷ்டத்தனம்தான்.
சுபத்ரையை அர்ஜுனன் கடத்திச்சென்ற கதையை அவன் நினைத்துப் பார்த்தான். அர்ஜுனன் மாபெரும் வீரன். வில் வித்தையில் அர்ஜுனனை வெற்றிகொள்ள யாராலும் இயலாது. மலையாளப் பாடப்புத்தகத்தில் அந்தக் கதை இருக்கிறது. கிருஷ்ண பகவானின் வீட்டுக்குத் துறவி வேடத்தில் சென்ற அர்ஜுனன், சுபத்ரையுடன் வெளியேறினான். தைரியசாலி! எதிர்த்து வந்த யாதவர்களால் அர்ஜுனனைத் தொடக்கூட முடியவில்லை.
சுபத்ரையை ரதத்தில் ஏற்றிக் கொண்டுசென்ற பகுதியை வாசிக்கும்போது, அப்பாவைக் குறித்த கூனன் சாத்து நாயரின் விவரணைதான் நினைவுக்கு வரும். அதை விவரிப்பதற்கான உரிமை அவருக்கு மட்டுமே உரித்தானது.
“நான் நேரடியாப் பாத்தேன். அப்படிப்பட்ட ஒரு ஆணாப் பொறந்தவன் இனி பொறக்கப் போறதில்லை.”
சாத்து விவரிப்பார்: “வயக்காடு முழுவதும் மாரளவு மழை வெள்ளம். துருதுருன்னு அட்டை. ஈர்க்கிலைக் கொடியை எடுக்கிற லாவகத்தோட இப்படிக் கையால தூக்கிட்டு அப்படியே ஒரு நடை.”
ராந்தல் வெளிச்சத்துடன் பின்னால் நடந்துகொண்டிருந்த கூனன் சாத்து நாயர் கேட்டார்: “அவங்க பின்னால வந்தா என்ன பண்றது?”
திரும்பி நின்று சாத்துவை ஒரு பார்வை பார்த்துவிட்டு அப்பா சொன்னார்: “சாத்து, நான் ஒரு ஆண். பொறப்புன்னு ஒண்ணு இருந்தா, என்னைக்காவது ஒருநாள் சாகத்தான் வேணும்.”
முத்தாச்சி சொல்லும் கதையைக் கேட்கும் சில நேரங்களில் தச்சோளி சந்துவும் கோமப்பனும் நினைவுக்கு வருவார்கள். குழந்தையாக இருக்கும்போது சொல்லிக்கேட்ட கதைகள். அங்கம் வெட்டி வென்ற கதைகள். . .
“கடவுள் அவனுக்குக் கொடுத்து வைக்கலை”

எம்.டி. வாசுதேவன் நாயரின் நாவலிலிருந்து ஒரு பகுதி | தமிழாக்கம் குளச்சல் மு. யூசுப்
Excerpted with permission from Kalachuvadu Publications.
நூல் வாங்க: நாலுகெட்டு – தமிழில்