“என்னை அறியாமலேயே ஒரு மாற்று கலாச்சார வெளிக்காக ஏங்கிக்கொண்டிருந்தேன்”

எழுத்தாளர் மொழிபெயர்ப்பாளர் அழகிய மணவாளனுடன் ஒரு நேர்காணல்

Read in : English

மொழி: உங்கள் பின்னணி பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா? ஒரு வாசகராக நீங்கள் இலக்கியத்திற்குள் எப்படி வந்தீர்கள்?

மணவாளன்: நான் வாசிப்புக்கு மிகவும் தாமதமாகத்தான் வந்தேன். எனது இளங்கலைப் பருவத்தில்தான் எனக்கு வாசிப்பு அறிமுகமாகியது. மூன்று தொகுதிதளாக வெளியிடப்பட்ட விட்டல் ராவின் “இந்த நூற்றாண்டின் சிறுகதைகள்” என்ற தொகுப்பு மூலம் எனக்கு அது முதன்முதலில் அறிமுகமானது என்று நினைக்கிறேன். பொதுவாக, பொறியியல் கல்லூரி நூலகங்கள் மிகவும் மோசமானவை. எப்படியோ, அதிர்ஷ்டவசமாக, என் கல்லூரி நூலகத்தில் சில இலக்கியப் படைப்புகள் இருந்தன. இந்தப் தொகுப்பு அதில் இருந்தது. சுந்தர ராமசாமியின் பல்லக்கு தூக்கிகள் என்ற சிறுகதை அதில் இடம்பெற்றது. நான் அதற்கு முன்பு இலக்கியம் வாசித்ததில்லை என்றாலும், இந்தக் கதையில் அதன் சுவையை உணர்ந்தேன்.

எழுத்தாளர் நாஞ்சில் நாடன்

என்னுடைய சில கல்லூரி நண்பர்கள் வாசிக்கக் கூடியவர்களாக இருந்தனர். ஆனால், பெரும்பாலும் பெரியார், அண்ணா அவர்களுடைய எழுத்துக்களைதான் வாசித்தனர். அல்லது வைரமுத்துவின் நாவல்கள், நா. முத்துக்குமாரின் கவிதைகள் போன்ற பிரபலமான எழுத்துக்களை வாசித்தனர். ஆனால், என் நண்பர்களில் ஒருவர் மட்டும் ஏற்கனவே நாஞ்சில் நாடனைப் வாசித்திருந்தார். அவர் நாஞ்சில் ஆனந்த விகடனில் “தீதும் நன்றும்” என்ற தலைப்பில் தொடராக எழுதிய கட்டுரைகளைப் படித்திருந்தார். என் நண்பரின் ரசனை மீது எனக்கு மிகுந்த அபிமானம் இருந்தது. எனவே அவர் ஈரோட்டிலிலுள்ள  புத்தகக் கடைக்குச் சென்றபோது நான்  நாஞ்சில் எழுதிய “சதுரங்க குதிரைகள்நாவலைத் தேர்ந்தெடுத்தேன். அப்படைப்பை வாசித்த பிறகு, நான் மேலும் உள்நோக்கியவனாக மாறினேன். சுஜாதாவின் அறிவியல் புனைகதை மற்றும் தனி கட்டுரைகளில் ஈடுபாடு கொண்ட, எஸ். ராமகிருஷ்ணனின் அனுபவக்குறிப்புகளை வாசிக்கும் மற்றொரு நண்பரும் எனக்கு இருந்தார்; அப்போதும் கூட, தொடர்ந்து எழுதும் எழுத்தாளர்களைக் கொண்ட ஒரு “இலக்கிய இயக்கம்” பற்றி எந்தப் பிரக்ஞையும் எனக்கோ இலக்கியத்தை அறிமுகப்படுத்திய நண்பர்களுக்கோ இல்லை. நாஞ்சிலைப் படித்த பிறகுதான், வெளியுலகிற்குத் தெரியாது இலக்கியத்தில் மட்டுமே இயங்கும் ஒரு ரகசிய உலகம் இருப்பதைப் பற்றிய உணர்வு எனக்கு ஏற்பட்டது.

நாஞ்சில் எழுதிய கட்டுரைகள் மூலம்தான் சுந்தர ராமசாமியின் “ஒரு புளியமரத்தின் கதை” மற்றும் “ஜே. ஜே. சில குறிப்புகள்” எனக்கு அறிமுகமாயின. “ஜே. ஜே. சில குறிப்புகள்”தான் எனக்கு முதன்மையான இலக்கிய அனுபவத்தைத் தந்தது. கிட்டத்தட்ட ஒரே இரவில் அதைப் படித்தேன். ஒரு அறிவுஜீவியின் தவிர்க்கவே முடியாத தனிமை, கசப்பு, அவனது இலட்சியவாதம், முழுமைக்கான தவிப்பு – இந்த அம்சங்கள் நாவலில் ஒரு குறிப்பிட்ட உலகில் அமைக்கப்பட்டிருந்தாலும், அவை எந்த கலைஞருக்கும் பொருந்தக்கூடியவை என்பதை என்னால் உணர முடிந்தது. கலைஞனின் இயல்புகள் அவனை இட்டுச் செல்லும் நேர்மறை மற்றும் எதிர்மறை உச்சநிலைகளை “ஜே. ஜே. சில குறிப்புகள்” பதிவு செய்கிறது.

“ஜே. ஜே. சில குறிப்புகள்” படித்ததும் அந்த வாசிப்பனுபவத்தை என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை. என் நண்பர்களுக்கு வெவ்வேறு வாசிப்பு ஆர்வங்கள் இருந்தன. அதனால் நான் அவர்களுடன் அதைப் பற்றி விவாதிக்க முடியவில்லை. எனவே, நான் நாஞ்சிலுக்கு போன் செய்து அவரது வீட்டிற்குச் சென்றேன். ஜெயமோகனை எனக்கு அறிமுகப்படுத்தியவர் அவர்தான். நான் நாஞ்சிலைச் சந்தித்தபோது, அவர் ஜெயமோகனின் “அறம்” சிறுகதை தொகுப்பை படித்துக்கொண்டிருந்தார். நானும் ஜெயமோகனை சந்திக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார். ஆனால், அப்போது நான் அவரைச் சந்திக்கவில்லை.

பின்னர், எனக்கு வேலை கிடைத்து சென்னைக்கு சென்றேன். அப்போதுதான் அண்ணா மத்திய நூலகத்தில் ஜெயமோகனின் “நினைவின் நதியில்” படித்தேன். சுரா எனக்குப் பிடித்த எழுத்தாளர் என்பதே அந்நூலை நான் வாசிக்க முதன்மைக் காரணமாக இருந்தது. பழைய பதிப்பின் அட்டைப்படத்தில் அவரது பெரிய படம் இருந்தது. அது ஒரு விமர்சன நூல், ஆனால் அது ஜெயமோகன் சுராவின் ஆளுமை மீது கொண்ட வழிபாட்டுணர்வையும் உணரமுடிந்தது. அதைப் படித்த பிறகு, ஜெயமோகனை போனில் அழைத்து, அவர் சென்னை வந்தபோது சந்தித்தேன். இலக்கியம் குறித்தும், ஒருவரால் வாழ்நாள் முழுவதும் அதில் ஈடுபட முடியுமா என்பதைக் குறித்தும் எனகக்கிருந்த ஆரம்பகால கேள்விகளை நான் அவரிடம் கேட்டேன். இது 2014 இல் நடந்தது. அப்படித்தான் நான் இலக்கியத்துக்கு அறிமுகமானேன். 

மொழி: அந்தக் காலகட்டத்தில் நீங்கள் மொழிபெயர்கப்பட்ட ஆக்கங்களை—புனைவு அல்லது அபுனைவு—வாசித்தீர்களா? 

மணவாளன்: ஆம், வாசித்தேன். என்னுடைய கல்லூரி ஓரளவு பிரபலமானது. அதனால் அங்கு வேறு நகரங்களிலிருந்தும் மாணவர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு இலக்கிய ரசனை இல்லாமல் இருந்திருக்கலாம், இருப்பினும் அவர்கள் ஏதாவது ஒரு இலக்கிய ஆக்கத்தை வாசித்திருந்தார்கள். உதாரணமாக, என் நண்பர்களில் ஒருவர் தஸ்தயேவ்ஸ்கியின் “வெள்ளை இரவுகள்” வாசித்திருந்தார். அதைப் பற்றி இன்னொரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தார். அந்த உரையாடலைக் கேட்டதும், நான் அதைப் படிக்க விரும்புகிறேன் என்று சொன்னேன். அவர் என்னை ஏளனமாகப் பார்த்தார், “அதை அவ்வளவு எளிதாகப் படிக்க முடியாது” என்று சொல்வது போல். அந்த எதிர்வினை என்னை எப்படியாவது அப்படைப்பை வாசிக்க வேண்டும் என்பதில் உறுதி கொள்ளச் செய்தது. அது ஒரு நல்ல அனுபவமாகவும் மாறியது. இது நடந்தது என் கல்லூரி நாட்களின் இறுதியில். அப்போதே அது ஒரு தனித்துவமான அனுபவம் என்பதை என்னால் உணர முடிந்தது. ஆனால் அதை ஒரு இலக்கிய அனுபவம் என்று எனக்கு பெயரிடத் தெரியவில்லை… ஏனென்றால் அந்த நண்பர் வைரமுத்துவின் கவிதைகளையும் படிப்பார் (சிரிக்கிறார்). அவர் அந்த இரண்டு வகையான எழுத்துகளுக்குமிடையில் எந்த வேறுபாட்டையும் காணவில்லை.

மொழி: அப்போது நீங்கள் இந்திய மொழிபெயர்ப்பு இலக்கியங்களைப் படித்தீர்களா?

மணவாளன்: அதிகம் படிக்கவில்லை. அது நான் “கண்ணீரைப் பின்தொடர்தல்” (இந்திய இலக்கியப் படைப்புகள் பற்றிய ஜெயமோகனின் கட்டுரைகள்) வாசிப்பதற்கு முந்தைய நாட்கள். அந்நூல் அப்போது அச்சில் கூட இல்லை என்று நினைக்கிறேன். நான் “ஆரோக்கிய நிகேதனம்” (தாராசங்கர் பந்தோபாத்யாயின் வங்காள நாவல் தமிழில்) வாசித்தேன். ஆனால் அந்த நேரத்தில் அது எனக்குப் பிடிக்கவில்லை. பின்னர் பி.கே. பாலகிருஷ்ணனின் பார்வையைப் படித்த பிறகுதான் அந்த நாவலுக்குள் மீண்டும் நுழைய முடிந்தது. மலையாள இலக்கியத்தை ஓரளவுக்கு மொழிபெயர்ப்பில் படித்தேன். உதாரணமாக, சு.ரா. மொழிபெயர்த்த “தோட்டியின் மகன்.” பின்னர், பாலச்சந்திரன் சுள்ளிக்காட்டின் “சிதம்பர நினவுகள்.” அதைப் போன்ற படைப்புகள். [தகழியின்] “செம்மீன்.” ஆனால் ஒரு வளரும் வாசகனாக அவை எனக்கு அதிகம் ஊக்கமளிக்கவில்லை. ஆ மாதவன் மற்றும் ஜெயமோகன் போன்ற கலாச்சார ரீதியாக வேரூன்றிய எழுத்தாளர்களை நாஞ்சில் எனக்கு அறிமுகப்படுத்தினார். அவ்வகையான எழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நான் இந்திய இலக்கியங்களை—உதாரணமாக “ராக் தர்பாரி,” “பங்கர்வாடி”—படித்தது மிகவும் பின்னர்.

மொழி: உங்கள் குடும்பத்தில் உங்களை வாசிக்க தூண்டும் வகையிலான வாசகர்கள் யாராவது இருந்தார்களா?

மணவாளன்: இல்லை. என் அப்பா ஒரு வாசகர். இலக்கிய வாசகர் என்று சொல்லமுடியாது. சுஜாதாவின் எழுத்துக்கள், துக்ளக்கில் சோ ராமசாமி எழுதிய ராமாயணத் தொடர் போன்றவற்றை வாசித்து வந்தார். அவர் அத்தொடரின் அத்தியாயங்களை சேகரித்து வைத்திருந்ததை நான் பின்னர் தான் கண்டுபிடித்தேன். சிறுவயதில் அது எனக்குத் தெரியவில்லை. தானும் என் அப்பாவும் மாமவும் கல்கியில் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் போன்ற வணிக நாவல்களை வாசித்தனர் என்று என் அத்தை என்னிடம் சொல்லியிருக்கிறார். அவர்கள் அதை மாறி மாறி வாசித்து, தங்கள் வாய்ப்புக்காக பொறுமையின்றி காத்திருப்பார்கள் என்றார். அப்போது அது தமிழ்நாட்டில் ஒரு பொதுவான நிகழ்வாக இருந்தது. நான் கூறுவது என் தந்தையின் திருமணத்திற்கு முன்பு. திருமணத்திற்குப் பிறகு, இந்திய நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த, சொற்ப வருமானம் கொண்ட ஒரு சாதாரண குடும்ப மனிதனின் கடமைகள் அவருக்கும் வந்தன. சில புராணக் கதைகளைச் சொல்வதைத் தவிர என்னுடன் அவருக்கு செலவிட நேரமில்லை. என் பதின்பருவத்தில் அவர் இறந்துவிட்டார். எனவே அவரது இலக்கிய ரசனை என்னவாக இருந்திருக்கும் என்பதை என்னால் கற்பனை மட்டும் தான் செய்ய முடியும். அவர் பிரபலமான மற்றும் தீவிரமான ரசனைகளின் கலவையைக் கொண்ட ஒருவராக இருந்திருக்கலாம். இதைத் தவிர வீட்டில் இலக்கிய அறிமுகம் என்று பெரிதாக எதுவும் நிகழவில்லை. 

ஆனால் மறுபக்கம், என் இளைய பருவத்தில் பிரபலமான ஊடகங்களுக்கும் ரசனைகக்கும் கூட  எனக்கு அறிமுகம் இல்லை. எங்கள் கல்வியைக் பாதிக்கும் என்று என் பெற்றோர் நம்பியதால் எங்கள் வீட்டில் கேபிள் டிவி இணைப்பு இல்லை, நான் கிரிக்கெட்டை மட்டுமே பார்ப்பேன். சினிமா அல்லது பிற பிரபலமான பொழுதுபோக்குகள் எனக்கு ஒருபோதும் அறிமுகப்படுத்தப்படவில்லை. பிரபலமான பொழுதுபோக்குகள் மீது எனக்கு எந்த வெறுப்பும் இல்லை, அவை எனக்கு அறிமுகப்படுத்தப்படவில்லை, அவ்வளவுதான். நான் தீவிர இலக்கியத்துள்தான் நேரடியாக நுழைந்தேன், எனவே பிரபலமான ரசனையையும் தீவிர ரசனையையும் என்னால் எளிதாக வேறுபடுத்திப் பார்க்க முடிந்தது.

மொழி: தமிழ், ஆங்கிலம் தவிர வேரேதேனும் மொழி கற்றீர்களா?

மணவாளன்: தக்ஷிண பாரத இந்தி பிரச்சார சபா தேர்வுகள் மூலம் பள்ளியில் இந்தி கற்றுக்கொண்டேன். அதன் மூலம் இலக்கியத்தின் சுவையை ஓரளவு உணர்ந்தேன். பிரேம்சந்த் போன்ற எழுத்தாளர்களின் கதைகள் பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருந்தன. அதில் என்னை தனிப்பட்ட முறையில் பாதித்த சில கதைகள் மற்றும் கவிதைகள் இருந்தன. ஆனால் அந்த அனுபவத்தை எப்படி வகைப்படுத்துவது என்று எனக்குத் தெரியவில்லை. “ரக்‌ஷா பந்தன்” என்ற ஒரு கதை எனக்கு நினைவிருக்கிறது, ஆனால் பின்னர் நான் இந்தியை அப்படியே மறந்துவிட்டேன்.

மொழி: மலையாளம்?

எழுத்தாளர் ஜெயமோகன்

மணவாளன்: அப்போது எனக்கு மலையாளம் அறிமுகமாகவில்லை. நாஞ்சில் அடிக்கடி மலையாள உலகத்தைப் பற்றி எழுதுவார். குறிப்பாக மலையாளம் மற்றும் தமிழின் இலக்கிய சூழலை ஒப்பிட்டு எழுதுவார். அவர் மூலமாகவும் பின்னர் ஜெயமோகன் மூலமாகவும் எனக்கு மலையாளத்தில் ஆர்வம் ஏற்பட்டது.

மொழி: மலையாள கலாச்சாரம் உங்களுக்கு எப்படி அறிமுகமானது?

மணவாளன்: பெரும்பாலும் ஜெயமோகனின் புனைகதைகளிலிருந்துதான் அது தொடங்கியது. குமரி கலாச்சாரம் மலையாள கலாச்சாரமாக என் மனதில் பதிந்தது. அதை தமிழுடன் என்னால் இணைக்க முடியவில்லை. நான் வாசித்த புனைவுகதாப்பாத்திரங்கள், அவர்களின் உச்சரிப்பு, அவர்களின் வாழ்க்கை முறை, அங்கதநோக்கு ஆகியவை மலையாளிகளின் சிறப்பியல்புகளாக எனக்குள் பதிவாகின. பின்னர் ஜெயமோகனைத் தொடர்ந்து வாசிக்கையில் அவர் அவர்களை (குமரி மக்களை) ஒரு பழைய தமிழ் கலாச்சாரத்தின் எச்சம் என்று குறிப்பிடுவதைக் கண்டேன். அப்படியிருந்தும், அது என்னுள் மலையாள கலாச்சார்மாகத்தான் பதிந்தது. பின்னர், மலையாள கலாச்சாரம் குறித்து அவர் எழுதிய கட்டுரைகளைப் படித்தேன். இந்தப் பின்னணியில், நான் சில மலையாள எழுத்தாளர்களை, கதகளி விமர்சகர்களை நேரில் சந்தித்தபோது, மலையாளி என்பவர் யார், அவர்களின் பொதுவான போக்குகள் என்ன, அவர்களின் வாழ்க்கை முறை என்ன போன்ற பலவற்றைப் பற்றி ஒரு சொந்தக் கருத்தை நான் அறியாமலேயே உருவாக்கத் தொடங்கினேன். அதை அப்படிப் பொதுமைப்படுத்த முடியாது என்பது எனக்குத் தெரியும், ஆனால் அது என்னை அறியாமலேயே நிகழ்ந்தது. “கிளி சொன்ன கதை”  என்ற ஜெயமோகனின் நாவலும் ஒரு கலாச்சார சித்திரத்தை எனக்கு அளித்தது.ஒழிமுறி” போன்ற படங்களும் கூட. இவை அனைத்தும் மலையாள கலாச்சாரத்தின் மீதான எனது ஆர்வத்தை மேலும் தூண்டின.

மொழி: இதில் உங்கள் குடும்பப் பின்னணியின் தாக்கம் ஏதேனும் இருந்ததா? 

மணவாளன்: அப்படி ஏதும் இல்லை. என் தந்தையின் பூர்வீகம் காஞ்சிபுரம் அல்லது காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள பகுதிகள் தான். என் அம்மா காரைக்குடியைச் சேர்ந்தவர். ஒருவேளை எங்கள் மூதாதையர்களில் ஒருவர் கேரளத்திலிருந்து குடிபெயர்ந்திருக்கலாம். அதைப் பற்றி எனக்குத் தெரியவில்லை—ஆனால் என் குடும்பத்தின் வேர்களை அடையாளம் காண்பதில் எனக்கு பெரிய ஆர்வமும் இல்லை.

மொழிபெயர்ப்பாளர் குளச்சல் மு. யூசுப்

மொழி: உங்கள் குடும்பப் பின்னணியைப் பற்றி கேட்டதற்குக் காரணம்—ஒரு மொழிபெயர்ப்பாளராக உங்கள் பின்புலம் மிகவும் தனித்துவமானது. பொதுவாக, இரண்டு மொழிகளுக்கு இடையில் இயங்கும் (குளச்சல் யூசுப் போன்ற) மொழிபெயர்ப்பாளர்கள் இரண்டு நிலப்பரப்பிற்கு இடையேயான எல்லையில் வாழ்பவர்கள், அல்லது வேலைக்காக இடம்பெயர்ந்து புது மொழியைக் கற்றுக்கொண்டிருப்பார்கள். ஆனால் உங்களுக்கோ அப்படிப்பட்ட எந்தத் தொடர்பும் இருந்ததாகத் தெரியவில்லை. தனிப்பட்ட ஆர்வத்தினால் மட்டுமே நீங்கள் மொழியாக்கத்துக்குள் வந்திருக்கிறீர்கள். உதாரணமாக, நீங்கள் “ஓழிமுறி” பற்றிச் சொன்னது. அந்தத் திரைப்படத்தின் கலாச்சார தாக்கத்தினால் அந்த பண்பாட்டுக்குள்ளும் மொழிக்குள்ளும் நுழைந்தீர்கள் என்று சொல்லலாமா?

மணவாளன்: ஆம். பெண்கள் விவாகரத்து கேட்பது நம் (தமிழ்) சூழலுக்கு புதியது. ஆனால் கேரள கலாச்சாரம் அந்த சுதந்திரத்தை பெண்களுக்கு பல ஆண்டுகளாகவே வழங்கியுள்ளது. அந்த அம்சம் என் ஆர்வத்தைத் தூண்டியது, அதைப் பற்றி மேலும் அறிய விரும்பினேன்.

மொழி: இதைச் சார்ந்து மற்றொரு விஷயமும் தோன்றுகிறது. இந்திய சூழலில் மட்டும்தான் மொழிபெயர்ப்பாளர்கள் அவர்களுக்கு பரிச்சயமான  மொழிகளைச் சார்ந்து செயல்படுகிறார்கள். மேற்கில் பல மொழிபெயர்ப்பாளர்கள் தங்களுக்கு எந்த பரிச்சயமுமில்லாத ஒரு மூல மொழியைக் கண்டடைந்து, அதைப் பயின்று மொழியாக்கத்தில் ஈடுபடுகின்றனர். உதாரணமாக, டெய்சி ராக்வெல் மற்றும் டெபோரா ஸ்மித்தை சொல்லலாம்.

மணவாளன்: ஆம், கமில் ஸ்வெலபில் மற்றுமொரு உதாரணம். அவர் ஐரோப்பியர், ஆனால் அவர் இந்தியாவில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பே நான்கு அல்லது ஐந்து இந்திய மொழிகளைக் கற்றுக்கொண்டார்—சில இந்திய நூல்களையும் அப்போதே அவர் மொழிபெயர்த்திருக்கக் கூடும். 

இந்தி, மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளுக்கும் சமஸ்கிருதம் பொதுவான வேர் மொழியாக இருப்பதால், இரண்டு மொழிகளுக்கும் ஒரு பொதுவான சொற்களஞ்சியம் உள்ளது. எனவே இந்தி மொழி மீதான எனது பரிச்சயம் மலையாளத்துக்குள் விரைவிலேயே ஆழமாக உட்புக வழிவகுத்தது. 

மொழி: ஜெயமோகனின் எழுத்து மலையாள கலாச்சாரத்தின் மீதான உங்கள் ஆர்வத்தைத் தூண்டியது என்றீர்கள். இன்னொருவராக இருந்தால் மலையாள மொழியைக் கற்றுக்கொள்ளாமலேயே அந்த ஆர்வத்தைத் பூர்த்திசெய்திருக்கக்கூடும். உதாரணமாக, நிறைய மொழியாக்கங்களை வாசித்திருக்கலாம். மலையாள மொழி மற்றும் கலாச்சாரத்தில் மூழ்குமளவுக்கு ஆர்வம் எவ்வாறு உங்களுக்குள் உருவானது?

மணவாளன்: மலையாள எழுத்தாளர்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற தூண்டுதலிலிருந்துதான் அந்த ஆர்வம் பிறந்தது. உதாரணமாக பி.கே. பாலகிருஷ்ணனைச் சொல்வேன். நான் எனது பயணத்தைத் தொடங்கியபோது அவரது கட்டுரைகள் தமிழில் மொழியாக்கம் செய்யப்படாமலிருந்தன. ஜெயமோகனின் மலையாள எழுத்தும் கூட. மலையாளத்தில் அவரது நினைவுக் குறிப்பான “உறவிடங்கள்” நூலின் அனைத்து கட்டுரைகளும் தமிழ் படுத்தப் படவில்லை. வைலோப்பிள்ளி ஸ்ரீதர மேனன் மற்றொரு உதாரணம். நான் அவரை மலையாளம் வழியாக மட்டுமே படித்திருக்கக்கூடும். 

மேலும், நான் மலையாள லிபியால் ஈர்க்கப்பட்டேன் (சிரிக்கிறார்). அதில் கூட்டக்ஷரம் என்று ஒன்று உள்ளது: அதாவது சில எழுத்துக்களை ஒன்றிணைத்து ஒரு கூட்டு எழுத்தை உருவாக்குவது. அதை எழுத கற்றுக்கொள்வது எனக்கு வேடிக்கையாக இருந்தது—ஏதோ ஒரு கட்டுமான விளையாட்டை விளையாடுவது போல. மலையாள எழுத்துக்கள் நெகிழ்வாக இருந்தன; தமிழ் போல உறுதியானவையாக அல்ல. அந்த அம்சம் என்னைக் கவர்ந்தது. ஒரு எழுத்து மற்றொரு எழுத்தை எவ்வாறு விரட்ட முயற்சிக்கிறது, ஒரு எழுத்து இன்னொன்றை மிக கஷ்டப்பட்டு தாங்கிக்கொள்கிறது, ஒரு எழுத்து மற்றொரு எழுத்தோடு எப்படி இணைகிறது, எப்படி குழைகிறது என்பதை நான் கற்பனை செய்வேன். மனித உறவுகள் போல தவிர்க்கமுடியாத பற்றுகள், சிரிப்பு, கண்ணீர்…..  கற்றுக்கொள்வதற்கு உற்சாகமாக இருந்தது.

மொழி: மலையாளத்தில் ஒரு நாவலைப் படிக்கமளவு முன்னேற உங்களுக்கு எவ்வளவு நாள் ஆனது?

ஓ. வி. விஜயனின் கசாக்கின் இதிகாசம்

மணவாளன்: ஒரு மாதத்திற்குள்ளேயே நாவல்களைப் படிக்க ஆரம்பித்தேன். முதலில் வசித்தது ஓ.வி. விஜயனின் “கசாக்கின் இதிகாசம்”. நான் முன்னர் சொன்னது போல, மலையாள வார்த்தைகள் ஓரளவு பரிச்சயமாக இருந்தன. அதனால் ஒரு வாரத்திற்குள் முழு வாக்கியங்களைப் படிக்க முடிந்தது. மேலும், ஒருவர் ஏற்கனவே இலக்கிய வாசகராக இருந்தால் வேறொரு மொழியின் இலக்கியத்திற்குள் நுழைவது கடினம் அல்ல.

மொழி: இலக்கணம் ஒரு தடையாக இல்லையா?

மணவாளன்: இல்லை. மலையாளத்தில் நான் முதலில் வாசித்த புத்தகங்களில் ஒன்றுகேரள பாணினீயம்” என்ற இலக்கண நூல். ஒருவேளை அதனால் இருக்கலாம். ஆனால் எனக்கு அந்த நூல் பாதி மட்டுமே புரிந்திருந்தது. முதல் இரண்டு மாதங்களில் வாசிக்கும்போது சிற்சில பிரச்சனைகளை சந்தித்தேன். ஆனால் அவை என்னை வெகுவாக தொந்தரவு செய்யவில்லை. தமிழ்-ஆங்கில இலக்கணங்கள் அளவுக்கு தமிழ்-மலையாள இலக்கணங்கள் வேறுபட்டவை அல்ல.

மொழி: வாசிப்பிலிருந்து மொழிபெயர்ப்புக்கு எவ்வாறு வந்தீர்கள்?

மணவாளன்: நான் இரண்டையுமே ஒரே நேரத்தில் தொடங்கினேன் என்று தான் நினைக்கிறேன். ஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்ளும் போது வரும் சவால் மற்றும் வாய்ப்பு ஒன்று உள்ளது. நான் வாசித்த நூல்களை பிற தமிழ் வாசகர்கள் வாசிக்க முடியாது என்பதை உண்ர்ந்தேன். அப்படைப்புகளை விவாதிக்க வேண்டும் என்பதற்காகவே அவற்றை மற்ற வாசகர்களுக்காக மொழிபெயர்க்க வேண்டும் என்ற தீவிரமான உந்துதல் இருந்தது. நான் செய்த முதல் மொழியாக்கம் ஜெயமோகனின் ஒரு மலையாளக் கட்டுரை. நான் அதை மொழிபெயர்த்து சில நெருங்கிய நண்பர்களுக்கு அனுப்பினேன். அப்போது நான் மலையாள மொழியை கற்றுக்கொள்ளத் தொடங்கி ஒரு மாதமாகியிருக்க வேண்டும்.

மொழி: அப்படியென்றால் உங்களுக்கு மலையாள மொழி மீதான ஆர்வம் உங்கள் இலக்கிய ஆர்வத்தின் ஒரு பகுதி என்று சொல்லலாமா?

மணவாளன்: ஆமாம், அப்படிச் சொல்லலாம்.

மொழி: நீங்கள் பி.கே. பாலகிருஷ்ணனைப் பற்றிப் பேசியதால் இதைக் கேட்கிறோம். அவர் மீதான உங்கள் ஆர்வம் ஒரு குறிப்பிட்ட சிந்தனை முறையில் உங்களுக்கு ஏற்பட்ட ஆர்வம் என்று புரிந்துகொள்ளலாமா?

எழுத்தாளர் பி.கே. பாலகிருஷ்ணன்
இனி நான் உறங்கட்டும் – தமிழாக்கம்
இனி ஞான் உறங்கட்டே – பி.கே.பியின் மலையாள நாவல்

உண்மையில், மலையாளத்தில் பி.கே.பியை படிப்பதற்கு முன்பே, எனக்கு அவர் மீதான ஈர்ப்பு உருவாகியது. பி.கே.பியை நேரில் சந்தித்த அனுபவத்தை  பற்றி ஜெயமோகன் தமிழில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அந்தக் கட்டுரை வழியாக  பி.கே.பாலகிருஷ்ணனின் கருத்துகளுக்கு அப்பால் அவர் தனிஆளுமைமீது  ஆழமான ஈர்ப்பு எனக்கு உருவானது.  ஏனென்றால் அக்கட்டுரையில் அவரது நுட்பமான mannerisms கூட ஒரு புனைகதையின் நாயகனை போல  விவரிக்கப்பட்டிருந்தன. சில ஆளுமைகளைப் எதிர்கொள்ளும்போது அவர்களின் வாழ்க்கைப்பார்வையும் அவர்கள் தொடர்புறுத்தும் விதமும் ஒரே சமயம் விசித்திரமாகவும் கவர்ச்சியாகவும் இருக்கும். என்னை அறியாமலேயே பி.கே.பி எனக்குள் வளர்ந்தார். நான் சிலகாலம்  அவரைப்பற்றி மட்டுமே யோசித்துக்கொண்டிருந்தேன். நான் மலையாளம் கற்றுக்கொண்டதற்கான காரணங்களில் ஒன்று அவரை வாசிக்க வேண்டும் என்பதுதான். அப்போது அவரது “இனி நான் உறங்கட்டும்” என்ற நாவல் மட்டும்தான் தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டிருந்தது.

மொழி: இந்தியாவில் ஒருவர் ஒரு வேற்று மொழி அல்லது கலாச்சாரத்தில் ஆர்வம் கொண்டு புதிதாக ஏதாவது ஒன்றைக் கற்றுக்கொள்வது எவ்வளவு அசாதாரணமானது என்பதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். ஒருவேளை அது ஒரு மனப்பதிவாக  இருக்கலாம்—இருப்பினும் அவ்விழைவு வெளிநாடுகளை காட்டிலும் இங்கு மிகக் குறைவாகத்தான் உள்ளது என்று தோன்றுகிறது. மற்றொரு கலாச்சாரத்திற்குள் நாம் எளிதில் புகாமலிருப்பது நம் கலாச்சார பலவீனம் என்று நினைக்கிறீர்களா? அதற்கு ஏதாவது உளவியல் காரணம் இருக்கிறதா – ஒருவேளை நமது மரபு சார்ந்த பார்வையா, அல்லது நமது சூழல் காரணமாக ஏற்கனவே இரண்டு அல்லது மூன்று மொழிகளைக் கற்கும் கட்டாயத்தின் பளுவா?

மணவாளன்: நமக்கு ஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதிலோ அல்லது ஒரு புதிய கலாச்சாரத்திற்குள் நுழைவதிலோ சில தடைகள் இருப்பதாக நானும் உணர்கிறேன். ஆனால் இந்த கலாச்சார பலவீனத்திற்கு ஒரு குறிப்பிட்ட காரணத்தை என்னால் யூகிக்க முடியவில்லை. ஒருவேளை, நீங்கள் குறிப்பிட்டது போல, நமது பாரம்பரியக் கண்ணோட்டம் இதில் பெரும் பங்கு வகிப்பதாக இருக்கலாம். நமது சிந்தனையில் அழுத்தமான செல்வக்கை செலுத்தும் சாதி அமைப்பு அல்லது குடும்ப கட்டமைப்புகள் அந்தப் பார்வையின் வேராக இருக்கலாம். நாம் பெற்ற பிரிட்டிஷ் கல்வி, அதன்விளைவாக நமக்கு அமைந்த “குமாஸ்தா” வாழ்க்கையில் நம்மை நிறைவுறச் செய்தது. அல்லது, வரலாற்று ரீதியாக பார்க்கும் போது, ஐரோப்பியர்கள் explorerகளாக இருந்ததும், நாம் அப்படி இல்லாததும் கூட காரணமாக இருக்கலாம். இது ஆழமாக சிந்திக்கபட வேண்டிய ஒன்று.

என்வரையில் என் குடும்பச்சூழலால் எனக்குக் கிடைத்த பழமைவாதத்தின் மீதும் கலாச்சார அம்சங்களின் மீதும் உளவியல்ரீதியான ஒரு விலக்கத்தை அடைந்திருந்திருந்தேன். அதற்கு நான் அவற்றின்மேல் கொண்டிருந்த இயல்பான வெறுப்பு ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.

அதனால்  மலையாள கலாச்சாரத்தில், குறிப்பாக   கேரளாவின் பாரம்பரிய கலை வடிவங்களில் என்னை அடையாளம் காணத் தொடங்கினேன். இது  தற்செயலாகவே நிகழ்ந்தது.

மொழி: அந்தப் புதிய கலாச்சார சூழல் உங்களை எவ்வாறு எதிர்கொண்டது?

மணவாளன்: ஒரு சராசரி மலையாளி மிக தனிமையானவர் என்பது எனது அபிப்ராயம். தனக்கு அறிமுகமில்லாத இன்னொரு மலையாளியை எதிர்கொள்ளும்போது கூட அவர்கள் அசௌகரியமாக உணர்வதை அவர்களுடைய உடல் மொழியில் உங்களால் உணர முடியும். பொதுவாக, அவர்களின் கண்களிலும் உடல் மொழியிலும் சின்ன விலக்கத்தை நான் உணர்ந்தபடியே இருந்தேன். ஒரு சிலர் தங்கள் நடுவே ஒரு வெளி ஆள் நுழைவதை பார்த்து ஆச்சரியப்படுவதை என்னால் உணர முடிந்தது. சிலர் அதை என்னிடம் நேரடியாகவும் கேட்டார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் ஒருவகையான indifference உடன் இருந்தனர். கதகளியின் மீது நான் கொண்ட ஆர்வம் குறித்து சிலர் பிரமிப்புடன் கேட்டனர்.

ஆனால் அத்தகைய எதிர்வினை என்னைப் பற்றியது அல்ல என்றே நினைக்கிறேன். இருவேறு மலையாளிகள் இடையேயும் அந்த மனப்பான்மை இருக்கிறது. எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ரகுநந்தன், அங்கத எழுத்தாளர் வி.கே.என்னின் (வடக்கே கூட்டால நாராயணன்குட்டி நாயரின்) வாழ்க்கை வரலாற்று நூலை எழுதியவர். ரகுநந்தன் தன் நூலின் முன்னுரையில் ஒரு விஷயத்தை  குறிப்பிடுகிறார். வி.கே.என்னின் தனிவாழ்க்கையை ஆராயும் போது ரகுநந்தன் வி.கே.என்-இன் நெருங்கிய நண்பர்களைத் தொடர்பு கொண்டு அவருடனான சில அனுபவங்களை பகிரமுடியுமா என்று கேட்கிறார். கண்டிப்பாக பகிர்ந்து கொள்வதாக அவர்கள் உறுதியளிக்கிறார்கள். 

நேரில் சந்திக்கலாம் என்று ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் சந்திக்க ஒத்துக்கொண்ட தேதியில் ஏதோ அற்பமான காரணம் சொல்லி மறுக்கிறார்கள். இரண்டுமூன்று முறை இவ்வாறு நிகழ்கிறது. சிலர் மேற்கொண்டு ரகுநந்தனின் ஃபோனையே எடுக்கவில்லை.  தாங்கள் பகிரும் அனுபவங்கள் வி.கே.என்னின் வாழ்க்கை வரலாற்று நூலுக்காக   என்பதால் அதை தவிர்க்க விரும்பினார்கள் என்பது ரகுநந்தனுக்கு புரிகிறது. “நீங்கள் எங்களுடன் அவ்வளவு நெருக்கமாக இருக்க முடியாது. இந்த அந்தரங்கங்கள் எங்களிடமே இருக்கட்டும்” என்று அவர்கள் கூறுவதுபோல இருந்தது என்று ரகுநந்தன் தனது நூல் அறிமுகத்தில் சொல்கிறார். ரகுநந்தன் ஒரு மலையாளியாக இருந்தும் இது நடந்தது. இறுதியாக, வி.கே.என்-இன் குடும்பத்தினரிடமிருந்து பெற்ற பொதுவான தகவல்களுடன் மட்டுமே அவர் புத்தகத்தை எழுத முடிந்தது. ஆனால் இதில் எந்த எதிர்மறை மனநிலையும்  இல்லை என்று எனக்கு தோன்றுகிறது. “நட்பை தனிப்பட்டதாக இருக்க விடுங்கள், அதை ஏன் வெளிப்படுத்த வேண்டும்?” என்ற மனப்பான்மையாக இதை எடுத்துக்கொள்ளலாம்

விதிவிலக்காக சிலரும் உண்டு. கலைஞர்கள் எப்போதும் விதிவிலக்குகள் தான். நான் சந்தித்த சில கதகளி விமர்சகர்கள் என்னை மிக அன்புடன் வரவேற்றனர். ஒரு கதகளி ரசிகர் நான் கதகளியையும் மலையாளத்தையும் எப்படி ரசிக்கக் கற்றுக்கொண்டேன் என்று விரிவாக கேட்டறிந்துகொண்டார். ஆரம்பகட்டத்தில் நான் கலைஞர்களிடம் என்னை  அறிமுகப்படுத்திக்கொள்ள மிகவும் கூச்சப்பட்டபோது, ஒரு கதகளி பார்வையாளர் என்னை கதகளி கலைஞர்கள் மற்றும் தாள வாத்தியக் கலைஞர்களிடம் அறிமுகப்படுத்தினார். 

இந்த அனுபவங்களுக்குப் பிறகு, மலையாளிகளைப் பற்றிய எனது அபிப்ராயம் கலவையாகவே உள்ளது. ஒரு சராசரி மலையாளி மிகவும் தனிமையானவர்தான். ஆனால் கலைஞர்களும் கலை நாட்டம் கொண்டவர்களும் நட்பானவர்கள். கே.சி. நாராயணன் நம்மிடம் சொன்னது போல  கலைஞர்களுக்குள்ளும் மிக நுண்மையான  தனிமை இருக்கலாம்.  ஆனால் அவர்களின் கலைமனதின் ஆழத்தை உணரவேண்டும் என்ற விழைவும் எனக்கு இருக்கிறது. எதிர்காலத்தில் சில கதகளி விமர்சகர்கள் மற்றும் கலைஞர்களை நேர்காணல் எடுக்கும் எண்ணம் உள்ளது.

அழகிய மணவாளன் கே.சி. நாராயணனுடன், ஸ்ரீகிருஷ்ணபுரம் (கே.சியின் பூர்வீக இல்லத்தில்)

மொழி: மொழியாக்கத்தை பொருத்தவரையில் இந்த மாதிரியான எதிர்வினைகள் உங்கள் தேர்வுகளை பாதித்ததா? எதை மொழியாக்கம் செய்யலாம் என்று எப்படித் தீர்மானித்தீர்கள்?

மணவாளன்: நான் மொழிபெயர்க்க தொடங்கிய காலத்திலேயே குறிப்பிடத்தக்க மலையாள கிளாசிக் புனைவுகள் பலவும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தன. எனவே, என் தேர்வுகள் இயல்பாகவே குறுக்கப்பட்டன. 2018-ல் சமகால மலையாள புனைவுகளை படித்தேன். ஆனால் அவை என் ரசனைக்கு திருப்திகரமாக இல்லை. எனவே ஜெயமோகன் மலையாளத்தில் எழுதியவற்றை தேடத் தொடங்கினேன். அவர் மலையாளத்தில் எழுதிய கட்டுரைகளில் பெரும்பகுதி இன்னும் தமிழுக்கு வரவில்லை. அவருடைய ஒரு நேர்காணலும் நீண்ட உரை ஒன்றும் தான் நான் மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்த முதல் ஆக்கங்கள். தமிழ் இலக்கியச் சூழலில் மலையாள கலை மற்றும் கலாச்சாரம் பரவலாக போற்றப்படுகிறது. அதற்கு மாறாக ஜெயமோகனின் நேர்காணலும் உரையும் மலையாள கலாச்சாரம் மற்றும் இலக்கியத்தின் மீதான விமர்சனமாகவும் அமைந்தன. இக்காரணத்தால் அவற்றை மொழிபெயர்க்க வேண்டும் என்று தோன்றியது அது தமிழ் வாசகருக்கும் புதியதாக இருக்கும் என்று நினைத்தேன்.

ஆரம்பகாலத்தில் ஜெயமோகன் பரிந்துரைத்த சில மலையாளக் புனைகதைகளை (மதுபால் சிறுகதைகள்) தமிழுக்கு மொழியாக்கம் செய்தேன். நானும் மலையாளத்தில் நிறைய வாசித்துக்கொண்டிருந்தேன். அப்போது நான் மலையாளத்தில் படித்த அனைத்தையும் தமிழ் வாசகர்களுக்குபகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற அதீதமான விழைவு எனக்கு இருந்தது. ஆனால் அது சாத்தியமற்றது என்பதை பின்னர் உணர்ந்தேன். மேலும், அப்படி மொழிபெயர்ப்பது என்பது என் அகங்காரத்தின் வெளிப்பாடாக மட்டுமே இருக்கும்—நான் எவ்வளவு வாசிக்கிறேன் என்பதைக் காட்டுவதாக மட்டுமே இருக்கும் என்று நினைத்தேன். எனவே தமிழ் சூழலுக்கு ஏதோ ஒரு வகையில் பங்களிக்கும் என்று நான் நினைத்த கட்டுரைகளை மட்டுமே மொழிபெயர்க்கத் தொடங்கினேன். 

மதுபாலின் கதைகள் போன்ற சில ஆக்கங்கள் ஜெயமோகனின் தேர்வு; விஷ்ணுபுரம் விழாவுக்காக கேட்டுக்கொண்டதன் பெயரில் மொழிபெயர்த்தேன். நான் மொழிபெயர்த்த புனைகதைகளும் அவை மட்டும்தான். பொதுவாக, புனைவு அல்லாத கட்டுரைகளை நானே தேர்ந்தெடுத்தேன். உதாரணமாக, பி.கே. பாலகிருஷ்ணனின் இலக்கியக் கட்டுரைகளில் சிலவற்றை நான் மொழிபெயர்த்தேன். அவரது மலையாளக் கலாச்சார விமர்சனக் கட்டுரைகள், தமிழ்ச்சூழலுக்கு எந்த அளவு பொருத்தமானது   என்று எனக்குத் சந்தேகமாக இருந்ததால் அவற்றை மொழிபெயர்க்க வேண்டாம் என்று முடிவு செய்தேன்.

மேலும் என் மொழிபெயர்ப்பு தமிழில் மிக கச்சிதமான உரைநடையில் இருக்க வேண்டும் என்ற எனது விழைவை பற்றியும் யோசிக்க ஆரம்பித்தேன்.

அந்த விழைவால் மொழியாக்கத்தை தொடர்ந்து செம்மைப்படுத்திக்கொண்டே இருக்கவேண்டும் என்ற நிர்பந்தத்தை எனக்கு நானே விதித்துக்கொண்டிருக்கிறேன்.

மொழி: உங்கள் திருப்திக்கு ஏற்ப ஒரு கட்டுரையை மொழிபெயர்க்க எவ்வளவு நேரம் எடுக்கும்?

மணவாளன்: ஆரம்பத்தில் எனக்கு ஒரு வாரம் முதல் பத்து நாட்கள் வரை எடுக்கும். நான் தினமும் அதில் வேலை செய்து முதல் வரைவை விரைவாக முடிப்பேன். அதை என் நண்பரும் சக மொழிபெயர்ப்பாளருமான பாரிக்கு அனுப்புவேன். அதே நேரத்தில் அதைத் தொடர்ந்து திருத்துவேன். இப்போது திரும்பிப் பார்க்கும்போது, நான் மூன்று நாட்களுக்கு மேல் அதில் செலவிட்டிருக்கக் கூடாது என்று நினைக்கிறேன். இலக்கிய வாசகர் மீது அடிப்படை நம்பிக்கை இருந்தால், அதை அவ்வளவு திருத்த வேண்டியதில்லை. சிறுபிழைகளை மீறும் கற்பனை அவர்களிடம் உள்ளது. மேலும், எனது ஆரம்பகால மொழிபெயர்ப்புகளைப் திரும்ப எடுத்துப் பார்க்கும் போதெல்லாம், அத்தனை திருத்தங்களுக்குப் பிறகும் அதில் பிழைகள் உள்ளதைக் காண்கிறேன். இப்போதெல்லாம், 10-12 பக்கக் கட்டுரையை மொழிபெயர்க்க சுமார் மூன்று நாட்கள் எடுத்துக்கொள்கிறேன்.

மொழி: புனைவையும் அபுனைவையும் மொழியாக்கம் செய்ய வெவ்வேறு உத்திகளை பயன்படுத்துவதுண்டா?

எழுத்தாளர் – கவிஞர் கல்பற்றா நாராயணன்

மணவாளன்: நான் தேர்ந்தெடுத்த ஆசிரியர்கள்—பி.கே.பாலகிருஷ்ணனோ, கல்பற்றா நாராயணனனோ, கே.சி. நாராயணனோ ஆகட்டும்—அபுனைவை எழுதும்போது புனைவுமொழி போன்ற உரைநடையை பயன்படுத்துகிறார்கள். அவர்களின் கட்டுரைகள் புனைகதை போல இலக்கியத்தன்மை கொண்டவை. நான் மொழிபெயர்த்த ஒரே தூய புனைவாக்கம் மதுபாலின் கதைகள். கல்பற்றாவின் சில கவிதைகளை நான் மொழிபெயர்த்துள்ளேன், ஆனால் அந்த மொழிபெயர்ப்பில் திருப்தி அடையாததால் அதை வெளியிடவில்லை. 

கவிதை என்பது வேறெந்த இலக்கிய வகையைக் காட்டிலும் தூய படைப்பாற்றலின் களம் என்று இன்று நான் உணர்கிறேன். உதாரணமாக, டி.பி. ராஜீவனின் காதல் கவிதைகளில் சிலவற்றை மொழிபெயர்த்துள்ளேன். அதிலும் எனக்கு திருப்தி இல்லை. கவிதையை மொழிபெயர்ப்பது ஒரு மொழிபெயர்ப்பாளருக்கு மிகவும் சவாலான பணி என்று நான் உணர்கிறேன். சொற்த்தேர்வு முதல் எழுத்து நடை வரை. கவிதையின் பாணி, கவிஞரின் நடை ஆகியவற்றில் ஒருவர் எவ்வளவு சுதந்திரம் எடுத்துக் கொள்ள முடியும் என்பது குறித்து எனக்கு இன்னும் கேள்விகள் உள்ளன. தனிப்பட்ட முறையில், இந்த சவாலை எதிர்கொள்வதுதான் இப்போது எனக்கு மிகவும் உவப்பாக உள்ளது. அல்லது கல்பற்றாவின் கவிதை போன்ற உரைநடையை மொழிபெயர்க்கும் சவால். அப்படியில்லாமல், ஒரு கட்டுரையில் என்னதான் நுட்பமான புதிய சிந்தனை இருந்தாலும், அதன் மொழிநடையில் பெரிய சவால் இல்லையென்றால், அதை மொழிபெயர்க்க எனக்கு அவ்வளவு உற்சாகமில்லை.

மொழி: மலையாளமும் தமிழும் நெருங்கிய மொழிகள். இந்த அம்சம் மொழிபெயர்க்கும்போது உங்களுக்கு உதவுகிறதா? 

மணவாளன்: ஆம், கண்டிப்பாக. இரண்டு மொழிகளும் பழந்தமிழில் வேர்கொண்டதாகக் கருதப்படுகின்றன (சில மலையாள அறிஞர்கள் இந்தக் கருதுகோளை ஏற்பதில்லை). இரண்டு மொழிகளுக்கும் பொதுவான சொற்கள் உள்ளன. சில சொற்கள் அவற்றின் முன்னொட்டு அல்லது பின்னொட்டு ஒலிகளில் மட்டுமே மாறுபடுகின்றன. உதாரணமாக, தமிழ்ச் சொற்களான நாற்று, நாவல், நண்டு, நாண் போன்றவை மலையாளத்தில் ஞாற்று, ஞாவல், ஞண்டு, ஞாண் ஆகின்றன. தமிழில் மரகதம் மலையாளத்தில் மரதகமாக மாறுகிறது. இதுபோன்ற நூறு சொற்களாவது என்னால் நினைவுகூற முடியும். இவை சமஸ்கிருத தாக்கமில்லாத மலையாளச் சொற்கள். மேலும், சில பழமையான தமிழ்ச் சொற்கள் நவீன தமிழில் பயன்படுத்தப்படாவிட்டாலும் மலையாளத்தில் இன்னும் பயன்படுத்தப்படுகின்றன. அங்கணம், கவிடி, வாற்று, இடவழி, போன்றவை. நாஞ்சில்நாடன், சுந்தர ராமசாமி, ஜெயமோகன் போன்ற குமரி கலாச்சாரத்தில் வேரூன்றிய எழுத்தாளர்களின் படைப்புகளில் இயல்பாகவே அதிக மலையாளச் சொற்கள் உள்ளன. நான் மலையாளத்தைக் கற்கத் தொடங்குவதற்கு முன்பே அந்தப் படைப்புகளைப் படித்திருந்தேன். அவை என் நனவிலியில் இருந்தன, எனவே மொழிபெயர்ப்பில் சமமான சொற்களைக் கண்டடைவதற்கு அதிக முயற்சி தேவைப்படவில்லை.

ஆனால், சில விஷயங்கள் மலையாளத்திற்கு தனித்துவமானவை. உதாரணம், செயப்படுபொருள் இல்லாமல் வாக்கியங்களை உருவாக்குவது. கல்பற்றா அதை நிறைய செய்கிறார். மலையாளத்தில் இது போன்ற குறுக்குவழிகள் நிறைய உள்ளன. ஒருவேளை அம்மொழியிலுள்ள சமஸ்கிருத செல்வாக்கு காரணமாக இருக்கலாம். மேலும் மலையாள வாக்கியங்களுக்கு ஓர் அழகான ‘ரைம்’ உள்ளது. கல்பற்றா தனது உரைநடையில், மிகவும் படைப்பூக்கத்துடன் அதை அதிகம் பயன்படுத்துகிறார். அது மொழிபெயர்ப்பில் தொலைந்து போகிறது. நாம் அதற்கு இணையான தமிழ் ‘ரைமிங்’ சொற்களைக் கண்டுபிடிக்க முயற்சி செய்யலாம், ஆனால் உரைநடை செயற்கையாக தொனிக்கக்கூடும். மேலும், தமிழை விட மலையாளத்தில் அதிக கூட்டுச் சொற்கள் உள்ளன.

தமிழில் மொழிபெயர்க்கும்போது, மொழிபெயர்ப்பாளர்கள் இந்த விஷயங்களைச் சிறப்பாகக் கையாள தங்கள் நுண்ணுணர்வை பயன்படுத்த வேண்டும். சம்ஸ்கிருதத்தின் செல்வாக்குடைய சில தேய்வழக்குகள் மலையாளத்தில் உள்ளன. உதாரணமாக, அவர்கள் இப்போதும் அலங்காரமான பெயரடைகளை பயன்படுத்துகிறார்கள். அதை நாம் அப்படியே தமிழில் மொழிபெயர்க்கக் கூடாது. சில பெயரடைகளை வெட்டித்தான் ஆகவேண்டும். மொழிபெயர்ப்பாளர் இவ்வளவு சுதந்திரம் எடுக்கலாமா என்று ஒருவர் கேட்கலாம். நான் அதை நியாயப்படுத்தும் விதம் என்னவென்றால், பி.கே. பாலகிருஷ்ணன் தன் கட்டுரையில் தேய்வழக்குகளை பிரயோகிக்கவில்லை. ஆகவே மொழியாக்கமும் தேய்வழக்குத் தொனியுடன் தோன்றக்கூடாது.

மொழி: உண்மைதான். மேலும், அவ்வெழுத்தாளரின் தனித்துவமான நடையை இழந்துவிடக் கூடாது என்பதிலும் ஒரு மொழிபெயர்ப்பாளர் விழிப்புடன் இருக்கவேண்டும் அல்லவா?

மணவாளன்: நிச்சயமாக. மீண்டும் பி.கே. பாலகிருஷ்ணனை உதாரணமாக எடுத்துக் கொண்டால், அவர் தனது மலையாளக் கட்டுரைகளில் ஆங்கில வார்த்தைகளை தாராளமாகப் பயன்படுத்துகிறார். அது அவருடைய ஆளுமையின் தனித்தன்மையை  உணர்த்தக்கூடிய ஆங்கிலம். எனது மொழிபெயர்ப்புகளை இணையத்தில் வெளியிட்ட போது நான் அந்த தனித்துவத்தை பாதுகாத்தேன். 

ஆனால் அதை ஒரு புத்தகமாக வெளியிடும் சமயத்தில், பிழைதிருத்துனர் மற்றும் வெளியீட்டாளரிடம் விவாதித்தபோது இடையிடையே உள்ள ஆங்கிலச் சொற்கள் மொழிபெயர்ப்பின் வாசிப்பனுபவத்தை பாதிக்கிறது என்பதை உணரமுடிந்தது. எனவே, அவற்றை தமிழ் வார்த்தைகளாக மாற்ற முடிவு செய்தேன். பி.கே.மலையாளச்சொல்லுக்கு “ironist” என்பதற்குப் பதிலாக “முரண்நகையாளர்” என்று சொல்வதை வாசிக்கையில் இப்போதும் என் காதுக்கு விசித்திரமாக இருக்கிறது. முரண்நகையாளர் என்ற சொல் ஏதோ  அதிகாரப் பதவி போல தொனிக்கிறது (சிரிப்பு). அந்தச் சொல்லை பயன்படுத்தியதில் எனக்கு திருப்தி இல்லை. ஆனால் அந்தச் சிக்கலை எப்படி சரிசெய்வது என்றும் எனக்குத் தெரியவில்லை.

மொழி: ஆமாம். ஒரு சொல் நவீனமாக ஒலிக்கிறதா பழமையாக ஒலிக்கிறதா என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும் அல்லவா. சரி, உங்களுக்கு தமிழிலிருந்து மலையாளத்துக்கு மொழிபெயர்க்கும் திட்டம் உள்ளதா?

மணவாளன்: முன்பு வெண்முரசு நாவல்தொடரில் சில பகுதிகளை மலையாளத்திற்கு மொழிபெயர்க்க எண்ணம் இருந்தது. அப்போது கே.ஜி. சங்கர பிள்ளைக்கு அனுப்ப வேண்டிய ஒரு கடிதத்தை தமிழிலிருந்து மலையாளத்திற்கு மொழிபெயர்க்கும் வாய்ப்பு வந்தது. நான் அதை முயற்சித்தபோதுதான் ஒருவர் தன் தாய்மொழி அல்லாத மொழியில் மொழிபெயர்ப்பது அவ்வளவு எளிதல்ல என்பதை உணர்ந்தேன். ஏனென்றால் அது மிகவும் போதப்பூர்வமான செயல்பாடாக மாறிவிடுகிறது. உதாரணமாக, வார்த்தைத் தேர்வுகள். நாம் மிகத்துல்லியமான ஓர் மொழியாக்கத்தை உருவாக்கலாம், ஆனால் அது உயிர்ப்புள்ளதாக இருக்காது. அதுவே என்னுடைய இன்றைய எண்ணம். ஒருவேளை அது என்னுடைய தனிப்பட்ட தடையாக இருக்கலாம்.

மொழி: ஆனால் அதற்கான தேவை இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா?

கவிஞர் பி. ராமன்

மணவாளன்: நிச்சயமாக. மலையாள வாசகர்களிடம் தமிழ் இலக்கிய உலகின் சாராம்சமான விஷயங்கள் சென்று சேரவே இல்லை என்றுதான் தோன்றுகிறது. ஆற்றூர் ரவிவர்மா அவர் காலத்தில் முக்கியமான சில தமிழ்ப் படைப்புகளை மொழிபெயர்த்தார். இப்போது கவிஞர் பி.ராமன் அதை செய்கிறார். ஆனால் இன்னும் நிறைய தமிழ் இலக்கியவாதிகளின் படைப்புகள் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்படாமலேயே இருக்கிறது. உதாரணமாக, சில மலையாள வாசகர்களும் எழுத்தாளர்களும் கூட தாங்கள் எந்த தமிழ்ப் படைப்புகளைப் படிக்க வேண்டும் என்று என்னிடம் கேட்டிருக்கிறார்கள். எனவே தமிழ்-மலையாள மொழிபெயர்ப்புகளுக்கான ஓர் உள்ளார்ந்த தேவை உள்ளது.

மொழி: “ராக் தர்பாரி” நாவல் பற்றிப் பேசினோம். முன்பு “பிரதம் பிரதிசுருதி” (முதல் சபதம்) நாவலைப் பற்றியும் பேசியிருக்கிறோம். இப்படைப்புகள் ஆங்கிலம் அல்லாத இந்திய மொழிகளுக்கிடையே பணிபுரியும் மொழிபெயர்ப்பாளர்களால் நேரடியாக மொழியாக்கம் செய்யப்பட்டன. தமிழுக்கு அப்படி அநேக படைப்புகள் வந்ததுண்டு. ஆனால் இன்று இது கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது இந்திய மொழிகளுக்கு இடையேயான மொழிபெயர்ப்புகள் ஆங்கிலத்தை பாலமாகக் கொண்டே அதிகம் நிகழ்கின்றன என்ற மனப்பதிவு எங்களுக்கு உள்ளது. சமீபத்தில், மலையாள-தமிழ் மொழிபெயர்ப்பாளர் நிர்மால்யா அவர்களுடன் பேசும்போது, ஒரு பிரபல தமிழ் நாவலை மலையாளத்தில் மொழிபெயர்க்க ஆங்கில மொழிபெயர்ப்பு பாலமாகப் பயன்படுத்தப்பட்டது என்றும், அதன் விளைவு அவ்வளவு ருசிகரமாக இல்லை என்றும் குறிப்பிட்டார். இந்த போக்கைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இந்த நிலை மாற என்ன செய்யலாம்?

மணவாளன்: நான் ஆங்கில மொழிபெயர்ப்பு வழியாக மொழிபெயர்க்கப்பட்ட இந்திய பிராந்திய மொழி நாவல் எதையும் வாசித்ததில்லை. ஆனால், ஆங்கில மொழிபெயர்ப்பு வழியாக அல்லாமல் நேரடியாக மூல மொழியிலிருந்து இன்னொரு பிராந்திய மொழியின் மொழிபெயர்ப்புதான் இன்னும் படைப்பூக்கம்கொண்டதாக இருக்கும் என்பது என் மனப்பதிவு. அதனால் நமக்கு இந்திய பிராந்திய மொழிகளிலிருந்து இன்னும் அதிகமான மொழிபெயர்ப்பாளர்கள் தேவை, என்று எனக்கு தோன்றுகிறது. அவர்கள் இயல்பாகவே வெளிப்பட வேண்டும். மொழிபெயர்ப்புகள் வழியாக மட்டுமே தங்கள் தாய்மொழி அல்லாத மொழியில் இயல்பாகவே ஆர்வம் தூண்டப்பெற்ற இலக்கிய வாசகர்களை நான் அறிவேன். அப்படி எனக்கு கன்னட இலக்கியத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட ஒரு நண்பர் இருக்கிறார். அந்த ஆர்வம் ஒரு கலாச்சார ஆர்வமாகவும், அவர்களின் மொழியைக் கற்றுக்கொள்வதில் ஆர்வமாகவும் விரிவடைகிறது. அப்படி இன்னொரு மொழியை எளிதாகக் கற்றுக்கொள்வதற்கான வழிகள் அல்லது பட்டறைகள் இருந்தால் உதவியாக இருக்கும். இன்னொரு மொழி கற்கையில் புதிய எழுத்துருவை கற்றுக்கொள்வது ஒரு தடை தான். தனிப்பட்ட முறையில் என்னால் அதில் படைப்பூக்க அம்சங்களை கண்டடைய முடிந்தாலும், எழுத்துருக்களை கற்பதென்பது பெரும்பாலும் இயந்திரத்தனமான செயல் தான். அந்தக் கட்டத்தை ஒருவர் கடக்க முடிந்தால் இன்னொரு மொழிக்குள் விரைவாக புக முடியும்.

மொழி: மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்பவர்களில் நீங்கள் விரும்பும் மொழிபெயர்ப்பாளர்கள் யார்?  

மொழி பெயர்ப்பாளர் நிர்மால்யா

மணவாளன்: மலையாளத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ஒருசில புனைவு மொழிபெயர்ப்புகளை மட்டுமே நான் படித்திருக்கிறேன். அவற்றில் பல குளச்சல் யூசுப்பின் மொழிபெயர்ப்புகள். பஷீரின் பேச்சுவழக்கை அவர் நன்றாகப் புரிந்துகொண்டதாக நான் நினைக்கிறேன். நிர்மால்யா மணி மொழிபெயர்ப்பில் மதுபாலின் புனைகதைகளை வாசித்திருக்கிறேன். மொழிபெயர்ப்பாளர் வலிந்தோ, அறியாமலோ உருவாக்கும் உறுத்தக்கூடிய சொல்லாட்சிகள் இல்லாத, மிக துல்லியமான மொழிபெயர்ப்பு எனக்கு பிரமிப்பை அளித்தது. யூமா வாசுகியையும் எனக்குப் பிடிக்கும். “கசாகிண்டே இதிகாசம்” நாவலில் ஆசிரியர் ஓ.வி.விஜயன் மலையாளம், பாலக்காடு தமிழ் மற்றும் இஸ்லாமிய மொழியின் கலவை கொண்ட நடையை கையாண்டிருப்பார், அதே நடையை யூமா வாசுகி தன் தமிழ் மொழியாக்கத்தில் நிகழ்த்தியுள்ளார். அப்படிப்பட்ட முயற்சிகள் மீது எனக்கு பெருமதிப்பு உள்ளது. ஜெயமோகன் நிறைய நவீன மலையாளக்கவிஞர்களை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். ”நெடுஞ்சாலை புத்தர்” என்ற மலையாளக்கவிதைகளின் மொழிபெயர்ப்பு வழியாகத்தான் என் கவிதைரசனையே உருவாகி வந்தது. 

மொழி: தமிழுக்கும் மலையாளத்துக்கும் உள்ள வேறுபாடுகள் மற்றும் ஒற்றுமைகள் பற்றி நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். நீங்கள் தமிழில் சொந்த படைப்புகளை எழுத விரும்புவதையும் நாங்கள் அறிவோம். உங்கள் மொழியாக்க செயல்பாடுகள் உங்கள் சொந்த எழுத்து முயற்சிகளை பாதிப்பதாக நினைக்கிறீர்களா? அப்படியானால், எப்படி?

மணவாளன்: ஆம். மொழிபெயர்ப்பின் மூலம்தான் எனது சொற்களஞ்சியம் விரிவடைந்துள்ளது என்று என்னால் சொல்ல முடியும். நான் மரபிலக்கியங்களை அதிகம் படித்ததில்லை. நவீன இலக்கியங்களை வாசித்து வளர்ந்தவன் நான். எனது சொற்களஞ்சியம் எல்லைக்குட்பட்டது. ஆகவே மலையாளத்திலிருந்து நான் மொழியாக்கம் செய்யும் சொற்கள் என் மொழியை வளப்படுத்துவதாகத்தான் நினைக்கிறேன். மேலும், மொழியாக்கம் என் எழுத்துநடையையும் செழுமையாக்குகிறது. நான் மொழிபெயர்க்கும் எழுத்தாளர்களால் அறியாமலேயே பாதிக்கப்படுகிறேன். அந்த பாதிப்பில் சாதகம் பாதகம் இரண்டும் உள்ளது. நமது அகமொழி நாம் மொழிபெயர்க்கும் எழுத்தாளர்களின் நடையை நாம் அறியாமலேயே பிரதிபலிக்கும். அது நூறு சதவீதம் நம்முடையதாக இல்லாமல் இருக்கலாம் — அது ஒரு தடைதான்.

மொழி:  சிறந்த உரைநடையைத்தான்  மொழிபெயர்க்க நாம் தேர்ந்தெடுக்கிறோம். ஆனால் எழுத்தாளர்களாக உருவாக முயற்சிக்கையில் அது ஒருவகையான தாழ்வு மனப்பான்மையை உருவாக்கவும் கூடியது அல்லவா? நம் உரைநடை ஒரு நகலாக வெளிப்படுகிறது.  நாம் வெளிப்படுத்த விரும்புவதை நம் சொந்த மொழியில் வெளிப்படுத்த போராடுகிறோம். நீங்கள் அதை எதிர்கொண்டிருக்கிறீர்களா?

மணவாளன்: ஆமாம், நிறைய. நான் எழுதும்போது ஆழ்மனதில் என் எழுத்தை கல்பற்றாவின் எழுத்தோடு ஒப்பிட்டுப் பார்ப்பதை உணர்கிறேன். கல்பற்றாவின் எழுத்து செதுக்கப்பட்ட உரைநடை. நீங்கள் அதைப் பின்பற்ற விரும்பாமல் இருக்கலாம், ஆனால் அது உங்கள் சொந்த எழுத்தை சுயவிமர்சனத்தோடு அணுக வைக்கிறது. ஓரளவு சுயவிமர்சனம் இல்லாவிட்டால் முழுக்கமுழுக்க முன்னோடியின் நகலெடுக்கப்பட்ட உரைநடையாக நம் சொந்த எழுத்து ஆகவும் வாய்ப்புண்டு. எனவே இரு பக்கத்திலும் சிக்கல்கள் உள்ளன (சிரிக்கிறார்). ஆனால் இது முன்னோடிகளை வாசித்து எழுதவரும் எந்த இளம் எழுத்தாளரும் எதிர்கொள்ளும் சவால் என்று நினைக்கிறேன். அதாவது, அவர்களே அறியாமல் முன்னோடிகளை பின்பற்றுவது. அல்லது தங்கள் நடையை முன்னோடிகளின் நடையுடன் ஒப்பிட்டுக்கொண்டே இருப்பது. மொழிபெயர்ப்பாளர்கள் இந்தப் பிரச்சினையை இன்னும் தீவிரத்துடன் எதிர்கொள்கிறோம்  என்று தோன்றுகிறது.  இன்னொன்றையும் சொல்ல வேண்டும். முன்னோடி எழுத்தாளர்களின் மொழிநடை நம்மை பாதிப்பது (inspiration) வேறு, ஆனால்  அந்த நடையை நகல்செய்வது, imitation வேறு நானே மேலே குறிப்பிட்டது நாம் அபோதபூர்வமாக செய்யும் நகல்செய்தலை மட்டும்தான். 

ஆனால் முன்னோடி எழுத்தாளர்களின் பாதிப்பு (inspiration) இல்லாமல் நல்ல எழுத்தாளர் உருவாகமுடியாது. சிலசமயம் Insipirationனுக்கும், imitationக்குமான எல்லைக்கோடு, படைக்கும் கணங்களில் அவ்வளவு துலக்கமாக இல்லாமலாகிவிடுவதுதான் கலையில் உள்ள விந்தைகளில் ஒன்று.  

ஆனால் மொழிபெயர்ப்பாளராகத் தொடங்கி எழுத்தாளராக வெளிப்பட விரும்பும் நபருக்கென்று சில சாதகங்களும் உள்ளன. கல்பற்றா நாராயணனின் இரண்டாம் நாவலான “எவிடமிவிடம்” என்ற ஆக்கத்தை மலையாளத்தில் வாசித்திருக்கிறேன். மலையாள மொழியின் அனைத்து சாத்தியக்கூறுகளையும் விரிவுபடுத்தும் ஆக்கம் அது, மொழிபெயர்க்க மிகவும் சவாலானது. அப்படிப்பட்ட ஓர் ஆக்கத்தை மொழியாக்கம் செய்யும்போது நமது அகமொழி இயல்பாகவே விரிவடையும்.

மொழி: உங்களுக்கிருக்கும் மலையாள கலாச்சார ஈடுபாட்டைப் பற்றி மேலும் சற்று உரையாடலாம். கதகளி மீதான உங்கள் ஆர்வத்தைப் பார்த்து நாங்கள் உண்மையிலேயே பிரமித்துப் போகிறோம். நவீன இலக்கியத்திற்குள் செல்வது ஒரு விஷயம். அது இன்னொருவரின் கருத்துக்குள், மொழிநடைக்குள் செல்வதன் நீட்சி. ஆனால் ஒரு புதிய கலைக்குள் செல்வது நம்மை இன்னொரு கலாச்சாரத்தின் வேர்களுக்குள், அவர்களின் மனநிலைகளுக்குள், மொழிக்குள் ஆழமாக உட்புகச் செய்யும் செயல்பாடு. கதகளியின் மீது உங்களுக்கு எப்படி இவ்வளவு தீவிரமான ஈர்ப்பு ஏற்பட்டது?

மணவாளன்: ஜெயமோகனின் “கலைக்கணம்” என்ற கட்டுரையிலிருந்து கதகளியின் முதல் சுவையை நான் பெற்றேன். மலையாள மொழியைக் கற்றுக்கொண்டு அம்மொழி இலக்கியங்களைப் படித்த பிறகு, நான் என்னையே கேட்டுக்கொண்டேன் — அடுத்தது என்ன? நவீன மலையாள இலக்கியம் பற்றிய விமர்சனப் பார்வை என்னிடம் இருந்தது. எனவே மொழியைக் கற்றுக்கொண்ட பிறகு என்னிடம் ஆயுதங்கள் இருந்தும் போர் எதுவும் கண்ணில் படாதது போல உணர்ந்தேன் (சிரிப்பு).

மலையாள  யதார்த்தவாத நாவல்கள்  எனக்கு அவ்வளவு தனித்துவமானதாகத் தெரியவில்லை, ஏனென்றால் அவற்றைவிட தமிழில் உள்ள யதார்த்தவாத, நவீனத்துவ நாவல்கள் இலக்கியத்தன்மை கொண்டவை என்று என் வாசிப்பில் உணர்ந்தேன். அப்போதுதான் கதகளி பற்றிய இந்தக் கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. பின்னர் நான் யூடியூப்பில் கதகளி பார்க்கத் தொடங்கினேன், ஆனால் எனக்கு அதிகம் புரியவில்லை. கோவை புத்தக விழாவில் (தமிழ் எழுத்தாளர்) அஜிதனைச் சந்தித்தபோது, அவர் கோட்டக்கல் உற்சவத்தில் எட்டு நாட்கள் தொடர்ச்சியான கதகளி நிகழ்ச்சிகளைப் பார்த்துவிட்டுத் திரும்பியிருந்தார். தனது அனுபவங்களை அவர் சொல்லும்போது நான் அந்தக் கலைவடிவத்தால் ஈர்க்கப்பட்டேன். பின்னர், நானே நேரடி நிகழ்ச்சிகளைத் தேடிச் சென்றேன். அதன் சிக்கலான கைமுத்திரைகள் அப்போதும் எனக்குப் புரியவில்லை என்றாலும் நான் அதை விரும்பத் தொடங்கியிருந்தேன்.

அதைப் பார்க்க அடுத்த வாய்ப்பு எப்போது வரும் என்று நீங்கள் எதிர்பார்க்கத் தொடங்குவீர்கள். எரணாகுளம் மாவட்டம் பாணாவள்ளி என்ற ஊரில் நடந்த ஒரு கதகளி நிகழ்ச்சியில் தற்செயலாக அஜிதனை மீண்டும் சந்தித்தேன். இரண்டு நாட்களில் அஜிதன் எனக்கு முத்திரைகள், அழகியல் மற்றும் கலை வடிவத்தின் அடிப்படைகளை அறிமுகம் செய்தார். பின்னர் நான் யூடியூப்பில் இருந்து கற்றுக்கொண்டேன். நான் ஒவ்வொரு முத்திரையையும் நிறுத்தி அதைப் பார்ப்பேன்—எளிமையானவற்றையும் கூட. உங்களுக்கு மலையாளம் தெரிந்தால் நீங்கள் கற்றுக்கொள்ளக்கூடிய கதகளி கலைஞர்கள் உள்ளனர். உதாரணமாக, பீஷப்பள்ளி ராஜீவன். கதகளி முத்திரைகள் மற்றும் கதகளியின் ஒட்டுமொத்த அழகியல் பற்றிய அறிமுகப் பட்டறைகளை அவர் நடத்தியுள்ளார். இணையத்தில் கிடைத்தவற்றிலிருந்து நான் கற்றுக்கொண்டேன். அதன் பிறகு கதகளியின் நுணுக்கங்களை அடையாளம் கண்டு அவதானிக்க ஆரம்பித்தேன். அதே போல் ஒரே கதாபாத்திரத்தை அபிநயிக்கும் வெவ்வேறு கலைஞர்களுக்கு இடையிலான அழகியல் வேறுபாடுகளையும் என்னால் அடையாளம் காணமுடிந்தது.

நான் அந்த பண்பாடுக்குள் செல்லசெல்ல, ஆசுர பாரம்பரியத்தின் சுவடுகள் அவர்களின் பண்பாட்டில் ஆழமாக வேரூன்றியிருக்கிறதா என்று சிந்திக்கத் தொடங்கினேன். உதாரணமாக, துரியோதனனுக்கும் சகுனிக்கும் ஒரு கோயில் இருக்கிறது; அவர்களின் வழிபாட்டு முறைகளில் ஆசுர கூறுகள் உள்ளன. செண்டை அசுரவாத்தியம் என்று அழைக்கப்படுகிறது. மத்தளம் (மிருதங்கம்) தேவவாத்தியம் என்று அழைக்கப்படுகிறது. நவீன மலையாளியில் உள்ள ஆசுர அம்சங்களைப்பற்றி நான் யோசித்துக்கொண்டிருந்தேன். நிச்சயமாக, இது எல்லாம் என் கற்பனைதான்—அவை முற்றிலும் அடிப்படையற்றதாக இருக்கலாம். ஆனால் கதகளியைப் பார்க்கும்போது,  நாம் உருவாக்கியிருக்கும் ஒழுங்கை குழந்தை மிக இயல்பாக குலைப்பதுபோல அது திடீரென்று செவ்வியல்தன்மையிலிருந்து மீறுவதை நம்மால் உணரமுடியும். மிகவும் எதிர்பாராத விதத்தில். அதேபோல் கதகளி நுட்பத்திலிருந்து நுட்பத்துக்கு நகர்ந்துகொண்டிருக்கும்போதே திடீரென்று அசாதாரணமான ஆற்றலில் வெடிப்புபோல நாட்டார்தன்மை வெளிப்படும்.  உதாரணமாக, நாட்டார்தன்மை நோக்கிச் செல்வதை காணலாம். கதகளியின் அழகியலில் ஒரு பக்கம் பீபத்சம் நிறைந்திருக்கும், இன்னொருபக்கம் அங்கதத்தன்மை கொண்ட ஆட்டக்கதைகளில் நாட்டார்தன்மை நிறைந்திருக்கும். சமகால மலையாள இலக்கியம் என்னை ஈர்க்காததால், நான் என் கவனத்தை கதகளி, அதன் ஆட்டகதைகள், மற்றும் கூடியாட்டம் மீது திருப்பினேன்.

”கல்யாண சௌகந்திகம்” – கரல்மன்னாவில் மொழி குழுவினர் பார்த்த கதகளி நிகழ்விலிருந்து சில புகைப்படங்கள்

மொழி: உங்களுக்கு சிறுவயது முதலே நிகழ்த்துக் கலைகளில் ஆர்வம் இருந்ததா? பரதநாட்டியம், கூத்து அல்லது கர்நாடக சங்கீதத்தில் அறிமுகம் இருந்ததா? 

மணவாளன்: இல்லை. என் சிறுவயதில் தமிழகத்தின் எந்த நிகழ்த்துக்கலையும் எனக்கு அறிமுகமாகவில்லை.  என் அப்பாவுக்கு கர்நாடக இசையில் கொஞ்சம் ரசனை இருந்தது. அவர் திருவையாறு இசை விழாவை தொலைக்காட்சியில் பார்ப்பார். ஆனால் அதை எனக்கு அறிமுகப்படுத்தவில்லை. கேரள கலாச்சாரத்தைப் பற்றி ஆர்வம் இல்லையென்றால் கதகளியிலும் எனக்கு ஆர்வம் இருந்திருக்காது என்று தான் நினைக்கிறேன். கதகளி என்ற கலை வடிவத்தை புரிந்துகொண்டால் கேரள கலாசாரத்தை மேலும் நெருங்கி அணுக முடியும் என்ற உந்துதல் தான் என்னை கதகளி நோக்கிச் செலுத்தியது. ஆகவே கதகளியை ஒரு செவ்வியல் நிகழ்த்துகலை என்று நான் அணுகவில்லை, மாறாக கேரள பண்பாடை மேலும் நுணுகி அறிய ஒரு வாசலாகவே எண்ணினேன்.

கதகளி விமர்சகர்களிடம் ஒரு தனித்துவமான ‘மலையாள’ குணம் இருப்பதை பற்றி கே.சி. நாராயணனை நாம் சந்தித்தபோது அவர் கூறியது நினைவிருக்கலாம்.  உதாரணமாக, ஒரு கதகளி பாடகரின் சமீபத்திய உரையில் இடம்பெற்ற ஒரு கருத்து இது: “இன்று கதகளி பார்வையாளர்கள் தாங்கள் காணும் கதகளி நிகழ்வுகளை பற்றி நிறைய எழுதுகிறார்கள். நான் அவற்றை ஆர்வமாகப் படிக்கிறேன். நிகழ்வு நடக்கும் இடத்தை, கோயில் சூழலை, வரலாற்றை, அங்கு நடைபெறும் திருவிழாக்களை பிரமாதமாக விவரிக்கிறார்கள். கதகளி அணியறை துல்லியமாக வர்ணிக்கப்படுகிறது. ஆட்டத்தின் நுணுக்கங்களை எழுதுவதைவிடமேடையில் ஆடும் கலைஞர்களை பற்றி, அவர்களுடைய தனிவாழ்க்கை, குலமுறைகள், ஆசான்கள், கலைமரபு பற்றியெல்லாம் விரிவாக எழுதுகிறார்கள். இதெல்லாம் ஆராய்ந்து சரிபார்த்து பிழையில்லாமல் எழுத எவ்வளவு உழைப்பு தேவைப்படும்! அந்த அயராத உழைப்பை நான் பாராட்டுகிறேன்.” கதகளி சார்ந்து எழுதப்படும் விவரணைத்தன்மைகொண்ட, கலைத்தன்மையில்லாத, எந்த மதிப்பீடும் இல்லாத, பெயர்பட்டியல் போன்ற எழுத்துகள் மீதான காட்டமான விமர்சனம் இது. மலையாளிகள் போகிற போக்கில் தங்கள் கிண்டலை வெளிப்படுத்துவதில் ஒரு வழிமுறையை கொண்டிருக்கிறார்கள்.  இது ஒரு பண்பாட்டுக் கூறு. கதகளி வழியாக இதை மேலும் அணுகிப் புரிந்துகொள்ள முடிகிறது.

எழுத்தாளர்-விமர்சகர் கே.சி. நாராயணனுடன் அழகிய மணவாளன்

மொழி: நீங்கள் மலையாளத்தன்மை என்று சொல்லும்போது ஒரு புறவயமான விமர்சன நோக்கு இருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் நீங்கள் கதகளி பார்த்த அனுபவக் கட்டுரையை படித்தபோது (மாயக்கொந்தளிப்பு), அந்த நிகழ்ச்சி உங்கள் மீது மிகவும் தனிப்பட்ட ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியதை உணரமுடிந்தது.

மணவாளன்: அந்த அம்சம் அந்தக் கலைவடிவத்தில் இயல்பாகவே உள்ளது. நாம் விமர்சன ரீதியாகப் பார்க்க விரும்பினாலும், அது உங்களை வசீகரிக்கும் ஆற்றல் கொண்டது. ஆம், எனக்குள் இந்த ஆர்வம் எப்படித் உருவானது என்று நான் புறவயமாக ஆராய முயற்சிக்கும்போது என்னால் இந்த விஷயங்களை விமர்சனப்பூர்வமாக அணுக முடிகிறது. ஆனால் கதகளி பார்க்கும் அக்கணத்தில், என் புலன்களும் என் சொந்த ரசனையும் தான் என்னை வழிநடத்துகின்றன. சில கலைஞர்களை நான் வழிபடுகிறேன்.  

மொழி: நீங்கள் வழிபடும் கலைஞர்கள் சிலரின் பெயர்களை பகிர முடியுமா? 

மணவாளன்: புருஷ வேஷம் (ஆண் கதாபாத்திரங்கள்) அணிபவர்களில், பச்ச வேஷம் என்ற சாத்வீக கதாபாத்திரங்களை ஆடுவதில் கலாமண்டலம் கோபியையும், கத்தி வேஷத்தில் கோட்டக்கல் கேசவன் குண்டலாயரையும் பிடிக்கும். அனுமனாக அபிநயிக்கும் சதனம் பாசி பிடிக்கும். பெண் வேடங்களில் நடிப்பவர்களில் எனக்கு கலாமண்டலம் சண்முகன், சம்பகர விஜயகுமார் இருவரையும்  பிடிக்கும்.

மொழி: இது பொதுவான கேள்விதான், இருந்தாலும்—மரபுக்கலைசார் ரசனையைப் பொறுத்தவரை தமிழர்களுடன் ஒப்பிடும்போது மலையாளிகளுக்கு மட்டுமே தனித்துவமானது என்று நீங்கள் கருதக்கூடிய ஏதாவது இருக்கிறதா?

மணவாளன்: ம்ம்… ஒரு மலையாளிக்கு மரபுக்கலைகளில் அறிமுகம் இல்லையென்றாலும், அவரால் அதை ஓரளவு உள்வாங்கிக் கொள்ள முடியும் என்று சொல்லலாம். அதேசமயம், தமிழர்கள் தங்களால் அடையாளம் காண முடியாத எதுவானாலும் அதை விமர்சிக்கும் மனப்பாங்கு கொண்டவர்கள். மலையாளிகளிலும் அந்த விமர்சன மனம் உள்ளது. ஆனால் அவர்கள் விமர்சிப்பதற்கு முன் அது என்ன என்று முதலில் புரிந்துகொள்ள முயற்சி செய்கிறார்கள். 

மேலும், மலையாள திரைப்பட இசைக்கு மரபிசையின் சுவை உண்டு. அது கற்பனாவாதம் சார்ந்ததும் கூட. அந்த அம்சமும் உதவக்கூடும். தமிழ் பரப்புக் கலாச்சாரத்தில் அவ்வளவு நுண்மைகள் இல்லை என்று நான் நினைக்கிறேன். மலையாளிகள் தங்கள் கலைகளில் கற்பனாவாதத் தன்மை கொண்டவர்கள், ஆனால் நிஜ வாழ்க்கையில் நடைமுறையாளர்கள். நடைமுறை வாழ்க்கையில் தமிழர்களாகிய நமக்கு மிகைப்படுத்தப்பட்ட உணர்ச்சிகள் உள்ளன. ஆனால் நாம் கலைகளுடன் கொண்டுள்ள உறவில் கற்பனாவாத அம்சம் குறைவாகவே உள்ளது. 

மொழி: திரும்ப மொழியாக்கத்துக்கு வருவோம். மொழியாக்கம் செய்து இங்கு யாரும் பொருளீட்ட முடியாது என்பது தான் நிலை. ஆங்கிலத்திலாவது ஒரு சிறிய தொகையை எதிர்பார்க்கலாம். ஆங்கிலமல்லாத மொழிகளுக்கு மொழியாக்கம் செய்பவர்கள் அதை கிட்டத்தட்ட இலவசமாகத்தான் செய்கின்றனர். ஆகவே நிச்சயமாக ஒருவர் பணமீட்டுவதைக் குறிக்கோளாகக் கொண்டு இங்கே மொழிபெயர்ப்பு செய்வதில்லை. ஆனால் தற்போதைய  சூழலில் எழுத்துக்கு உரிய வெகுமதி அளிக்கப்படவேண்டும், மொழியாக்கம் செய்பவர்களுக்கு உரிய சன்மானம் அளிக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகள் தமிழிலும் உருவாகி வருவதைக் காணலாம். எந்த உழைப்பையும் அதற்கு உரிய ஊதியமில்லாமல் செய்யக்கூடாது என்ற கருத்து இன்று பரவலாகிக்கொண்டிருக்கிறது. இது பற்றிய உங்கள் கருத்து என்ன? மொழியாக்கத்தில் ஈடுபட உங்களை உந்தும் சக்தி என்ன?

”எழுத்து” சிற்றிதழ் ஆசிரியர் சி.சு செல்லப்பா

மணவாளன்: ஜெயமோகனின் கட்டுரைகளைப் படிக்கும்போது, தமிழ் இலக்கியச் சூழல் ஒருபோதும் பண வெகுமதிகளை மையமாகக் கொண்டிருக்கவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். சி.சு.செல்லப்பாவிலிருந்து தொடங்கி இன்று வரை. தமிழ் இலக்கியம் என்பது இலட்சியவாதத்தில் வேரூன்றிய இலாப கணக்கற்ற ஓர் இயக்கம். வாசகர் எண்ணிக்கை, பணம், இரண்டுமே மிகக் குறைவு. இந்த அடிப்படையை புரிந்துகொண்டால், எந்த வகையான இலக்கியச் செயல்பாட்டில் ஈடுபட்டாலும் கசப்பையும் ஏமாற்றத்தையும் தவிர்க்கலாம். கடந்த சில மாதங்களாக அகழ் இணைய இதழில் மொழிபெயர்ப்பு கட்டுரைகளுக்கும், சொந்த புனைவு/கட்டுரைகளுக்கு சன்மானம் அளிக்கப்படுகிறது. இது இதழின் நிறுவனரின் முயற்சியால், அவருக்கு சரியான ஸ்பான்ஸர்ஷிப் கிடைத்ததால் அளிக்கமுடிகிறது என்று நினைக்கிறேன். தமிழில் நிறைய இலக்கிய, பண்பாட்டு மின்னிதழ்களுக்கு அப்படி ஸ்பான்சர்ஷிப் அமைவதில்லை. ‘மொழி’ அமைப்பில் நீங்களும் மொழிபெயர்ப்பிற்கான சன்மானம் அளிக்கிறீர்கள். ஆனால் நிறைய இதழ் நடத்துபவர்கள் அப்படியான பொருளாதார நிலையிலும் இல்லை என்றே தோன்றுகிறது. மேலும் தமிழில் நிறைய இலக்கிய மின்னிதழ்கள் வாசகர்கள் இலவசமாகவே வாசிக்கும்படியே இருக்கின்றன. அச்சிதழ்போல சந்தாவோ, விலையோ இல்லை. (சிற்றிதழ்கள் அச்சு இதழாக இருந்தபோது  நடத்துபவர்கள் சொந்த பணத்தை போட்டு நடத்தவேண்டிய நிலையே தமிழில் இருந்தது) யோசித்துப்பார்த்தால் தமிழ்ச்சூழலில் தொடர்ச்சியாக இலக்கிய, பண்பாட்டு இதழ்களை நடத்துபவர்கள், உங்களைப்போல மொழிபெயர்ப்பு வழியாக இந்தியாவின் பிராந்திய மொழிகளின் இலக்கியத்தன்மையை அடையாளப்படுத்துபவர்கள், உரையாடுபவர்கள் எந்த லாபநோக்கமும் இல்லாமல், தங்கள் சொந்த உழைப்பில், சொந்த படைப்பூக்கம் சார்ந்த நேரத்தையும் விட்டுக்கொடுத்து இதை செய்கிறீர்கள். எழுத்தாளர்களுடன், வாசகர்களுடனும்  உரையாடுகிறீர்கள். இந்த சூழலில் இதழ் நடத்துபவர்கள் இந்த இலட்சியவாத அம்சத்துடன் செயல்படுவதால், பொதுவாக கலைஞர்கள்/மொழிபெயர்ப்பாளர்களும் அவர்களிடமிருந்து தங்கள் படைப்பிற்கான  சன்மானத்தை  எதிர்ப்பார்ப்பதில்லை. தமிழ் சிற்றதழ்சூழலே அப்படித்தான் இயங்கியது. 

நான் தொடர்ந்து மொழிபெயர்ப்பதற்கான உந்துசக்தியாக நண்பர்களின், வாசகர்களின் எதிர்வினைகள் இருந்தது.  மொழிபெயர்க்கத் தொடங்கும் போது ஒரு புத்தகத்தை வெளியிடுவது பற்றி நான் நினைக்கவே இல்லை. நான் கட்டுரைகளை மொழிபெயர்த்து நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டிருந்தேன். மேலும், ஆரம்பத்திலிருந்தே இலக்கிய வாசகர்களிடமிருந்து எனக்கு எதிர்வினைகள் கிடைத்தன. எனவே எனது படைப்பு அங்கீகரிக்கப்படவில்லை என்று நான் ஒருபோதும் உணர்ந்ததில்லை. 

மேலும், மூல மொழியில் கூட விமர்சனம் என்ற எழுத்து வகைமை மற்ற வகை எழுத்துக்களை விட குறைவான வாசகர்களைக் கொண்டுள்ளது. எனவே நான் விமர்சனக்கட்டுரைகளை மொழிபெயர்த்தபோது, இயல்பாகவே, வாசகர்கள் மிகவும் குறைவாகவே இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்புடன் தான் இருந்தேன். ஆச்சரியப்படும் விதமாக, வாசகர்கள் அவ்வப்போது என்னைத் தொடர்புகொண்டு தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டனர். சமீபத்தில், எனது மொழிபெயர்ப்புப் படைப்பின் விற்பனைக்காக விஷ்ணுபுரம் பதிப்பகத்திடமிருந்து எனது பங்கைப் பெற்றேன். தமிழில் இலக்கியப் படைப்புகளின் விற்பனையோடு ஒப்பிடும் போது, இலக்கிய விமர்சனம் குறித்த ஒரு நூல் என்ற வகையில் எனக்குக் கிடைத்த ராயல்டியில் நான் மிகவும் திருப்தி அடைகிறேன். ஆங்கிலத்தில் மேலும் பரவலான வாசகர் தளம் உள்ளது. இதை ஆங்கிலச் சூழலுடன் ஒப்பிட முடியாது. 

மேலும், நான் பி.கே.பாலகிருஷ்ணனின் இலக்கியவிமர்சன நூலை புத்தகமாக ஆக்குவதற்குமுன் முன் அந்த கட்டுரைகளை குறிப்பிட்ட இடைவெளியில் மொழிபெயர்த்து ஜெயமோகனுக்கு அனுப்பிக்கொண்டிருந்தேன். அதை அவர் தன் இணையதளத்தில் வெளியிட்டார், அது பரவலான வாசககவனம் கிடைக்க உதவியது. மேலும் நூலுக்கு நான் கேட்டுக்கொண்டதால் முன்னுரை எழுதினார். விஷ்ணுபுரம் பதிப்பகம் நூல் வெளியீட்டை விழாவாக ஏற்பாடு செய்திருந்தார்கள். எழுத்தாளர் விஷால்ராஜா என் விமர்சனக்கட்டுரைகளை வாசித்தபின்பு பி.கே.பாலகிருஷ்ணனின் ஆளுமையும், அவரின் விமர்சனங்களை முன்வைக்கும்முறையும்  தனக்கு மிகவும் உவப்பாகவும், பிரமிப்பாகவும் இருப்பதாக என்னிடம் தன் வாசிப்பனுபவத்தை பகிர்ந்துகொண்டார். அவர் தமிழில் குறிப்பிடத்தக்க இலக்கிய விமர்சனக்கட்டுரைகளை எழுதியவர் என்பதால் என் மொழிபெயர்ப்பு சரியான நபர்களை சென்றடைகிறது என்ற நிறைவுணர்ச்சியை அடைய முடிந்தது. பி.கே.பாலகிருஷ்ணனின் விமர்சனக்கட்டுரைகள் புத்தகமாக ஆனபின் எனது மொழியாக்க நூலை அறிமுகம் செய்யும் நோக்கில் கவிஞர் ஷங்கர ராமசுப்பிரமணியன் மற்றும் எழுத்தாளர் லட்சுமி சரவணகுமார் கட்டுரைகளை எழுதியிருக்கிறார்கள்.  எழுத்தாளர் அகரமுதல்வன் எனது புத்தகத்துக்காக சென்னையில் ஒரு வாசகர் சந்திப்பை ஏற்பாடு செய்தார்.  உண்மையிலேயே நான் தொடர்ந்து மொழிபெயர்ப்பதற்கான உந்துதல் என இவற்றையெல்லாம்  சொல்லமுடியும். 

மொழி: இப்போது என்ன மொழியாக்கம் செய்துகொண்டிருக்கிறீர்கள்?

மணவாளன்: கல்பற்றா [நாராயணன்] எழுதிய கட்டுரைகளை மொழிபெயர்த்து வருகிறேன். தமிழில் சொந்தமாக எழுதுவதில் கவனம் செலுத்தி வருவதால், இப்போதெல்லாம் மொழிபெயர்ப்பது குறைந்து வருகிறது. மேலும், தமிழில் ஏற்கனவே நிறைய மலையாள நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதால் புதிய மொழியாக்கங்கள் செய்வதற்கான வாய்ப்பு குறைந்துவிட்டதாக உணர்கிறேன்—மொழிபெயர்ப்புகள் நன்றாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் சரி! மாறாக, தமிழிலிருந்து மலையாளத்துக்கு அதிக மொழியாக்கங்கள் நடப்பதில்லை.

எழுத்தாளர் மொழிபெயர்ப்பாளர் அழகிய மணவாளனுடன் ஒரு நேர்காணல்

error: Feel free to share the article link. Please contact Mozhi for rights to copy any content.